You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேங்கைவயல்: மலம் மாதிரியை டி.என்.ஏ. பரிசோதனை செய்வது குற்றவாளியை அடையாளம் காட்டுமா?
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
புதுகோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது நிச்சயமாக திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்தான் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். இது தொடர்பான வழக்கை முதலில் தனிப்படை காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பையே காவல்துறையினர் குற்றவாளிகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு.
இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலம் மாதிரியை அடிப்படையாக வைத்து, வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 11பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் கூறி நீதிமன்றத்தை நாடியது சிபிசிஐடி. இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி வழக்கு நகர்ந்திருக்கிறது.
ஆனால் மலத்தை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது சரியான தீர்வாக இருக்காது என்றும், இந்த விசாரணை கண் துடைப்பாக மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார்.
உண்மையில் மலம் மாதிரிகளை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது பலன் அளிக்குமா? வேங்கைவயல் தொடர்பான வழக்கு விசாரணையில், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடும் சிக்கல் என்ன? இதுவரை இந்த வழக்கில் என்ன நடந்தது?
வேங்கைவயலில் என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் ஏறி பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பின் சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி நகர்ந்திருக்கிறது. முதலில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது வேங்கைவயலைச் சேர்ந்த மேலும் 119 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் எழும் குற்றச்சாட்டுகள் என்ன?
வேங்கைவயல் சம்பவத்தில், ஆரம்பம் முதலே விசாரணை சரியான வழிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உள்ளூர் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,
“கடந்த 26 டிசம்பர் 2022 அன்று குடிநீர் தொட்டியில் எடுக்கப்பட்ட பாலிதீன் கவரில் இருந்த மலத்தை தூய்மை பணியாளர் ஒருவர் காவேரி நகர் செல்லும் வழியில் ஒத்தக்கடை என்கிற இடத்தில் சாலை ஓரம் உள்ள குப்பைமேட்டில் வீசிவிட்டு சென்று இருக்கிறார்.இதனை தொடர்ந்து 30 டிசம்பர் 2022 அன்று இரவு 8.45 மணி அளவில் தலித் குடியிருப்புக்கு வந்த போலீசார் அந்த மலத்தை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது என்று விசாரித்து அதன் அடிப்படையில் அந்த குப்பை கிடங்கில் தேடி மலத்தை எடுத்து சென்றிருக்கின்றனர்.
இதைத்தான் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.மலத்தை யார் கொட்டி வைத்தார்கள் என்பது பிரச்சனையா? யாருடைய மலம் என்பது பிரச்சனையா? சரி மலத்தை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் யாருடையது என்று கண்டு பிடிக்க முடியுமா? அது துல்லியமானதா? பல்வேறு நிபுணர்கள் இது சாத்தியம் அல்லாத ஒன்று என்கின்றனர்” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், “டி.என்.ஏ.டெஸ்ட் எடுக்க வேண்டிய பட்டியலில் 11 பேரில் 9 பேர் தலித்துகள். உங்கள் விசாரணை பரிசோதனை எல்லாம் எங்கள் பக்கமே இருக்கிறதே? நாங்கள் யார் குற்றவாளி என்று கூறி விட்டோம் ஏன் அங்கு விசாரணை செய்யப்படவில்லை என்று தலித்துகள் கேட்டதற்கு உரிய பதில் இல்லை. யாருடைய மலம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எல்லோரையும் தானே விசாரிக்க வேண்டும், அதைவிட்டு விட்டு எங்களை மட்டும் ஏன் குறி வைக்கவேண்டும்? இதன் உள்நோக்கம் என்ன?
ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களைத்தான் குற்றவாளிகள் என்று சித்ரவதை செய்தனர். அதற்கு ஆதரவாக இருப்பது போல தற்போது இந்த டி.என்.ஏ. பரிசோதனையும் உள்ளது.
இதனை சுட்டி காட்டி கடந்த 24 ஏப்ரல் 2023 அன்று உயர் நீதி மன்றத்தில் தலித்துகள் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். எங்கே தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி தந்திரமாக நேற்று மேலும் 120 பேரினை டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்போகிறோம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.இதை ஏன் முதலில் செய்யவில்லை.” என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக எவிடென்ஸ் கதிரை தொடர்புகொண்டது பிபிசி தமிழ்.
அப்போது பேசிய அவர், “இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே தவறான வழியில் கையாளப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்ட மலத்தை அன்றே குப்பையில் போட்டுவிட்டதாக சொல்கிறார்கள். நான்கு நாட்களுக்கு பின்னர் குப்பையில் போடப்பட்ட மலத்தை தேடி எடுத்து தற்போது டிஎன்ஏ பரிசோதனை என்கிறார்கள். இதில் மலத்தின் மூலம் செய்யப்படும் டிஎன்ஏ பரிசோதனை பெரிதாக பயனளிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல் முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அடுத்த மாதம் 6ஆம் தேதிதான் அந்த விசாரணையே துவங்கவிருக்கிறது. கிட்டதட்ட 37நாட்கள் தாமதமாக விசாரணை துவங்குகிறது.
இதுவரை சிபிசிஐடி மேற்கொள்ளும் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை. இப்போது நீதிபதியிடம் நாங்கள் சரியான முறையில் விசாரணை செய்திருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே இவர்கள் தற்போது டிஎன்ஏ பரிசோதனையில் இறங்கியிருக்கிறார்கள். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடமே இவர்கள் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது முழுக்கமுழுக்க அதிகாரிகளுக்குள் நடைபெறும் ’ஈகோ’ பிரச்னை” என்று அவர் விவரிக்கிறார் .
“இந்த வழக்கு இதுவரை ஒரு சாதாரண கிரைம் சம்பவமாகவே கையாளப்பட்டு வருகிறது. ஆனால் இதில் இருக்கும் சாதிய பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வழக்கின் பின்னனி என்ன என்பதை தெளிவாக விசாரிக்காமல், இதை தலித்துக்கள்தான் செய்திருப்பார்கள் என்ற கண்ணோட்டத்திலேயே விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார் .
மலம் மாதிரிகளில் நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனை பலனளிக்குமா?
”மலம் மாதிரிகளை கொண்டு நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனைகள் முற்றிலும் பலனளிக்காது என்றும் சொல்ல முடியாது, முழுமையான பலன் அளிக்கும் என்றும் சொல்ல முடியாது. இது மிகவும் சிக்கலான ஒன்று” என கூறுகிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன்.
இவர் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” நம்முடைய டிஎன்ஏ மற்றும் டிஎன்ஏ பரிசோதனை குறித்தும் அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்துகொண்டால், இதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நமக்கு விளங்கும்.
டிஎன்ஏ அல்லது deoxyribonucleic acid என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான டிஎன்ஏ அமைப்பு இருக்கிறது. அதேசமயம் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரின் டிஎன்ஏ-வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
இதில் டிஎன்ஏ- வின் Code letters ஆக கருதப்படும் ATGC என்ற எழுத்துக்கள்தான் அடிப்படையானவை(Base pair). இது போல மற்ற எழுத்துக்களும் காணப்படும். இதனை sequencing என்று கூறுவோம். இந்த sequence-ல் காணப்படும் நுண்ணிய மாறுபாடுகளே ஒருவரில் இருந்து மற்றொருவரை வேறுபடுத்தி காட்டுகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் கிட்டதட்ட 3 பில்லியன் டிஎன்ஏ-கள் உள்ளன.
இப்போது அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மலத்தை வைத்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, அதன்மூலம் குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காண முயன்றால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்பதுதான் உண்மை” என்கிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “நம் உடலில் இருக்கும் தலைமுடி, நகம், எச்சில், ரத்தம் போன்ற பாகங்களில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும், மலத்தில் இருந்து பரிசோதனை மேற்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
மலம் என்பது நம் உடலினுடைய பாகம் அல்ல, அது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவு. அதில் 75சதவீதம் நீரும், 25 சதவீதம் திடக்கழிவாகவும் இருக்கும். இந்த கழிவில் 30 சதவீதம் பாக்டீரியாக்களும் இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் என்பது நாம் சாப்பிட்ட ஏதாவது ஒரு உணவுகளிலிருந்து கூட வெளியேறியிருக்கலாம். மற்றும் மலத்தில் இறந்து போன செல்களும் காணப்படும்.
எனவே இதனை அடிப்படையாக வைத்து, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும்போது அதில் தெளிவான முடிவுகள் கிடைக்காது. உதாரணமாக ஒருவரின் தலைமுடியை கொண்டு நாம் பரிசோதனை நடத்தும்போது அதில் குறிப்பிட்ட நபருடைய டிஎன்ஏ-தான் இது என்பதை நாம் மிக தெளிவாக சொல்ல முடியும். ஆனால் மலத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 25 - 50 சதவீதம் வரை இது இவராக இருக்கலாம் என்று மட்டுமே நம்மால் யூகிக்க முடியும். இது நிச்சயமாக இவர்தான் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியாது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு திருடனை நேரில் பார்த்து நாம் அடையாளம் காண்பதற்கும், அங்க அடையாளங்களை கொண்டு ஒரு உருவத்தை வரைந்து இப்படிதான் இவர் இருப்பார் என்று கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதுதான் இது” என்று விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர்.
”அதேபோல் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து எத்தனை நாட்களுக்குள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியம். சில வழக்குகளில் டிஎன்ஏ பரிசோதனைகள் நீண்ட நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த குறிப்பிட்ட மாதிரிகளில் இருக்கும் டிஎன்ஏ எந்தளவு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று கூற முடியாது.
ஆனால் வேங்கைவயல் போன்ற விவகாரங்களில், வேறு வழியே இல்லாதச் சூழலில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் என்றால் இதனை நாம் குறை கூறவும் முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்