You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பெண்ணின் பிணத்துடன் பாலியல் உறவு கொள்வதை தடுக்க கல்லறைக்கு கதவு" - வைரல் தகவலின் உண்மை என்ன?
- எழுதியவர், மொஹம்மத் சுஹைப்
- பதவி, பிபிசி உருது
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.
உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய நகரான ஹைதராபாத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, உறுதிப்படுத்தப்படாமல் இந்த தகவலை வெளியிட்டதற்காக அது பற்றிய செய்தியை வெளியிட்ட இணையதளங்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன.
இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, என்டிடிவி, வேர்ல்ட் இன் ஒன் நியூஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு ஊடக தளங்கள் இந்தச் செய்தியை அவற்றின் டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டிருந்தன.
இந்த பொய்ச்செய்தி பரவியது எப்படி?
இந்தத் தவறான தகவலை ஹாரிஸ் சுல்தான் என்ற ட்விட்டர் பயனாளர் முதலில் ட்வீட் செய்தார்.
ஆல்ட் நியூஸ் மூலம் உண்மையைச் சரிபார்த்த பிறகு, சுல்தான் தனது ட்வீட்டை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரினார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம், தனது செய்தியை திரும்பப் பெறுவதாக விளக்கம் அளித்தது. ஆல்ட் நியூஸ் செய்த உண்மைச் சரிபார்ப்பில் என்ன தெரிய வந்துள்ளது என்பதை விளக்கமாக அறியலாம், வாருங்கள்!
ஹைதராபாத் கல்லறைக்கு கம்பிக்கதவு ஏன்?
இரும்பு கம்பிகளால் ஆன பச்சைக் கதவால் மூடப்பட்டுப் பூட்டப்பட்ட கல்லறையின் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதில் இருந்து இந்த விஷயம் தொடங்கியது.
இந்தப் படம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அது பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டது என்று சில ட்வீட்கள் தொடங்கி, இப்போது இறந்த பிறகும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் அச்சம் நிலவுவதால் அங்கு கல்லறைகளையும் பூட்டி வைக்கத் தொடங்கியுள்ளதாகச் தகவல்கள் பரவியுள்ளன.
இந்தச் செய்தி ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது.
இந்த நிலையில், இந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ஆய்வு செய்தார். பிறகு உண்மை வெளிவரத் தொடங்கியது.
70 வயது மூதாட்டியின் கல்லறை
இந்திய நகரான ஹைதராபாத்தின் மதானாபத் பகுதியின் தாராப் ஜங் காலனியில் சலார் மாலிக்கின் மசூதிக்கு எதிரே இந்தக் கல்லறை உள்ளது.
ஆல்ட் நியூஸ், அப்பகுதியில் வசிக்கும் சமூக சேவகர் ஒருவரிடம் இது பற்றி பேசினார். அங்குள்ள மசூதியில் ஆஜான் அழைப்பு விடுக்கும் முவஜ்ஜினுடன் சேர்ந்து கல்லறைக்குச் சென்று வீடியோ எடுத்தார். இந்த கம்பிக் கதவை நிறுவும் விவகாரம், மசூதி கமிட்டியின் முன் வந்ததாக இந்த வீடியோவில் அவர் தெரிவிக்கிறார்.
ஏற்கெனவே அங்குள்ள கல்லறைகளைத் தோண்டி, இறந்தவர்களைப் புதைத்த சம்பவங்கள் சில நடந்திருப்பது, கதவு நிறுவப்பட ஒரு காரணம் என்று அவர் கூறினார்.
இரண்டாவது காரணம் இந்தக் கல்லறை, அந்த இடத்தின் நுழைவு வாயிலின் அருகில் இருப்பதால், மக்கள் தவறுதலாக அதன் மீது கால் வைத்து விடாமல் இருக்கும் பொருட்டு, அந்தக் குடும்பத்தினர் இதை நிறுவியதாகவும் அந்த சமூக சேவகர் கூறினார்.
இது 70 வயது மூதாட்டியின் கல்லறை என்றும் அவரது மகன் தான் இந்தக் கதவை நிறுவியுள்ளார் என்றும் ஆல்ட் நியூஸ் தெரிவிக்கிறது.
ஆல்ட் நியூஸை புகழந்த நெட்டிசன்கள்
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர், இந்தச் செய்தியை உண்மையாகச் சரிபார்த்து உண்மையை வெளியிட்ட பிறகு, இந்தியாவில் உள்ளவர்கள் அவரைப் புகழ்ந்து, இந்தியாவில் பத்திரிகைகளின் போக்கு குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில் சிலர், 'பாகிஸ்தானை அவர் காக்கிறார்' என்று குற்றம்சாட்டி விமர்சிக்கவும் செய்தனர்.
பத்திரிகையாளர் முகமது ஜுபைர் மற்றும் அவரது அமைப்பான ஆல்ட் நியூஸ், பொதுவாக, போலி செய்திகள் வளர்ந்து வரும் போக்கு மற்றும் பிரிவினை அரசியல் சூழலில் பல்வேறு குழுக்களின் விமர்சனத்திற்கு இலக்காகின்றன.
மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முகமது ஜுபைரைக் கடந்த ஆண்டு டெல்லி போலீசார் கைது செய்தனர்.
எதனால் சர்ச்சை?
இந்தப் படம் இந்திய ஊடகங்களில் பகிரப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹாரிஸ் சுல்தானுக்கு சொந்தமானது. தன்னை ஒரு முன்னாள் முஸ்லிம் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் இது தொடர்பாக ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார் அவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
அவர் தனது ட்வீட்டில், "பாகிஸ்தான் சமூகம் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் தங்கள் மகள்களைப் புதைத்த பிறகும், பாலியல் துன்புறுத்தலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற கல்லறைகளுக்கு பூட்டு போட வேண்டிய நிலையில் உள்ளது." என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு பயனர், "இஸ்லாமுக்கு எதிரான நபர் ஒருவர் இந்தக் கூற்றை முன்வைக்கிறார்; இந்திய ஊடகங்கள் இந்தப் போலிச் செய்தியை தன் பிரசாரத்திற்குப் பயன்படுத்தின." என்று பதிலளித்திருந்தார்.
இந்தப் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானிலும் பகிரப்பட காரணம், பெண்களின் உடல்களை வெளியே எடுத்துப் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதாக வெளியான தகவல் தான். மேலும் இது பற்றி ஏற்கெனவே அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன.
இது குறித்து, மரியா என்ற பயனர், "இந்தப் படத்தை தவறாகப் பகிர்ந்து “அடக்கடவுளே! இந்த நாடு ஒரு நரகமாகிவிட்டதே!” பாகிஸ்தானியர்கள், இப்போது வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அனஸ் என்ற பயனர், "இதனால் தான் செய்திகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது, நாம் உண்மை என்று நினைக்கும் அனைத்தையும் நாம் ஆதரிக்கிறோம்." என்று ட்வீட் செய்திருந்தார்.
இதைப் பற்றி கருத்தை பதிவு செய்த தஜய்யன் முகமது ஜுபைர் என்ற பயனர், "தவறான தகவல்களை சரிபார்க்காமல் உடனடியாக அதை பரப்பும் அனைவருக்காகவும்தான் இந்த இடுகை" என்று எழுதியிருந்தார்.
பத்திரிகையாளர் ஃபர்ஸானா ஷா, "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஈயூ டிஎஸ் இன்ஃபோலாப் நிறுவனத்தின் ஒரு தகவலில், இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, பாகிஸ்தானுக்கு எதிரான பிரசாரம் செய்வதாகக் குற்றம்சாட்டியதை நினைவு படுத்துகிறார்." இது பற்றி பிபிசியும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.என்.ஐ-யின் இந்த தகவலை போலி பிரசாரத்திற்கு பாகிஸ்தானிய அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் ஃபர்ஸானா ஷா. “பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் இலக்குகளுக்கே முன்னுரிமை தருவதால், ஏ.என்.ஐ மீண்டும் ஒரு முறை, போலி பிரசாரத்தை பரப்புவதில் வெற்றி பெற்றுள்ளது," என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்