இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சிறிய ரக வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றின் துப்பாக்கி ரவைகள் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தேவேந்திரமுனை - கப்புகம்புர பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இரண்டு நண்பர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்த வேன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியொன்றில் தீக்கிரையான நிலையில் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், வேனை தீக்கிரையாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்துவதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2025 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பான ஒரு பார்வை

2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 27 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 18 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய 9 துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களிலும் இதுவரை 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிபபிடுகின்றனர்.

இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூட்டில் விசாரணைக்காக நின்றுகொண்டிருந்த தருணத்தில், வழக்கறிஞர் வேடத்தில் வருகை தந்த துப்பாக்கிதாரியினால் நீதிமன்றத்தில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர்கள், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற போதிலும், 8 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர்.

எனினும், இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி, இந்தியா அல்லது மாலத்தீவுக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புப்பட்டுள்ளமையை போலீஸார் உறுதி செய்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 18ம் தேதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகளையே ஜனாதிபதி இவ்வாறு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாது, புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

சட்ட ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் திணைக்களம் வசமானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் சட்ட ஆட்சியை பாதுகாக்காது, சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு