You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறிய ஊனா தலித்துகள் - தீண்டாமை குறைந்திருக்கிறதா?
- எழுதியவர், ராக்ஸி காகடேகர் சாரா
- பதவி, பிபிசி குஜராத்தி
குஜராத் மாநிலம் ஊனாவில் உள்ள மோட்டா சமாதியாலாவைச் சேர்ந்த அறுபது வயதான பாலுபாய் சர்வையா, சிறு வயது முதலே, இறந்த கால்நடைகளின் தோலை உரித்து விற்று வந்தார். அவரது தந்தையும் இறந்த மாடுகளை கிராமத்திற்கு வெளியே இழுத்துச் சென்று, துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, தோலுரித்து, அதே தொழிலை இவரையும் செய்ய வைத்ததை அவர் நினைவு கூர்கிறார்.
ஆனால் அதே பாலுபாயின் மகன்கள் வஷ்ராம், முகேஷ் மற்றும் ரமேஷ் மற்றும் அவரது சகோதரரின் மகன் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு பசுப் பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். உயிருள்ள பசுக்களைக் கொன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபணமானது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலி நாடு முழுவதும் பரவியது. அந்தச் சம்பவத்திற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 26 ஏப்ரல் 2018 அன்று, அந்தக் குடும்பம் இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்தைத் தழுவியது.
குஜராத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மக்கள் பௌத்த மதத்தைத் தழுவி வருகின்றனர். சமீபத்தில் காந்திநகரில் மதமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 14 ஆயிரம் பேர் இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்துக்கு மாறினர்.
என்ன வித்தியாசம்?
2018 ஆம் ஆண்டில் வஷ்ராம்பாயின் குடும்பத்துக்கு இந்தத் துக்கச் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் பௌத்த மதத்திற்கு மாறிய அவரது குடும்பத்தினர் மற்றும் பிற தலித்துகளின் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதைக் கண்டறிய பிபிசி முயன்றது.
மோட்டா சமாதியாலா கிராமத்தில் சர்வையா குடும்பம் உட்பட பிற தலித்துகளுக்கு எதிராகப் பாகுபாடு நிலவிய காலம் ஒன்று இருந்தது. சில சமயம் அங்கன்வாடி சகோதரிகள் குழந்தைகளைத் தங்கள் மையத்திற்கு அழைத்துச் செல்ல வருவதில்லை. உயர் சாதியினர் மத்தியில் அவர்கள் அமர முடியாது. கடைகளிலும் அவர்களுக்கென்று தனி வரிசை பராமரிக்கப்பட்டது.
இப்போது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டதா?
‘நாங்கள் மாறினோம், எங்கள் கிராமம் மாறியது’
பிபிசி குஜராத்தியிடம் பேசிய வஷ்ராம் சர்வையா, "முக்கியமாக, எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் மனநிலையும் மாறிவிட்டது. இப்போது நாங்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கிறோம். நாங்கள் கோவிலுக்குச் செல்வதில்லை, சடங்குகள் எதுவும் செய்வதில்லை. அதனால் எங்கள் செலவுகள் குறைந்துள்ளன." என்றார்.
ஒரு காலத்தில் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த வஷ்ராம்பாய், இப்போது நல்ல ஆடைகளை அணிந்து தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்.
“2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, கிராமத்தில் பாகுபாடு குறைந்தது. ஆனால் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. நான் கடைக்குச் செல்லும் போதெல்லாம், எங்கள் பணத்தைத் தொடும் முன்னர், தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வார்கள். தூரத்தில் இருந்து தான் மளிகைச் சாமான்களைக் கொடுப்பார்கள். இப்போது அது மாறிவிட்டது. இதுபோன்ற பழக்கத்தை எல்லோரும் விட்டுவிட்டார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த நடைமுறையை நோக்கிய மாற்றம் பெரும்பாலான மக்களிடம் ஏற்பட்டுள்ளது," என்கிறார் அவர்.
கிராமவாசிகளின் நடத்தையில் இந்த மாற்றம் தங்களின் மதமாற்றத்தால் மட்டும் ஏற்பட்டதன்று என்றும் வஷ்ராம்பாய் கூறுகிறார். ஏனென்றால், 2016ல் அவர் குடும்பத்துக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆனந்திபென் படேல், ராஹுல் காந்தி, மாயாவதி, ஷரத் பவார் போன்ற பெரிய தலைவர்கள் அவரைச் சந்திக்க வந்ததால், அந்த ஊர் மக்களின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கங்காட் கிராமம், வஷ்ராம்பாயின் கிராமமான மோட்டா சமாதியாலாவிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்திபாய் கட்டட வேலை செய்பவர். அவர் தனது தாய், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் 2018 ஆம் ஆண்டில் வஷ்ராமுடன் பௌத்த மதத்திற்கு மாறினார்.
பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அவரது வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவரது அனுபவங்கள் வஷ்ராம்பாயின் அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. .
