அமெரிக்க விசா பெற்றுள்ள 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறுஆய்வு - டிரம்ப் அரசு புதிய அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை, மார்கோ ரூபியோ, விசா மதிப்பாய்வு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டானாய் நெஸ்டா குபெம்பா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவிற்கு வருவதற்கோ அல்லது தங்குவதற்கோ விதிமீறல்கள் ஏதேனும் செய்திருக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் இனிமேல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

"விசா முடிந்த பிறகும் நாட்டில் அதிக காலம் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொதுப் பாதுகாப்பை சீர்குலைப்பது, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது பயங்கரவாத அமைப்புக்கு உதவுவது உட்பட சட்ட விதிகளை மீறுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் அவர்களுடைய விசாக்களை ரத்து செய்வோம்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் குடியேற்றத்திற்கு எதிரான கொள்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல நாடுகளின் குடிமக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களின் நாடுகளுக்கு டிரம்ப் திருப்பி அனுப்பினார். மேலும், சில நாடுகள் மீதான கடுமையான பயணத் தடைகள் மற்றும் 6,000 மாணவர் விசாக்களை ரத்து செய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

விசா மதிப்பாய்வு, அமெரிக்கா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விசா கட்டுப்பாடு - என்ன நிபந்தனை?

காணொளிக் குறிப்பு, 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறு ஆய்வு

விசா மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்கு படிப்பதற்காக விசா பெற்றுள்ள நபர்களின் சமூக ஊடக கணக்குகளை அந்நாட்டு அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள்.

விசாவில் அமெரிக்காவுக்கு வந்தவர்கள், அமெரிக்க குடிமக்கள், கலாசாரம், அரசு, நிறுவனங்கள் அல்லது நிறுவனக் கொள்கைகள் மீதான விரோதப் போக்கு கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பவர்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் அல்லது சட்டவிரோத யூத-விரோத துன்புறுத்தல் மனப்போக்குக் கொண்டவர்கள், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் என நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நபர்களை அடையாளம் காண அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அமெரிக்காவை வெறுப்பவர்களுக்கும், அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்களைப் பரப்புபவர்களுக்கும், நாட்டின் நன்மைகள் சென்று சேரக்கூடாது" என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ ட்ரேகெசர் கூறினார்.

"அமெரிக்க எதிர்ப்பை ஒழிக்கும்" கொள்கைகளை செயல்படுத்த நாட்டின் குடிவரவு சேவை உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

லாரி ஓட்டுநர்களுக்கு வேலை விசா வழங்குவதை அமெரிக்கா 'உடனடியாக' நிறுத்தி வைக்கும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியதைத் தொடர்ந்து இந்த விசா 'மறுஆய்வு' அறிவிப்பு வந்துள்ளது.

"அமெரிக்காவில் கனரக வாகனங்களை ஓட்டும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு அமெரிக்க உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது நாடு முழுவதும் உள்ள அமெரிக்க லாரி ஓட்டுநர்களின் வேலைகளைப் பாதிக்கிறது" என்று ரூபியோ வியாழக்கிழமை X இல் பதிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விசா மதிப்பாய்வு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

விசா காலத்தைத் தாண்டி தங்கினால்?

டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காஸாவில் இஸ்ரேலின் போருக்கு எதிராகப் போராடியதற்காக அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து பல வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில், மலாவி மற்றும் ஜாம்பியாவிலிருந்து வருபவர்கள் சுற்றுலா அல்லது வணிக விசாவைப் பெற கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் (15 ஆயிரம் டாலர்கள்) வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. மேலும், 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய டிரம்ப் தடை விதித்துள்ளார். மேலும் ஏழு நாட்டு மக்கள், அமெரிக்காவிற்கு வருவதற்கு பகுதியளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில், அமெரிக்காவில் வசிக்கும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. அதேபோல், அமெரிக்காவில் பிறப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, பிறப்புரிமை குடியுரிமையையும் ரத்து செய்வோம் என அமெரிக்க அதிபர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு