You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் - எப்போது, எப்படி நடக்கும்?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், இம்முறை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நான்கு விதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு நடத்தப்படும் நான்கு விதமான தேர்தல்களில் மிகவும் சிக்கலான தேர்தல் முறையாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை காணப்படுகின்றது.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உள்ளிட்ட 336 சபைகளுக்காக சுமார் 8000திற்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படுகின்றது.
தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகின்றது?
உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் பிரகாரம் நடத்தப்படுகின்றது.
உள்ளூராட்சி பிரதேசங்களில் பிரதேச மட்டத்திலும், பொதுப் பட்டியலின் அடிப்படையிலும் மக்கள் பிரதிநிதிகள் கலப்பு விகிதாரச்சார முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சனத் தொகை, நிலப்பரப்பு, இன அடிப்படை ஆகியன எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உள்ளாட்சி சபைகள் ஒற்றைப் பிரிவு மற்றும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
4750 ஒற்றை உறுப்பினர் பிரிவுகளும், 165 இரண்டு உறுப்பினர் பிரிவுகளும், 04 மூன்று உறுப்பினர் பிரிவுகளும் உள்ளன.
தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள்
வேட்பு மனுக் கோரல் நேற்றைய தினத்துடன் முடிவடைந்துள்ள நிலையிலேயே, தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்கு சீட்டு உள்ளிட்ட அச்சிடும் நடவடிக்கைகள் குறித்து அரச அச்சத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருவதுடன், தபால் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் பேச்சுவார்த்தைகளை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தி வருகின்றது.
அத்துடன், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை விடவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 155976 மேலதிக வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரையான காலப் பகுதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் அனைத்து பிரஜைகளும் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதிப் பெறுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியான நிலையில், வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு