திறமையா? உழைப்பா? வெற்றிக்கு வித்திடுவது எது? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்கள்

திறமையும், உழைப்பும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டேவிட் ராப்சன்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

பணி நெறிமுறைகளுக்கு உட்பட்டு உழைத்ததே பெரும்பாலும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என பலரும் கூறுகின்றனர். ஆனால் அது எப்போதுமே உண்மையாக இருப்பதில்லை.

பெரும்பாலும் அனைத்து நிலைகளிலும் திறமை மற்றும் கடின உழைப்பை இணைத்துப் பணியாற்றுவதாலேயே வெற்றி கிடைக்கிறது. வெற்றிபெற்ற பலரிடம் கேட்டால் அவர்களுடைய திறமையை விட, கடின உழைப்பே வெற்றிக்குக் காரணம் என்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக அடிக்கடி, ஒருவர் வெற்றி பெற திறமை ஒரு சதவிகிதம் தான் உதவுகிறது என்றும், கடின உழைப்பு தான் 99 சதவிகிதம் உதவுகிறது என்றும் தாமஸ் எடிசனின் கூறிய கருத்தை பலர் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஆனால் வேறு சில கருத்துக்களும் இருக்கின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு ஆக்டேவியா பட்லர் அளித்த அறிவுரையைப் பாருங்கள். "திறமையை மறந்துவிடுங்கள். அது உங்களுக்கு இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் அது உங்களுக்கு இல்லை என்றால் அதை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

உங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். அது திறமையை விட அதிகமாக உங்களுக்கு உதவும். தொடர்ந்து படியுங்கள். இப்படி படிப்பது உங்களிடம் திறமை இல்லாவிட்டாலும், உங்களை திறமைசாலியாக மாற்றிவிடும்," என்கிறார் அவர்.

வியர்வை, ரத்தம், கண்ணீர் சிந்தி பயிற்சி மேற்கொண்டதே தமது வெற்றிக்குக் காரணம் என போர்ச்சுக்கீசிய கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகிறார்.

அவருடைய வெற்றிக்கான ரகசியங்கள் குறித்து கேட்ட போது, "உழைக்காமல் வெறும் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்துவிட முடியாது," என்கிறார்.

தன்னடக்கம் மிகுந்த வெற்றியாளர்கள் சிலருக்கு வேண்டுமானால் அது போன்று பேசுவது நன்மையைத் தரலாம். ஆனால் தற்போதைய ஆய்வுகளில் கிடைத்துளள முடிவுகள், பெரும்பாலான நிலைகளில் மிகக்கடினமாக உழைப்பது எதிர்மறையான விளைவுகளையே அளிக்கும் எனத் தெரிவிக்கின்றன.

இயற்கையே ஆற்றல் மிக்கது என்ற ஒரு கோட்பாட்டிற்கே நாம் நன்றி சொல்லவேண்டும். தற்போதைய ஆய்வுகளின்படி, கடினமான உழைப்பில் வெற்றிபெற்றவர்களை விட திறமையால் வெற்றிபெற்றவர்களுக்கு பொதுமக்களிடம் அதிக மதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இயற்கையாக அமைந்ததே சிறப்பானது என்ற கோட்பாடு, தெளிவான, உள்ளார்ந்த புரிதலுக்கு கீழ்நிலையையே காட்டும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்காது. வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்பவர்கள், அந்த ஆட்களின் திறமையால் தான் அவர்கள் வெற்றிபெற்றனர் என்பதை அறிந்தால், அந்த வேலைக்கு மன உறுதி மற்றும் தீர்மானமான உழைப்பின் மூலம் வெற்றி பெற்றவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள்.

நமது கடினமான உழைப்பின் காரணத்தினாலேயே தண்டிக்கப்படுவதை தவிர்க்க நமக்கு சில விஞ்ஞானிகள் அதிர்ஷ்டவசமாக சில ஆலோசனைகளை அளித்துள்ளனர்.

உண்மையான மேதைகள்

நுகர்வு கலாசாரத்தில் இயற்கையான பொருட்களுக்கு, செயற்கையான பொருட்களை விட அதிக மதிப்பு அதிகமாக இருக்கிறது.

2002ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் அமைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை அளித்த 'மால்கம் க்லாட்வெல்' தான் இது போன்ற ஒரு மனநிலை குறித்து முதன்முதலாக ஒரு கட்டுரையை அளித்தவர் என அறியப்படுகிறது.

"அடிப்படை சிந்தனைகளின் படி, இயற்கையாகக் கிடைத்த ஒரு பொருள் தான் உண்மையானது என்றும், அதில் செயற்கையாக ஏதாவது செய்தால் அல்லது ஏதாவதை கலந்தால் அது நமக்கு பிடிக்காததாகவே இருக்கிறது," என அறிவித்தார்.

அவருடைய இந்த புதிய கோட்பாட்டின்படி, இயற்கையாகவே இருக்கும் திறமையை விட, கடின உழைப்பால் ஒருவர் ஒரு சாதனையைச் செய்கிறார் என்றால் அது அவருடைய தகுதியின் உயரமின்மையை தான் காட்டும் என்றார்.

க்லாட்வெல்லின் வாதங்கள் அனைத்தும் ஆய்வுகளின் அடிப்படையில் இல்லாமல் புற அனுபவங்களின் மூலமே இருந்தன. ஆனால் லண்டன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிலையத்தில் பணியாற்றிய சியா- ஜங் சேய் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் அடிப்படையில் இந்த கோட்பாட்டை முன்வைத்தார்.

திறமையும், உழைப்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உழைப்பே இல்லாத திறமை என்பது வீண் என்கிறார் போர்ச்சுக்கீசிய கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது அவர் மேற்கொண்ட ஆரம்ப கால ஆய்வுகள் இசைத் திறமைகள் குறித்த விமர்சனங்களை விரிவாக அலசின. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர்களாக இருந்தனர்.

அவர்களுக்கு 20 வினாடிகளுக்கான இரண்டு இசைத்துளிகள் அளிக்கப்பட்டன. அவை இரண்டும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஒரே இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்டவை என்ற போதும், இரண்டு வெவ்வேறு பியானோ கலைஞர்களால் அவை உருவாக்கப்பட்டதாக இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இசைத்துளிகளுடன் அவற்றைப் பற்றிய குறிப்புக்களும் அளிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பின்படி, இயற்கையாகவே அமைந்த திறமையின் படி அந்த இசை உருவாக்கப்பட்டதாகவும், மற்றொரு குறிப்பின்படி, கடினமான முயற்சியினால் அந்த இசை உருவாக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களுக்கு சொல்லப்பட்டது.

இந்த இசைத்துளிகளைக் கேட்ட பின், அந்த இசைகளை உருவாக்கிய இரண்டு கலைஞர்களைப் பற்றியும் விவரிக்கும் படி, அந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது.

உண்மையை சொல்லப்போனால், அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், அந்த இரு இசைத்துளிகளைப் பற்றியும் ஒரே மாதிரியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கவேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படி எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது திறமையின் மூலம் அந்த இசையை உருவாக்கியவர் அருமையான இசையை அளித்திருப்பதாகவும், மற்றவரின் இசை அவ்வளவு இனிமையாக இல்லை என்றே அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்தாக முன்வைத்தனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்களுடைய விமர்சனங்கள் நேரடியாகவே வேறுபட்டிருந்தது தான். அந்த இசைத்துளிகளை உருவாக்கியதில் எது முக்கியத்துவம் பெற்றிருந்தது என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, பலர் உழைப்பை விட திறமையே சிறந்தது எனப் பதில் அளித்தனர்.

இந்த முடிவுகளை அடிப்படையாக வைத்து, இயற்கையே சிறந்தது என்ற உணர்வு, மனித மூளை சரியான விழிப்பு நிலையில் இல்லாத போது மட்டுமே ஏற்படுவதாக சியா - ஜங் சேய் முடிவுக்கு வருகிறார்.

சாதிப்பதற்கே பிறந்தவர்கள்

இசையைத் தவிர வேறு இடங்களில் இது போன்ற எண்ணம் பிரதிபலிக்கப்படுகிறதா என்ற ஆய்வில் அவர் இறங்கிய போது, தொழில் துறையில் ஒருவர் வெற்றிபெறுவது குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்ற ஆய்வை மேற்கொண்டார்.

தொழில் துறையில் முன்னேறிய நபர்களுடைய விவரங்களும், அவர்களின் தொழிலை முன்னேற்றும் திட்டம் குறித்த ஒரு நிமிட உரையாடல் ஒலிப்பதிவும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான தகவல்களாகவே இருந்தன.

அவர்களுடைய தற்போதைய வெற்றிக்கு என்ன காரணம் என்பது போன்ற இடங்களில் இருந்த சில விவரங்கள் மட்டும் மாறுபட்டிருந்தன. ஆனால் இந்த ஆய்வில் சரிபாதி பங்கேற்பாளர்கள், தொழில் துறை வெற்றியின் பின்னணியில் கடுமையான உழைப்பு இருந்ததாகவும், மறுபாதியினர் தொழிலில் ஈடுபடும் திறமையே இந்த வெற்றிக்குக் காரணம் எனவும் தெரிவித்தனர்.

தொழிலில் வெற்றிபெற்றவர்களின் சுய விவரங்களைப் படித்தபின், அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு அளவுகளில் அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர். இசைத்துளிகளைக் கொடுத்து, அவற்றைப் பற்றிய கருத்துக்களைக் கேட்ட போது கிடைத்த மாதிரியான முடிவுகளே இங்கும் கிடைத்ததை சியா - ஜங் சேய் கண்டுபிடித்தார். சராசரியாக, இயற்கையான திறன்கள் மூலம் சாதிப்பவர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்திருந்தது. மிகப்பெரும் நிபுணத்துவத்தின் மூலம் தொழில்களில் முன்னேறியவர்களுக்கு குறைவான ஆதரவே கிடைத்திருந்தது.

மூளை சரியான விழிப்பு நிலையில் இல்லாத போது எடுக்கப்படும் முடிவுகள் தான் இது போல் இருக்கும். இது போல் பல்வேறு நபர்களைப் பற்றி ஒப்பிடும்படி கேட்டுக்கொண்ட போது, இயற்கையான திறமைகளின் மூலம் சாதித்தவர்களையே சியா - ஜாங் சேயின் பங்கேற்பாளர்கள் நம்பினர்.

இதுபோல் இயற்கையான திறமைகளைச் சார்ந்திருக்கும் மனப்போக்கு சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. ஹாங்காங்க் அறிவியல் பல்கலைக்கழகத்துக்காகப் பணியாற்றிய போது, 5 வயது குழந்தைகளில் இருந்து அனைவரும் இது போல் இயற்கையாக அமைந்த திறமைகளை மதிப்பதைக் கண்டுபிடித்தார்.

இந்த ஆய்வின் போது, எளிதில் நண்பர்களாக மாறிய இரண்டு நபர்களைப் பற்றிய கதைகள் பங்கேற்பாளர்களுக்கு சொல்லப்பட்டன. அதில் இயற்கையாகவே பரவலாக அறியப்பட்ட நபர் ஒருவர் மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் தன்னை வளர்த்துக்கொண்டவர் என இரண்டு பேர் இருந்தனர்.

அதில் இயற்கையாகவே பரவலாக அறியப்பட்ட நபருக்கே நிறைய ஆதரவு கிடைத்தது. "இயற்கையான திறமைகளைக் கொண்டவரை மதிப்பது என்பது அனைத்து வகையான வயது, கலாச்சாரம், சமூக பின்புலங்களைக் கொண்டவர்களிடமும் காணப்படுகிறது," என்கிறார் சியா - ஜான் சேய்.

மனநிலையை உற்று நோக்குதல்

கல்வி மற்றும் தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் நமது உளவியல் இது போன்ற சிந்தனையைக் கொண்டிருப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாக சேய் கூறுகிறார்.

இந்த ஆய்வுகளில், ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்டவர்கள், அவர்களுடைய திறமைகள் இயற்கையாக அமைந்தால் தான் நல்லது என எண்ணுகின்றனர் என்றும், தேவைப்படும் நேரத்தில் அதற்கேற்றாற் போன்று சிந்திப்பவர்கள், திறமையைக் காட்டிலும் உழைப்பை அதிகம் நம்புகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், பெரும் பிரச்னைகள் ஏற்படும் போது கூட, அவற்றைக் கடந்து முன்னேற்றம் காண்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகளை அறிந்த பின், பெரும்பாலான கல்வி நிலையங்கள், தங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது போல் கடின உழைப்பு குறித்த சிந்தனையை வளர்க்கும் கல்வியை அளிக்கத் தொடங்கியுள்ளன.

"மனநிலை குறித்த பெரும்பாலான ஆய்வுகள், பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டு நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை வடிவமைக்கும் வகையில் உள்ளன," என்கிறார் லண்டன் தொழிற்கல்வி நிலையத்தின் துணை பேராசிரியர் அனீதா ராட்டன். "சியா - ஜங் சேயின் ஆய்வு முடிவுகள், நாம் எப்படி பிறரைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்ற நிலையையே தலைகீழாக மாற்றியுள்ளது."

இயற்கையாக அமைந்த திறமைகளுக்கே முன்னுரிமை அளிக்கும் தலைவர்கள், கடின உழைப்பைச் செலுத்தும் நபர்களுக்கு ஆதரவளிப்பது போல் பாவனை செய்வதாக அவர் சந்தேகிக்கிறார். சரியான நிர்வாகிகள், இது போன்ற ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார்கள் என அவர் நம்புகிறார். "நாம் இது போன்ற பாரபட்சமான முடிவுகளை எட்டவேண்டிய நிலை வந்தால், நம்மை நாமே சரிபடுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கவேண்டும்."

திறமையும், உழைப்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளின் படி, இயற்கையான திறமைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது தெரியவந்துள்ளது

சமநிலையுடன் கூடிய பார்வை

தனிநபர் என்ற எல்லைக்குள், இயற்கையான திறமைகள் தான் சிறந்தவை என எண்ணம் கொண்டவராக நாம் இருந்தால், அது நாம் பிறரை எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை வெகுவாகப் பாதிக்கும்.

ஆளுமை மற்றும் சமூக உளவியல் சமூகம் சார்ந்த கல்விநிலைய ஆண்டு விழாவின் போது, சியா - ஜாங் சேயின் சக பணியாளர் ஒருவர் தற்போது தொழில் அதிபர்களாக இருக்கும், பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 6,000 பேரிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை சமர்பித்தார்.

அவர்களுடைய தொழில் பயணம் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பியபோது, 80 சதவிகிதம் பேர் அவர்களுடைய உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் காரணமாக முன்னேறியதாகவே தெரிவித்தனர். அது அவர்கள் எதிர்பாராத முடிவுகளாகவே இருந்தன. "அது உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொண்டதை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டின," என்கிறார் கார்ட்லேண்ட்.

கர்வமுடையவர்களாகக் காட்டிக்கொள்வதை பலர் விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, இயற்கையாக அமைந்த திறமைகளைக் கடந்து கடினமான உழைப்பைச் செலுத்தினால் தான் அது அவர்கள் சரியான முறையில் செயல்படுவதாகக் காட்டும் என பலர் நம்புகின்றனர். ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும் போது, கர்வத்துடன் அந்த நேர்காணலில் பங்கேற்றால், அது விரும்பத்தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதை விட, உடன் பணியாற்றுபவர்களுடன் ஒத்துப் போகாத குணாதிசயங்களைக் கொண்ட நபர் என்பதையே காட்டும்.

இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட, பென்சில்வேனியாவைச் சேர்ந்த அர்காடியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் கிறிஸ்டினா ப்ரவுன், சில சூழ்நிலைக் காரணிகள் இயற்கையாக அமைந்திருக்கும் திறமையே பெரிது என்ற எண்ணம் கொண்டவர்களை மாற்றியமைக்கும் என்பதை நிரூபித்துள்ளார்.

ஒரு தனித்துவமான பணியாளராக மிளிர்வதற்கு இயற்கையாக அமைந்த திறமைகளே வழிவகுக்கும் என நம்பும் பலரைவிட, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலைகளில் உழைப்பை நம்பும் பணியாளர்களுக்கே தேவை அதிகமாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பணிகள் குழுவாக இணைந்து மேற்கொள்ளும் வகையிலேயே இருப்பதால், நாம் நமது இயற்கையான திறமைகளை மட்டுமே நம்பியிருப்பது, நமது பணிக்காலத்தின் போது பல போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.

இப்பிரச்சினையிலிருந்து மீளவேண்டுமானால், ஒரே ஒரு திறமையை மட்டும் நம்பியிருக்காமல், நமது வெற்றிக்கு பல விதங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக நாம் எங்கு அதிக உழைப்பை முதலீடு செய்திருக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டும். அதற்கு மாற்றாக நமது திறமை மட்டும் எங்கெங்கு நமக்கு உதவியிருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.

"நாம் நமது திறமைகள் மற்றும் உழைப்பை வெளிப்படுத்திய அனைத்து சாதகமான விஷயங்கள் குறித்தும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்," என்கிறார் சியா - ஜாங் சேய். "இயற்கையாக அமைந்த திறமைகளே ஒருவருக்கு பக்கபலமாக இருக்கும் என்ற எண்ணத்தை, ஒரு சார்பாக வைத்துக்கொள்ளாமல், கடின உழைப்பும் வெற்றிக்கு வித்திடும் என நம்பி சமச்சீராக அனைத்து காரணிகளையும் பயன்படுத்திக்கொள்ள முயலவேண்டும்."

உள்ளார்ந்த திறமை மற்றும் திறமைக்கு அப்பாற்பட்ட கடின உழைப்பு என்பதற்கு இடையேயான இடைவெளி 99-1 என்ற விகிதத்தில் இருந்தாலும், எடிசன் கூறியதைப் போல் 50-50 என்ற விகிதத்தில் இருந்தாலும், இந்த இரண்டும் உங்களை மாற்றியமைப்பதில் எவ்வாறு துணை நிற்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்தால் தான் உங்கள் வெற்றிக்கு தகுதியானவராக நீங்கள் மாறுவீர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: