You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக எம்.பி நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தம் - சி.ஐ.எஸ்.எஃப் மீது விமர்சனம் எழுவது ஏன்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
நாடாளுமன்றத்தில் சி.ஐ.எஸ்.எஃப் படையினரால் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக, தி.மு.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை சபாநாயகர் ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இங்த பிரச்னையின் பின்னணி என்ன? நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியில் சி.ஐ.எஸ்.எஃப் ஈடுபடுவது குறித்து விமர்சனம் எழுவது ஏன்?
ஜூன் 18-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் பேட்டரி காரில் நாடாளுமன்ற கட்டடத் தோட்டத்திற்குள் நுழைந்தபோது, சி.ஐ.எஸ்.எஃப் படையினர் தடுத்து நிறுத்தி, நான் ஏன் இன்றைக்கு நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறேன், நாடாளுமன்றத்திற்குள் எங்கு செல்லவிருக்கிறேன் என்பது குறித்து கேள்வி கேட்டனர்,” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் மக்களின் விருப்பங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் இடத்திற்குச் செல்வதற்கான நோக்கம் குறித்து சி.ஐ.எஸ்.எஃப் படையினர் கேள்வி கேட்டது தனக்கு திகைப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பொறுப்பை நாடாளுமன்ற பாதுகாப்பு சேவைப்பிரிவு (PSS-Parliament Security Service) கவனித்துக்கொண்ட போது இதற்கு முன்பு இத்தகைய தவறான நடத்தை எப்போதும் நிகழ்ந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தி.மு.க-வின் அயலக அணி மாநிலச் செயலாளரான எம்.எம். அப்துல்லா, மாநிலங்களவைக்கு 2021-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எவ்வித அலுவல்பூர்வ பணிகளும் இன்றி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ள எம்.எம்.அப்துல்லா, நாடாளுமன்றத்தில் தன்னுடைய வருகை குறித்த தகவல்களை வெளியிடுவதற்கும் பொறுப்பு கோருவதற்கும் மாநிலங்களவை சபாநாயகருக்கு மட்டுமே பதிலளிக்க தான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் தன்னை ஆழமாகப் பாதித்துள்ளதாக அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் மாண்பைக் காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்ன நடந்தது?
இச்சம்பவத்திற்குத் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலேவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி. நாடாளுமன்றத்திற்கு ஏன் செல்கிறாறர் என கேட்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள கோகலே, நாடாளுமன்றத்திற்குச் செல்வது தங்களின் உரிமை எனத் தெரிவித்துள்ளார்.
'இதனால்தான், பி.எஸ்.எஸ்-க்கு பதிலாக சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட்டதா, ‘இந்தியா’ (எதிர்க்கட்சி கூட்டணி) எம்.பி-க்கள் தங்கள் கடமைகளை ஆற்றுவதை தடுக்கத்தானா,' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
'400 இடங்களுக்கு மேலோ' (400 paar) அல்லது '300 இடங்களோ' (பா.ஜ.க-விடம்) இல்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உணர வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மோதி அல்லது அமித் ஷா-வின் தனிப்பட்ட சொத்து அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் என, சி.ஐ.எஸ்.எஃப் பதிலளிக்க வேண்டும் என சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பு பி.எஸ்.எஸ், டெல்லி காவல்துறைக்கு பதிலாக சி.ஐ.எஸ்.எஃப்-இடம் மத்திய அரசு ஒப்படைத்தது ஏன் என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன.
கடந்த மே மாதம், மாநிலங்களவை தி.மு.க எம்.பி திருச்சி சிவா, சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மூன்று முறை தன்னைத் தடுத்து நிறுத்தி, தன் அடையாள அட்டையைச் சோதனை செய்ததாகத் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப்
கடந்தாண்டு டிசம்பர் 13-ஆம் தேதி, மக்களவையில் அலுவல்கள் நடந்துகொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர், திடீரென குதித்து, தங்களிடம் இருந்த மர்மப் பொருட்களை அவையில் வீசினர். அதிலிருந்து புகை வெளியேறியது. 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று இந்தப் 'பாதுகாப்பு மீறல்' சம்பவம் நிகழ்ந்தது. இதில், தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னைகள், மணிப்பூர் கலவரம் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
நாடு முழுதும் அதிர்வலைகளை கிளப்பிய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பாதுகாப்புப் பணிகள் சி.ஐ.எஸ்.எஃப்-யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக, சி.ஐ.எஸ்.எஃப்-ஐச் சேர்ந்த 3,300-க்கும் மேற்பட்டோர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. மேலும், 1,400-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் படையினர் அப்பணியிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
இதற்கு முன்பு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புப் பணிகள் சி.ஆர்.பி.எஃப் (பி.டி.ஜி - பார்லிமெண்ட் டியூட்டி குரூப்), டெல்லி காவல்துறை, பி.எஸ்.எஸ் ஆகியோரின் ஒருங்கிணைந்த மேற்பார்வையில் இருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் திரும்பப் பெறப்பட்டதாக, மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார். இதில், பி.டி.ஜி நாடாளுமன்ற பாதுகாப்பில் ஆயுத குறுக்கீடுகள் தேவைப்படும்போதும், டெல்லி காவல்துறை அனைவரையும் பரிசோதித்தல், அவர்களின் உடைமைகளை பரிசோதித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தனர். பி.எஸ்.எஸ் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள்.
நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப்-இடம் ஒப்படைத்ததிலிருந்தே, நாடாளுமன்ற வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய பி.எஸ்.எஸ் குழுவின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. சுதந்திரப் போரட்ட வீரர்களான பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத் இருவரும் 1929-இல் அப்போதைய மத்திய சட்டமன்றத்தில் (பழைய நாடாளுமன்ற கட்டடம்) வெடிகுண்டு வீசியதைத் தொடர்ந்து, ‘வாட்ச் அண்ட் வார்ட்’ (Watch and Ward) பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. அதுதான் தற்போது பி.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது.
விமர்சனம் ஏன்?
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பி.எஸ்.எஸ். குழுவுக்குப் பதிலாக, சி.ஐ.எஸ்.எஃப் படையினரிடம் இந்த பணிகளை கொடுத்ததே எம்.பி-க்கள் இத்தகைய தர்ம சங்கடத்திற்கு ஆளாவதற்கு காரணம் என்று கூறுகிறார், முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி.
“அனைத்து நுழைவு வாயில்களிலும் சி.ஐ.எஸ்.எஃப் தான் சோதனை நடத்துகின்றனர். அவர்கள் விமான நிலையங்களின் பாதுகாப்புப் பணிகளை கவனிப்பவர்கள். விமான நிலையங்களுக்கு வருபவர்கள் அனைவரும் பயணிகள், அங்கு இந்த சிக்கல்கள் வருவதில்லை. நாடாளுமன்றம் அபப்டியல்ல. மக்கள் பிரதிநிதிகளை உள்ளே விடாமல் கேள்வி கேட்பது சங்கடத்தை ஏற்படுத்தும். இதனைத் தடுக்க, பி.எஸ்.எஸ். குழுவினர் பாதுகாப்புப் பணியில் தக்க வைக்கப்பட வேண்டும்,” என்றார்.
2008-ஆம் ஆண்டு ஆச்சாரியின் பணி காலத்தின் போதுதான் 'வாட்ச் அண்ட் வார்ட் பி.எஸ்.எஸ்'. என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த மே மாதம் சி.ஐ.எஸ்.எஃப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது இது பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என, ’தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்திருந்தார்.
எம்.பி-க்கள், முன்னாள் உறுப்பினர்களை அடையாளம் காண்பதிலோ அல்லது ஏமாற்றுபவர்களை கண்டறிவதிலோ சி.ஐ.எஸ்.எஃப் அனுபவம் அற்றவர்கள் என கூறுகிறார் ஆச்சாரி.
இத்தகையச் சம்பவங்கள், வரும் நாட்களில் மிகத் தீவிரமான முறையில் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கிறார். முன்னர் இருந்த முறையே தொடர வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
சி.ஐ.எஸ்.எஃப் 1969-ஆம் ஆண்டு முதல் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை சேவைகளுக்குப் பாதுகாப்பு அளித்துவருகிறது. மூன்று பட்டாலியன் வலுவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டோருடன் இயங்கிவருகிறது. அரசுக் கட்டடங்கள், பாரம்பரியச் சின்னங்கள், மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அளித்து வரும் சி.ஐ.எஸ்.எஃப், முக்கியமான நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
பி.எஸ்.எஸ்-இன் அனுபவம்
எனினும், அவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்களில் முன்னனுபவம் இல்லை என ஆச்சாரியின் கருத்தை பிரதிபலிக்கிறார், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து செய்தி சேகரித்துவரும், பி.டி.ஐ செய்தி முகமையின் முன்னாள் செயல் ஆசிரியர் வி.எஸ். சந்திரசேகர்.
“நாடாளுமன்றத்தின் உள்ளே யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது பி.எஸ்.எஸ்-க்கு அத்துப்படி. மிகவும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவர்கள். யார் புதிதாக வருகிறார்கள் என்பது வரை அவர்களுக்குத் தெரியும். இப்போதுள்ள எம்.பி-க்கள், முன்னாள் எம்.பி-க்கள் யார் என்பது கூட அவர்களுக்குத் தெரியும். அதனால், அவர்கள் உறுப்பினர்களுக்கு எவ்வித சங்கடங்களோ, துன்புறுத்தலோ நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள்,” என்கிறார் சந்திரசேகர்.
மாறாக, விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்புப் பணிகளில் அனுபவம் பெற்றிருக்கும் சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு நாடாளுமன்றத்தில் அனுபவம் இல்லை என்றும், உறுப்பினர்களின் அடையாள அட்டையை வைத்தே அவர்களை அனுமதிப்பதாகவும் கூறுகிறார்.
சி.ஐ.எஸ்.எஃப் படையினர் வாரச் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர் எனக்கூறும் சந்திரசேகர், பி.எஸ்.எஸ். பாதுகாப்புக் குழுவினர் அதற்கென அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் என கூறினார்.
“இதுதவிர, நாடாளுமன்றப் பாதுகாப்பு என்பது எப்போதும் மக்களவை சபாநாயகரின் கட்டுப்பாட்டுக்குள் வருவது. ஆனால், கடந்தாண்டு நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறலுக்குப் பிறகு அதை உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. சபாநாயகர் இந்த விஷயத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்,” என்றார்.
பி.எஸ்.எஸ் குழுவின் பணி அனுபவம் காரணமாக, உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் எவ்விதத் தடங்கல்களும் இல்லாமல் செல்லலாம் எனக்கூறிய சந்திரசேகர், பத்திரிகையாளர்களும் பிரச்னைகளை சந்தித்ததில்லை என்றார். ஆனால், இப்போது மூத்த அதிகாரிகள் கூட தங்கள் அடையாள அட்டையைத் தெளிவாகத் தெரியும்படிக் காட்டித்தான் செல்வதாகக் கூறுகிறார் சந்திரசேகர்.
“நாடாளுமன்ற நுழைவுவாயில், வெளியேறுதல் உள்ளிட்ட பெரும்பான்மையான பாதுகாப்புப் பணிகளில் சி.ஐ.எஸ்.எஃப் தான் உள்ளனர். பாதுகாப்பு தவிர்த்த மற்ற பணிகளில் பி.எஸ்.எஸ். ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறேன்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)