You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவமதிப்பா? புனே இசை இரவு நிகழ்ச்சியை உடனே நிறுத்தச் சொன்ன போலீஸ் ஆய்வாளர்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
₹ 999 முதல் ₹ 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தன் இசையமைப்பில் உருவாகி பெரும் வெற்றியடைந்த பாடல்களை பாடினார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 10.05 மணியளவில் ‘Dil Se..’ படத்தில் இடம்பெற்ற ‘Chaiyya Chaiyya’ பாடலை மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது, மேடையில் ஏறிய காவல்துறை அதிகாரி, தனது கடிகாரத்தில் 10 மணியைக் கடந்து விட்டதைக் சுட்டிக்காட்டி உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறினார். அதனையடுத்து, பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
இது குறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், காவல்துறை அதிகாரி மேடையில் ஏறி நிகழ்ச்சியை நிறுத்திய நிகழ்வை ‘ராக்ஸ்டார் தருணம்’ என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், புனே பார்வையாளர்களுக்கு நன்றி எனவும், விரைவில் மீண்டும் இணைந்து பாடுவோம் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் பெரும்புகழ்பெற்ற, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தால், காவல்துறை அவரை அவமரியாதை செய்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெறப்படும்.
அப்போது, காவல்துறை, அந்தந்த இடத்தின் விதிகளுக்கு ஏற்ப நேரக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கும்.
அதன்படி, ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்கு 7 மணி முதல் 10 மணி வரை அனுமதி அளித்திருந்தது. ’வந்தே மாதரம்’ பாடலுடன் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டிருந்தவர்கள், 10 மணி ஆகி விட்டதால் ‘Chaiyya Chaiyya’ பாடலுடன் நிறைவு செய்ய திட்டமிட்டு அதை பாடிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான், காவல்துறையினர் மேடையில் ஏறி நிறுத்த வலியுறுத்தினர். நாங்களும் உடனடியாக நிறுத்தி விட்டோம்.
மேடையில் ஏறாமல், மேடைக்கு பின்புறம் வந்து எங்களிடம் காவல்துறை இதை தெரிவித்து இருந்தால் எங்கள் தரப்பு விளக்கத்தை சொல்லி முடித்திருப்போம் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான BToS நிறுவனத்தினர்.
ஏ.ஆர். ரஹ்மான் சர்வதேச அரங்கில் மிளிரும் கலைஞராக இருந்தாலும், தன்னை தமிழ் மொழி கலைஞராகவே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பல தருணங்களில் தனது குரலை உரக்க பதிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கூட தனது மனைவியை இந்தியில் பேசாமல், தமிழில் பேசும்படி வலியுறுத்தினார்.
இந்த காரணங்களாலேயே ஏ.ஆர். ரஹ்மான் இலக்கு வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கேற்ப, சிவசேனா தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான சஞ்சய் ராவத், ”அதிகாலை 3.30 மணி வரை மதுபானக் கூடத்தில் பாஜக தலைவர் நடனமாடிக் கொண்டிருக்கும்போது, ஆஸ்கர் வென்ற ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட காரணம் என்ன?” என கேள்வி எழுப்பி மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதா? இல்லை, பாஜக தலைவர்கள் சட்டத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களா? எனவும் அந்த கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்த காரணத்தால் மட்டுமே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும், அதைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஏ.ஆர்.ரஹ்மானும் முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் மேடையில் ஏறி நிகழ்ச்சியை நிறுத்திய பண்ட்கார்டன் காவல்நிலைய ஆய்வாளர் சந்தோஷ் பாட்டில் PTI-க்கு அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், புனே மண்டலம்-2 காவல்துறை இணை கண்காணிப்பாளர் ஸ்மர்டனா பாட்டில் "ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால், இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனால், விழா அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அதை அவரிடம் தெரிவித்தனர். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் அவரும் பாடலை நிறுத்தி, நிகழ்ச்சியையும் முடித்துக் கொண்டார்" என இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
புனே இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட சம்பவத்தை அரசியலாக பார்க்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடும் திரை விமர்சகர் பரத், இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார். 10 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால், 9.58 மணிக்கே முடித்து விடும் வழக்கத்தை உடையவர் ஏ.ஆர். ரஹ்மான், அதனால், அவருக்கு முன்கூட்டியே நேரம் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தால் இந்த சர்ச்சை கண்டிப்பாக ஏற்பட்டு இருக்காது எனவும், அதே நேரம், அந்தப் பாடல் முடிப்பதற்கு முன்பு மேடையிலேயே ஏறி அதை நிறுத்தியிருப்பது தவிர்க்கப்பட்டு இருக்கலாம் எனவும் பரத் தெரிவிக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், நேரக் கட்டுப்பாட்டை மீறியது தொடர்பாக எந்தவித வழக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்