You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எனது மகன் கொல்லப்பட்ட போது மகிழ்ச்சி ஆரவாரம்': பாதிரியாரால் மனைவி, 6 குழந்தைகளை இழந்தவர் கண்ணீர்
- எழுதியவர், டோர்கஸ் வஞ்சிரு
- பதவி, பிபிசி நியூஸ், மெலிந்தி
கென்யாவின் கடற்கரை நகரான மெலிந்தியில் குட் நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச் நடத்திவந்த மத போதகர் பால் மெக்கின்ஸி, இயேசுவை சந்திக்க வேண்டுமென்றால் பட்டினி கிடந்து உயிரிழக்கவேண்டும் என தம்மைப் பின்பற்றுபவர்களிடம் போதித்திருக்கிறார். அவரது பேச்சைக் கேட்டு ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பால் மெக்கென்சியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
2023-ம் ஆண்டு ஜுன் மாதம் உலகம் அழிந்து விடும் என மதபோதகர் மெக்கின்சி பேசியதாகவும், அதை நம்பி தன்னுடைய மனைவியும், 6 குழந்தைகளும் பட்டினி கிடந்து உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் ஸ்டீபன் விட்டி என்ற 45 வயது நபர் தெரிவித்துள்ளார்.
பொரித்த ரொட்டிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவரும் விட்டி, மங்கலான ஒரு புகைப்படத்தைக் காட்டி, அதில் உள்ள தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை யாரும் பார்த்தார்களா என கேட்டுவந்திருக்கிறார்.
கென்யாவின் தென்கிழக்கில் உள்ள கடற்கரை நகரமான மெலிந்தியில் வசித்து வரும் விட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குழந்தைகளுடன் மனைவியும் காணாமல் போனதிலிருந்து இந்த படத்தைக் காட்டி ஒவ்வொருவரிடமும் விசாரித்து வந்திருக்கிறார்.
மத போதகர் மெக்கின்சியைப் பின்பற்றியவர்கள், நோன்பிருப்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஷகாஹோலா காட்டுப்பகுதியிலும் மனைவியையும், குழந்தைகளையும் அவர் தேடியிருக்கிறார்.
விட்டியின் மனைவி பஹதி ஜோன் கர்ப்பமாக இருந்த போது கடந்த ஆண்டு, 9 வயதான ஹெலென் கரிமி, 7 வயதான சாமுவேல் கிர்மில், 3 வயதான ஜேகோப் கிமதி, ஒன்றரை வயதான லில்லியன் கதும்பி மற்றும் 7 மாத குழந்தையான ஏஞ்சலினா கதும்பி ஆகிய ஆறு குழந்தைகளுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறியிருக்கிறார்.
அதன் பின்னர் அவரது மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையும் உயிரிழந்து விட்டதாக விட்டிக்கு தற்போது தெரியவந்துள்ளது.
மதபோதகர் மெக்கின்சியை கடந்த 2015-ம் ஆணடு முதல் பஹதி ஜோன் மிக ஆழமாக நம்பிவந்துள்ளார். ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டு அவர் ஷகாஹோலா காட்டுக்குச் சென்றதுடன் அதன் பின் அப்பகுதிக்குச் செல்வதும், திரும்பி வருவதுமாக இருந்துள்ளார்.
மனைவியும், குழந்தைகளும் காணாமல் போனது குறித்து ஏற்கெனவே பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த வித பயனும் இல்லாத நிலையில், ஷகாஹோலா காட்டிலிருந்து தப்பி தற்போது போலீசாரின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளிடம் விசாரித்த பின்தான் தனது மனைவியும், குழந்தைகளும் உயிரிழந்ததை விட்டி தெரிந்துகொண்டுள்ளார்.
"நான் காட்டிய புகைப்படத்தை பார்த்து அவர்களை இந்தக் குழந்தைகளை அடையாளம் கண்டிருக்கவேண்டும். ஜேகோப் மற்றும் லில்லியன் ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்களும் எங்கு புதைக்கப்பட்டன என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது", கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸ்டீபன் விட்டி அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
"என்னுடைய குழந்தைகளை இனியும் நான் தேடிக்கொண்டிருக்கக் கூடாது என எனக்குச் சொல்லப்பட்டது. அனைத்து குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். காலம் கடந்து அவர்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்"
அவர்களின் உடல்கள் அந்தக் காட்டுக்குள் புதைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
ஷகாஹோலா என்ற ஸ்வாஹிலி மொழிச் சொல்லுக்கு "கவலைகளை அகற்றும் இடம்" என சுமாராக பொருள் கொள்ளலாம்.
கடற்கரை கௌன்டியான கிலிஃபியில் உள்ள சகாமா ரான்ச் என்ற மேய்ச்சல் நிலப்பரப்பில் இந்தக் காடு சுமார் 50,000 ஏக்கர் (20,000 ஹெக்டேர்) பரப்பளவில் பரவிக்கிடக்கிறது.
மதபோதகர் மெக்கின்சிக்கு சொந்தமாக இப்பகுதியில் 800 ஏக்கர் நிலம் இருப்பதாகத் தெரியவருகிறது.
மெலிந்தி நகரிலிருந்து பிரதான சாலைக்குப் பின் இருக்கும் மேடுபள்ளங்கள் நிறைந்த தடத்தில் சுமார் இரண்டு மணிநேரப் பயணத்தில் இந்த காட்டுக்குள் நுழையும் இடத்தை அடையலாம்.
முட்புதர்கள், அடர்ந்த செடிகள் அதிகமாக இருப்பதால் ஷகாஹோலாவுக்குள் பயணம் மேற்கொள்வது ஒரு கடினமான அனுபவமாகவே இருக்கிறது. ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் காணப்படும் நிலையில் எப்போதாவது இப்பகுதியில் யானை நடமாட்டம் காணப்படுகிறது.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றால் இணைய இணைப்போ, செல்ஃபோன் இணைப்போ கிடைக்காது.
ஆனால் இந்த இடத்தில் தான் ஒரு புனித உலகை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இப்பகுதியில் உள்ள நிலங்கள் சிறுசிறு கிராமங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்துக்கும் பைபிளில் இடம்பெற்றுள்ள சொற்களைக் கொண்டே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போதகர் மெக்கின்சியை பின்பற்றியவர்களில் சிலர் ஜுடியாவில் வறிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். மற்றும் சிலர் பெத்லஹேமில் வாழ்ந்த நிலையில் நாசரேத் என்ற இடமும் இப்பகுதியில் உள்ளதைக் காணமுடிந்தது. "எனது மனைவியும், குழந்தைகளும் ஜெருசலேமில் வாழ்ந்து உயிரிழந்ததாக எனக்குத் தெரியவந்தது", என விட்டி தெரிவிக்கிறார். ஆனால் அதிகாரிகள் அடையாளப்படுத்திய இடங்களில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் தொடங்கிய பின் விட்டி அங்கே போகமுடியவில்லை.
ஷகாஹோலா காட்டுக்குள் புலனாய்வு செய்த அதிகாரிகள் 65 இடங்களில் உடல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொரு இடத்திலும் ஆழமற்ற குழிகளுக்குள் உடல்கள் அருகருகே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
"குழந்தைகள் முதலில் உயிரிழந்தனர்"
அங்கே புதைக்கப்பட்டிருந்த உடல்களைத் தோண்டி எடுத்தவர்களுக்கு, அந்த உடல்கள் எந்த வித கண்ணியமும் இன்றிக் கையாளப்பட்டது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதுவரை இது போல் 110 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், காடு முழுவதும் தேடினால் உடல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேதப் பரிசோதனைகள் இனிமேல் தான் மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில், அனைவரும் பட்டினி கிடந்து உயிரை விட்டுள்ளனர் என்பதை விட சிலர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், மூச்சடக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மற்றும் சிலர் மோசமான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாரும், விசாரணை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
குட்நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் உறுப்பினர்களாக இருந்தவர்களை அந்த சர்ச்சின் போதனைகளை ஏற்கும் வகையில் பட்டினி கிடக்க வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டுக்குள் பட்டினி கிடந்த போது அங்கிருந்து வெளியேற முயன்றவர்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாக, ஷகாஹோலா காட்டிலிருந்து தப்பிவந்த டிடஸ் கட்டானா என்பவர் தெரிவிக்கிறார்.
உலகம் அழிந்துவிடும் என போதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் எப்படி உயிரிழக்கவேண்டும் என்பதற்கு கூட சில நடைமுறைகள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
"குழந்தைகள் முதலில் உயிரிழந்தனர். அதன் பின் திருமணமாகாதவர்கள் உயிரிழந்தனர். அதன் பின் தாய்மார்களும், அதற்கடுத்து மூத்தவர்களும் உயிரிழக்கும் வரிசையில் இருந்தனர்."
மதபோதகர்களும், தேவாலய தலைவர்களும் இறுதியில் உயிரிழக்கவேண்டும் என இந்த நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
அவர் எப்படி இந்த சர்ச்சில் உறுப்பினர் ஆனார் என கட்டனாவிடம் கேட்டபோது, மதபோதகர் மிக்கின்சி ஒரு "கவர்ச்சியான போதகராக, கடவுளின் சொற்களை அப்படியே சொல்பவர்" என நினைத்ததாக கூறுகிறார்.
மேலும், "தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நிலம் விற்பனை செய்வதையும் மிக்கென்சி வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. நான் அவரிடம் 15 ஏக்கர் நிலம் வாங்கினேன். ஆனால், அவருடைய போதனை வித்தியாசமாக இருந்ததால் நான் அங்கிருந்து வெளியேறினேன்."
இதற்கிடையே, தனது மனைவிக்கு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரே ஒரு முறை தான் தாய்ப்பால் கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அக்குழந்தை மூச்சடக்கிக் கொலை செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டதாகவும் விட்டி கூறுகிறார்.
"எனது மகன் கொல்லப்பட்ட போது அவர்கள் அனைவரும் வேதனையடையாமல், இயேசுவை நேரில் காண விண்ணுலகம் சென்றுவிட்டதற்காக கைதட்டி ஆரவாரம் செய்தனர்," என்றும் விட்டி கூறுகிறார்.
சர்ச்சில் மதபோதகர் மிக்கின்சி உபதேசித்த கருத்துக்களின் வீடியோவை பிபிசி ஆய்வு செய்து பார்த்ததில், பொதுமக்கள் உயிரிழக்க நேரடியாக அவர் அறிவுறுத்தவில்லை என்பதும், ஒவ்வொருவரும் தமது உயிர் உள்பட நமக்கு மிகவும் பிடித்தவற்றை தியாகம் செய்யவேண்டும் என அடிக்கடி பேசியிருந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த வார இறுதியில் கென்யா செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட விவரங்களின் படி, மதபோதகர் மிக்கின்சியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய 227 சிறுவர்கள் உள்பட 410 பேர் காணாமல் போயிருந்ததாக அறியப்படுகிறது.
அவர்களின் உறவினர்கள் தற்போது மெலிந்தியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களை சூழ்ந்துகொண்டு அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்குமா என கவலையுடன் தேடிவருகின்றனர்.
"அம்மாவை நேரில் சந்தித்து வற்புறுத்தியும் வரவில்லை "
அவர்களில் ஒருவர் பேட்ரிக் கும்பாவு.
அவருடைய தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். அவரைத் தேடி ஷகாஹோலா காட்டுக்குச் சென்ற போது அவர் அங்கே இருந்தார். ஆனால் அந்த இடத்தை விட்டு அழைத்துப் போக அவரை கும்பாவுவால் வற்புறுத்த முடியவில்லை.
"வீட்டுக்கு வர அவர் ஒத்துக்கொள்வது குறித்து நான் கேட்டேன். அவர் இயேசுவைக் காணும் ஒரு முக்கியப் பணியை நிறைவேற்றும் நோக்கத்தில் அங்கே இருந்ததாக என்னிடம் தெரிவித்தார்," என கூறும் கும்பாவு, தமது தாயைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என காத்துக்கிடக்கும் நூற்றுக்கணக்கான மக்களுடன் கலந்து ஏக்கத்துடன் தவித்து வருகிறார்.
"தாயை இழந்து விட்ட மனவேதனையுடன் ஷகாஹோலாவிலிருந்து 2021-இல் நான் வெளியேறினேன்"
தமக்குத் தேவையான தகவல்களைப் பெற 270 கிலோ மீட்டர் (170 மைல்) தொலைவில் உள்ள மெக்கூனி கௌன்ட்டியிலிருந்து அவர் வந்திருந்தார். கென்யா மட்டுமில்லாமல், தான்சானியா, உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்களும் மெலிந்தியில் குவிந்திருந்தனர்.
