நவீன் உல் ஹக்: கோலி - கம்பீர் மோதலின் தொடக்கப் புள்ளியான வீரர் யார்? நடந்தது என்ன? - முழு விவரம்

இன்றைய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலியுடன் மோதிக் கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் உற்று நோக்கப்படும் நபராக நவீன் உல்-ஹக் மாறியுள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 23 வயதேயான வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல்-ஹக் நடந்து கொண்ட விதம் சரியா? அவரது கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் களைகட்டியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமிலு் நவீன் உல் ஹக் மற்றும் கோலி ஆகியோர் பதிலுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள கோலி - கம்பீர் மோதலின் தொடக்கம் நவீன் உல்-ஹக்கிடம் இருந்தே வந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியில் 127 ரன்களை லக்னோ அணி சேஸிங் செய்த போது, 17-வது ஓவரில் மோதலின் தொடக்கப்புள்ளி நிகழ்வு நடந்தேறியது.

17-வது ஓவரில் நடந்தது என்ன?

முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை நவீன் எதிர்கொண்டார். அந்த பந்து பவுன்ஸராகி பேட்ஸ்மேன் தோள்பட்டையை விட உயரமாக சென்றது. அது நோ பால் என கள நடுவர் அறிவிக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்டு அப்பீல் செய்தது.

ஆனால், மூன்றாவது நடுவரும் அது நோபால் தான் என்று உறுதிப்படுத்திவிட்டார். அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலிக்கும், பேட்ஸ்மேனாக நின்று கொண்டிருந்த நவீன் உல்-ஹக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விராட் கோலி தனது ஷூவைக் காட்டி நவீன் உல்ஹக்கை நோக்கி ஏதோ கூற நிலைமை சூடாகிப் போனது. அப்போது, சக பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த அமித் மிஸ்ரா உடனே குறுக்கே வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். நடுவரும் தலையிட வேண்டியிருந்தது.

இரு அணி வீரர்களும் கைகுலுக்கும் போது என்ன நடந்தது?

போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் சம்பிரதாயத்தின் போது கோலியும் - லக்னோ அணி ஆலோசகரும் முன்னாள் வீரருமான கம்பீரும் கண்ணியமாக கைகுலுக்கிக் கொண்டனர். அதன் பிறகு நவீன் உல் ஹக்குடன் கோலி கைகுலுக்கும்போது இருவரும் பரிமாறிக் கொண்ட வார்த்தைகள் மீண்டும் மோதலுக்கு வித்திட்டன.

ஆனாலும் நிலைமை கைமீறிப் போகாமல் அருகில் இருந்த வீரர்கள் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக, பெங்களூரு வீரர் மேக்ஸ்வேல், நவீன் உல்ஹக்கை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் நிலைமை சற்றே தணிந்தாலும், முற்றிலுமாக முடிந்து போய்விடவில்லை என்பதை அடுத்து நடந்தேறிய காட்சிகள் உறுதிப்படுத்தின.

கோலி - கம்பீர் வார்த்தைப் போர்

வெற்றி யாருக்கு என்றே தெரியாத பரபரப்பான கட்டத்தில் இருக்கும் ஆட்டங்களில் எதிரணி வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது விளையாட்டு உலகில் சகஜமான ஒன்றுதான். ஆனால், ஜென்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் நேற்றைய அந்த வாக்குவாதம் வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை. போட்டி முடிந்த பின்னர், வீரர்கள் கைகுலுக்கும் போது அது கோலி - கம்பீர் இடையிலான வார்த்தைப் போராக மாறிவிட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடிநாதமே பல்வேறு நாட்டு வீரர்களும் ஒன்றாக விளையாடுவதன் மூலம் நட்புறவு பாராட்டுவதுடன், கிரிக்கெட் நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வதுதானே. நேற்றும் போட்டி முடிந்த பின்னர் லக்னோ அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கோலியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த லக்னோ அணி ஆலோசகரும், முன்னாள் வீரருமான கம்பீர், கைல் மேயர்ஸை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் ஆக்ரோஷமாக ஒருவரை நோக்கி ஒருவர் கை நீட்டி வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல், அந்த அணியின் சீனியர் வீரர் அமித் மிஸ்ரா மற்றும் இரு அணி வீரர்களும் சேர்ந்து கோலி - கம்பீரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

கோலியுடன் சமாதானத்திற்கு முன்வராத நவீன்

பெங்களூரு - லக்னோ ஆட்டத்தின் போது அரங்கேறிய இந்த நாடகத்தின் கடைசிக் காட்சியில் மீண்டும் நவீன் உல்-ஹக் வருகிறார். கசப்புணர்வை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் தானே முன்வந்து கோலியுடன் பேசியதுடன், நவீன் உல்-ஹக்கையும் சமாதானமாக போக அழைக்கிறார். ஆனால், கோலியுடன் பேச மறுத்து நவீன் உல்-ஹக் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிடுகிறார்.

ஆட்டத்தின் நடுவே தொடங்கிய மோதல், கோலி - கம்பீர் வாக்குவாதம், கோலியுடன் பேச மறுத்து நவீன் உல்ஹக் புறக்கணித்தது ஆகிய காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. கோலி, கம்பீர், நவீன் உல்ஹக் ஆகியோரின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமிலும் தொடரும் மோதல்

மைதானத்தில் மோதல் முடிந்த பிறகு இன்ஸ்டாகிராமிலும் கோலிக்கும் நவீனுக்கும் இடையேயான மோதல் நீடித்திருக்கிறது.

"நாம் கேட்பது அனைத்தும் ஒரு கருத்துதான், உண்மை அல்ல. நாம் காண்பது எல்லாம் தோற்றம்தான். உண்மை அல்ல" என்று வேறொரு அறிஞரின் கருத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நவீன், "உங்களுக்குத் தகுதியானதைத்தான் நீங்கள் பெறுவீர்கள்; அது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படித்தான் நடக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது கோலிக்கு பதிலளிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்திருக்கிறது.

தோனி, கோலியுடன் கம்பீருக்கு கசப்புணர்வா?

10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனாக கோலியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டனாக கவுதம் காம்பீரும் இருந்த போது களத்தில் இருவரும் மோதிக் கொண்டதையும், நேற்றைய மோதலையும் ஒப்பிட்டு சிலர் மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர். ரஞ்சியில் டெல்லி அணிக்கு ஆடிய அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்புறவு, கசப்பு என பலவற்றையும் நெட்டிசன்கள் பகிர்ந்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தோனிக்கு எதிராக கவுதம் காம்பீர் காட்டிய கசப்புணர்வும், அவரது ட்விட்டர் பதிவுகளும் கூட நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தோனியின் சுயசரிதையான 'தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படம் வெளியாவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றதை நினைவு கூறும் வகையிலும் கம்பீர் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ட்வீட்களும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன.

கடந்த காலத்தில் நவீன் உல்-ஹக் எப்படி?

மறுபுறம், கோலி - கம்பீர் மோதலின் தொடக்கமாக அமைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல்-ஹக்கும் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். கிரிக்கெட் களத்தில் அவரது கடந்த கால செயல்பாடுகளை தோண்டியெடுத்து பலரும் விமர்சனப் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வீரர்களான ஷாகித் அப்ரிடி, முகமது ஆமிர் ஆகியோருடன் நவீன் உல்ஹக் மோதிக் கொண்டதை நினைவூட்டி பலரும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

அப்ரிடிக்கு நவீன் தந்த பதில் உணர்த்துவது என்ன?

2020-ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் நவீன் உல்ஹக்குடனான மோதலுக்குப் பின்னர் ஷாகித் அப்ரிடி, அவருக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்திருந்தார். அப்ரிடிக்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்த நவீன் உல்-ஹக், சீனியர் வீரர்களிடம் இருந்து அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளத் தயார், அதற்காக நீங்கள் அனைவரும் என் காலுக்கு கீழே என்று அவர் கூறுவாரேயானால், அது என்னை மட்டும் கூறுவதாக இருக்காது, நான் சார்ந்த சமூகத்தையும் குறிப்பிடுவதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நவீன் உல்ஹக்கின் இந்த ட்வீட், அவரது மனோபாவத்தையும், குணநலன்களையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. நேற்றைய மோதலின் தொடக்கப்புள்ளியாக அமைந்த 17-வது ஓவர் வாக்குவாதத்தின் போது அவரை சீண்டும் வகையில் கோலி என்ன சொன்னார்? தனது ஷூவைக் காட்டி கோலி என்ன கூறினார்? என்பதைப் பொருத்தே, கடைசியில் லோகேஷ் ராகுல் அழைத்தும் கோலியுடன் சமாதானமாகப் போக நவீன் உல்ஹக் மறுத்த நிகழ்வை மதிப்பீடு செய்ய முடியும் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: