You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
மியான்மரின் எல்லையில் உள்ள மாநிலத்தில் மே 3 அன்று பழங்குடியினர் குழுக்கள் பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான Meitei உடன், பொருளாதார நன்மைகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பாக மோதலில் தொடங்கியது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தெய் சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக பழங்குடியினரும், மெய்தெய் சமூகத்தினரும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது வன்முறையாக மாறியது.
இந்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவி வாகனங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஏன் இந்த வன்முறை என்பதைப் புரிந்து கொள்ள 7 கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் தெரிந்து கொள்வோம்.
1. மணிப்பூரின் புவியியல் மற்றும் சமூக அமைப்பு என்ன?
மணிப்பூரின் மக்கள்தொகை சுமார் 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும். இங்கு மெய்தெய், நாகா மற்றும் குகி என்ற மூன்று பெரிய சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.
மெய்தெய் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களில் இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். மெய்தெய் சமூகத்தின் குடிமக்களின் விகிதம் மக்கள்தொகையில் அதிகமாக உள்ளது. நாகர்கள் மற்றும் குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 60 பேரில் 40 பேர் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை, மணிப்பூரின் முதலமைச்சர்களாக பதவி வகித்த 12 பேரில், இருவர் மட்டுமே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.
மணிப்பூரின் புவியியல் அமைப்பு ஒரு கால்பந்து மைதானம் போல் உள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு அந்த கால்பந்து மைதானத்தில் உள்ள விளையாடும் இடத்தைப் போன்றது.
விளையாட்டு மைதானத்தின் நான்கு புறமும் உள்ள பார்வையாளர் அமரும் இடங்களைப் போன்று இந்த மாநிலத்தைச் சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி உள்ளது. மாநிலம் முழுவதும் 10 சதவீத நிலங்கள் மெய்தெய் சமூகத்தினர் வசம் உள்ளன.
இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தெய் சமூகத்தினர் பெரும்பாலான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள 90 சதவிகித நிலங்கள் பழங்குடியினர் வசம் உள்ளன.
2. உண்மையில் எதிர்ப்பும் வன்முறையும் ஏன் ஏற்பட்டன?
மணிப்பூரில் 34 பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நாகா மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மாநிலத்தில் பெரும்பான்மையாக அதாவது 64 சதவீத மக்கள்தொகை கொண்ட மெய்தெய் சமூகம், பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோருகிறது. இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த நிலையில், மெய்தெய் சமூகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் அளித்த புதிய தீர்ப்பால் இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு வந்தது.
மணிப்பூர் உயர் நீதிமன்றம், ஏப்ரல் 19 அன்று தனது உத்தரவில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் உள்ள மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிலையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், இதை பரிசீலிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் கடந்த 3-ம் தேதி அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் பேரணிக்கு ஏற்பாடு செய்தது.
'ஆதிவாசி ஏக்தா மார்ச்' என்ற பெயரில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் வன்முறையும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சண்டேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் இத்தகைய கூட்டங்களும் அணிவகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, டார்பந்தில் இதேபோன்ற அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் திரண்டபோது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
விஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன, தலைநகர் இம்பாலில் அதற்கடுத்த நாள் வன்முறை வெடித்தது. பிபிசியிடம் பேசிய ராணுவ பிஆர்ஓ லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், “இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்றார்.
கடந்த வியாழக்கிழமை காலை வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் இருந்து இதுவரை 4000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
ராவத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து சமூகங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3. மெய்தெய் சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே உள்ள முரண்பாடு என்ன?
மணிப்பூர் மக்கள்தொகை 30 வட்சம் - 35 லட்சம். இதில் மெய்தெய் சமூகத்தினர் 64 சதவீதமாக உள்ளனர். இவர்கள் இம்பால் பகுதியில் வசிக்கின்றனர்.
மெய்தெய் சமூகத்தை ஒரு பட்டியிலின பழங்குடியாக அறிவிப்பதை எதிர்க்கும் பழங்குடியினரில் குகி என்ற ஒரு குழுவும் உள்ளது. இதில் பல பழங்குடியினர் அடங்குவர்.
மணிப்பூரின் முக்கிய மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினரின் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் ஆகும்.
எனவே, மெய்தெய் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் பலனடைவார்கள் என்பதால், அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என மலைவாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறை சம்பவங்கள், மாநிலத்தின் சமவெளிகளில் வாழும் மெய்தெய் குழுவிற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே பழைய வகுப்புவாத மோதலை மீண்டும் கிளப்பியுள்ளது.
1949 இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்ததற்கு முன்பு, ஒரு பட்டியல் பழங்குடி என்ற அந்தஸ்து இருந்ததாகவும், இருப்பினும், இணைப்புக்குப் பிறகு அது முடிவுக்கு வந்ததாகவும் மெய்தெய் இனத்தினர் கூறுகின்றனர். மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
4. மெய்தெய் சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதில் சர்ச்சை ஏன்?
நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒரு கருத்தை அளித்துள்ளது. ஏனெனில் மணிப்பூரில் மெய்தெய் சமூகத்தினர் நீண்ட காலமாக பழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கை மெய்தெய் குழுவை பிளவுபடுத்தியுள்ளது. மெய்தெய் மக்களில் ஒரு பகுதியினர் இக்கோரிக்கையை ஆதரிக்கின்றனர். சிலரிடம் எதிர்ப்பு இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் பன்ஜோபம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பட்டியலின பழங்குடியினர் கோரிக்கைக் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை. அதனால் இந்தச் சமூகம் நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதன் காரணமாக அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் போராட்டத்தை தொடங்கியது.
மெய்தெய் சமூகம் ஏற்கனவே பிற பட்டியலின சமூகங்களுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகம் கூறுகிறது.
இந்நிலையில் மெய்தெய் சமூகத்தினர் அதனையும் பெற முடியாது என்றும், அவர்கள் பழங்குடியினர் அல்ல என்பதுடன், எஸ்சி, ஓபிசி மற்றும் பிராமணர்களுக்கான சமூக அந்தஸ்த்தையே பெறமுடியும் என பழங்குடி சமூகம் கூறுகிறது.
மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளித்தால், அது பழங்குடியினர் நிலங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் அதனால் அவர்களை ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகம் கூறுகிறது.
மெய்தெய் சமூகத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியாது என்றும், ஆனால் குகி மற்றும் எஸ்டி அந்தஸ்து கொண்ட பழங்குடியினர் இம்பாலில் வந்து வாழமுடியும் என்றும் கூறினார்.
மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து அளித்தால் தங்களுக்கு வாழ இடம் இல்லாமல் போய்விடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் கூறுகின்றனர்.
5. தவறான தகவல் மற்றும் வதந்திகளால் வன்முறை தூண்டப்பட்டதா?
மணிப்பூரின் மூத்த பத்திரிகையாளர் யும்னம் ருப்சந்திரா சிங் பேசுகையில், "மணிப்பூரில் உள்ள தற்போதைய அமைப்பைப் பார்க்கும்போது, மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று வாழ முடியாது என்றும், 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சமவெளிப்பகுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மெய்தெய் இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தை நாடிய குழுவின் கூற்றுப்படி, அவர்களின் கோரிக்கை வேலை, கல்வி அல்லது வரி விலக்கு மட்டுமல்ல. பூர்வீக நிலம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
ரூப்சந்திரா பேசியபோது, பழங்குடியினர் அந்தஸ்து விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கவேண்டும் என புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
உண்மையில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மக்களுக்கு இடையேயான தகராறு மிகவும் பழமையானது மற்றும் உணர்வுப்பூர்வமானது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொய்யான வதந்திகள் பரவியதால் தான் வன்முறை வெடித்துள்ளது என்றார்.
6. முதல்வர் பிரேன் சிங் ஏன் விமர்சனத்திற்கு உள்ளானார்?
வன்முறைக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, முதல்வர் பிரேன் சிங், அபின் சாகுபடியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பதாகவும், இந்த முயற்சி வெற்றி பெற்றால், அது பழங்குடியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மியான்மர் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக மணிப்பூருக்கு வந்து குடியேறுபவர்களுக்குத் தடை ஏற்படும் என்றும் இது தொடர்பான அச்சத்தின் காரணமாக அவரைப் பதவியில் இருந்து அகற்ற சதி நடப்பதாகவும் தெரிய வருகிறது.
7. இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்?
இடஒதுக்கீடு பிரச்னையில் தொடங்கிய மோதலில் இதுவரை 52 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்