“மதம் மாறிவிட்டால், எல்லாம் மாறிவிடுமா? கிராம மக்களுக்கு நாங்கள் அதே ஆட்கள் தான். இன்றும் ஊர் உயர் ஜாதியினர் எங்களை அவர்களுடன் உட்கார வைப்பதில்லை. எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தான் இடமளிக்கப்படுகிறது. நாங்கள் தலித்துகள் என்பது தொடர்ந்து நினைவுபடுத்தப்படுகிறது." என்கிறார் ஜயந்திபாய்.
குஜராத்தியும் பௌத்தமும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் சுமார் 30,000 பௌத்தர்கள் வாழ்கின்றனர். பௌத்தர்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள்.
சர்வதேச அமைப்பான பியூ ரிசர்ச் சென்டரின் 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் வாழும் மொத்த பௌத்தர்களில் 89 சதவீதம் பேர் பட்டியலினத்தவர். ஐந்து சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர், நான்கு சதவீதம் ஓபிசிகள், இரண்டு சதவீதம் பேர் மட்டுமே பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இருப்பினும், பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தனது நம்பிக்கை அதிகரித்ததாக ஜயந்திபாய் நம்புகிறார். 2014 முதல், அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்பும் வகையில் பொதுமக்களுக்கு புரொஜெக்டரில் படங்களைக் காட்டி வருகிறார். 2018க்குப் பிறகு, அவர் தனது பணியின் வேகத்தை அதிகரித்துள்ளார்.
"என்னிடம் மொத்தம் நான்கு புத்தகங்கள் உள்ளன, ஆனால் எனது மூன்று மகள்களும் இப்போது மருத்துவம், பாரா மெடிக்கல், இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை படித்து வருகின்றனர். அம்பேத்கர் எங்களிடம் எதிர்பார்த்த கல்வியை நோக்கி எனது குடும்பமே திரும்பியுள்ளது" என்கிறார்.
அம்ரேலி மாவட்டத்தின் தாரி நகரில் வசிக்கும், காவல் துறையில் பணிபுரியும் நவல்பாயின் அனுபவங்கள் ஜயந்திபாயின் அனுபவங்களை ஒத்தே இருக்கின்றன. நவல்பாய் 2018 ஆம் ஆண்டு பௌத்த மதத்திற்கு மாறினார்.
“பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகும், எங்களைப் பற்றிய சமூக அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அரசு வேலைகளில் கூட சாதியவாதம் நிலவுவதாகவே தெரிகிறது. எனவே, பௌத்தத்தை ஏற்றுக்கொள்வதே பாகுபாடுகளுக்குத் தீர்வாக இருக்கும் என்று கருதுவது சரியல்ல." என்கிறார் அவர்.
‘பௌத்தத்திற்கு மாறியிருக்காவிட்டால் இவ்வளவு தூரம் கூட வந்திருக்க முடியாது’
ஜுனாகட்டின் ரெகரியா கிராமத்தில் வசிக்கும் மனிஷ்பாய் பர்மார் 2013-ம் ஆண்டு பௌத்த மதத்துக்கு மாறினார். பத்தாண்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிப் பேசுகையில், "சமூக ரீதியாக நான் கருத்து கூற மாட்டேன். ஆனால் என் குடும்பத்தைப் பொருத்தவரை, நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறோம், கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் திருவிழா வருகிறது. அவற்றிற்கு எந்தச் செலவும் இல்லை. இப்போது எனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதி எனது குழந்தைகளின் கல்விக்காகச் செல்கிறது." என்றார்.
மனிஷ்பாயின் நான்கு குழந்தைகளில் ஒரு மகன் எம்.எஸ்சி. ஒரு மகன் ராஜ்கோட்டில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஒரு மகன் பொறியாளராக நல்ல வேலையில் இருக்கிறான், நான்காவது மகன் இன்னும் கல்லூரியில் படித்து வருகிறான்.
"பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, எங்கள் குடும்பத்தின் முழு கவனமும் குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சிறந்த எதிர்காலத்தின் பக்கம் திரும்பியது. குழந்தைகளும் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர், அதன் காரணமாக இன்று இந்த விளைவு ஏற்பட்டுள்ளது." என்கிறார் அவர்.
அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், ஒருவேளை இன்று இந்த நிலையை எட்டியிருக்க முடியாது என்று அவர் நம்புகிறார்.
புதிய அடையாளம்
"சாதிவெறி ஒழிய வேண்டுமானால், தலித்துகள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டும். அந்த இடம்பெயர்வு அவர்களுக்குப் புதிய அடையாளத்தைத் தரும்" என்று அம்பேத்கர் கூறியிருந்தார்.
மே 31, 1936 இல், பாபாசாகேப், 'மஹார் சம்மேளனத்தில்' இடம்பெயர்வு பற்றிப் பேசுகையில், "பெயருக்காக மட்டும் இந்து மதத்திலிருந்து மாறினால், தலித்துகளின் அடையாளம் மாறாது, அவர்கள் தமது அடையாளத்தை மாற்ற விரும்பினால், தங்களது பழைய குடும்பப்பெயரை மாற்ற வேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்