யாமிராவிலிருந்து 800 கிலோ மீட்டர் பயணம் செய்து மெலிந்திக்கு வந்துள்ள கிறிஸ்டின் யான்சாமா, அவரது சகோதரி, மைத்துனர், மற்றும் உறவினர்கள் ஆறு பேரைப் பற்றிய தகவல்களை அறிய காத்துக்கொண்டிருக்கிறார். அவரது சகோதரியின் குழந்தைகள் - மருமகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர். ஆனால் மற்றவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என யான்சாமா நம்புகிறார்.
"எனது சகோதரி எங்கிருந்தாலும், அவர் உயிரிழப்பதற்கு முன்பாக உதவி செய்தாகவேண்டும். அவர் ஏற்கெனவே 22 நாட்கள் பட்டினி கிடந்ததாக நான் அறிகிறேன்," என தமக்கு கடைசியாக வந்த குறுஞ்செய்தியை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்.
இணையம் மற்றும் தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ள மதபோதகர் மெக்கின்சியின் உபதேசங்கள் அனைத்தும் ஆழ்மனதைத் தொட்டு பிறரின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளன. பிற விஷயங்களுடன், முறையான கல்வி, நவீன மருத்துவமுறைகளுக்கு எதிரான விஷயங்களை அவர் உபதேசித்துள்ளார்.
ஏறத்தாள இருபது ஆண்டுகள் செயல்பட்ட குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே மூடிவிட்டதாக அவர் கூறினாலும், அந்த சர்ச்சில் அவர் ஆற்றிய உரைகள் சில இன்னும் இணையதளங்களில் இருக்கின்றன. அவை அந்த சர்ச்சை மூடிய பின் பதிவு செய்யப்பட்டவை போல் தோன்றுகின்றன.
அவரை மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றிய சிலர், தங்களது கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்தனர், வேலைகைளை விட்டு வெளியேறினர், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுத்து விட்டனர்.
போதகர் மெக்கின்சியைப் பின்பற்றியவர்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள், உயர் பொறுப்பில் இருந்த காவல் துறை அதிகாரி போன்றவர்கள் தம்மிடம் ஆலோசனை பெற்றதாகவும், அவர்கள் நம்பிக்கையிழந்து, ஆறுதல் தேடும் நிலையில் - உதவிகள் தேவைப்படும் இடத்தில் இருந்ததாகவும் மனநல ஆலோசனை வழங்கும் உளவியலாளர் டாக்டர் சூசன் கிடாவு கூறுகிறார்.
ஷகாஹோலா காட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது போதகர் மெக்கின்சியும், அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் அவர்களை பட்டினி போட்டு, மூச்சடைத்துக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மார்ச் மாதமே மெக்கின்சி கைது செய்யப்பட்டார். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், கொலை, பொதுப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்த விஷயம் குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முழுமையாக விசாரிக்கப்படும் என கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ உறுதியளித்துள்ள போதிலும், அதிகாரிகள் முன் கடினமான கேள்விகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு குற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதையே நீண்ட காலம் அவர்களால் சட்டப்படி உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது.
"இது போன்ற அதிகாரிகளை மன்னிக்கக்கூடாது," என, இந்த உயிரிழப்புக்கள் குறித்து எச்சரிக்கை மணி அடித்த ஹாக்கி ஆப்பிரிக்கா என்ற அமைப்பின் இயக்குனர் ஹுசைன் காலித் தெரிவிக்கிறார்.
"இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்."
மெலிந்தியின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க தவறியதே இது போன்ற குற்றச் செயல் நடந்ததற்குக் காரணம் என ஸ்டீபன் விட்டி கூறுகிறார்.
"எனக்கு ஏற்கெனவே 45 வயதாகிறது. அவர்கள் உயிரிழந்ததை கேள்விப்பட்ட உடனே நானும் உயிரிழந்து விட்டதாக எண்ணினேன்."
உயிரிழந்த அவரது குழந்தைகளை அடையாளம் காண்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு அவரது டி.என்.ஏ.-வை அவர் வழங்கியுள்ளார். அவரது மனைவியும், குழந்தைகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட பின் தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் அவர் தவிப்பில் இருப்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்