You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா ஸ்டோரி: மமதா தடையும், யோகியின் சலுகையும் - திரைத்துறையினர் எதிர்ப்பது ஏன்
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அப்படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளன. மறுபுறம், இந்த படம் வன்முறையை தூண்டக்கூடும் எனக்கூறி அதைத் திரையிட மேற்கு வங்கத்தில் அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானபோதே இந்த படத்தின் மீதான சர்ச்சையும் தொடங்கியது.
அந்த ட்ரெய்லரில் 'பல்வேறு உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வாசகங்கள் பெரும் விவாதத்தை தூண்டின. ஷாலினி என்ற இந்து பெண் கதாபாத்திரத்தில் வரும் அடா ஷர்மா, லவ் ஜிகாத் மூலமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் பெண் ஃபாத்திமாவாக மதமாற்றம் செய்யப்படுகிறார்.
பின்பு ஷாலினி உட்பட 48 பேர் ஐஎஸ்ஐஎஸ் குழுவுக்காக வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவது போல காட்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும், "அடுத்த 20 வருடங்களில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று நம் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்," என்று ஒரு வசனம் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.
சங் பரிவாரின் பொய் தொழிற்சாலை
தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், 'லவ் ஜிகாத்' என்பது நீதிமன்றங்கள், புலனாய்வு அமைப்புகள், உள்துறை அமைச்சகத்தால் கூட நிராகரிக்கப்பட்ட ஒரு சொல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற பிரசார படத்தையும், அதில் இஸ்லாமியர்கள் காட்டப்பட்ட விதத்தையும், கேரள மாநிலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் சங் பரிவாரங்களின் முயற்சிகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"சங் பரிவார அமைப்புகளின் பொய் தொழிற்சாலையில் உருவான மற்றொரு படைப்பு" என இந்த படத்தை பற்றி விமர்சித்துள்ள கேரள முதலமைச்சர், இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
படக்குழு தெரிவித்தது என்ன?
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா தமது படத்துக்கு எழும் விமர்சனங்கள் பற்றி ஊடகங்களிடம் பேசும்போது, "படத்தின் தொடக்கத்தில் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளோம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் சமூகத்தில் யாரோ ஒரு நபருக்கு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்துப் பேசி சேகரித்த தகவலின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இதனை தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.
படத்தைத் தடைச் செய்யக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து விட்டன.
தமிழ்நாட்டில் என்ன நிலைமை?
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியும் தி கேரளா ஸ்டோரி படத்தின் திரையிடலை நிறுத்துவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.
அதன்படி தற்போது, முக்கிய திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நிறுத்தப்பட்டன.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகள், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இப்படத்துக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பிரதமர் நரேந்திர மோதி, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
சமூகத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் விளைவுகளை இப்படம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தடை
இதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மாநிலம் முழுவதும் தடை விதிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, "சமூகத்தின் ஒரு பிரிவினரை இழிவுபடுத்துவதற்காக கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை உருவாக்கினார்கள். தற்போது கேரள மாநிலத்தையும் அவதூறு செய்கிறார்கள். அன்றாடம் தங்கள் கதை மூலம் அவதூறு செய்கிறார்கள்," என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் படத்துக்கு விதிக்கபட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக படக்குழு அறிவித்தது.
தமிழ்நாடு அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடாதவாறு தமிழ்நாடு அரசு செய்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
"படங்களை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ முறை அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதை இந்த முறை அவர்களுக்கு நாங்கள் திருப்பிக் கூறுகிறோம்," என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சினிவாசன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "மக்களை அச்சுறுத்த இது போன்ற தேவையற்ற விஷயங்களை பிறர் மூலம் சொல்ல வைத்து மக்களை பதற்றத்தில் ஆழ்த்துகிறது திமுக அரசு. உண்மையிலேயே மத அடிப்படைவாத பயங்கரவாத சக்திகளால் அச்சுறுத்தல் இருக்குமேயானால், அந்த பயங்கரவாத தீய சக்திகளை அடக்கும் முயற்சியில் இறங்குவதை விடுத்து, திரை அரங்குகளிலிருந்து திரைப்படத்தை நீக்குவது கோழைத்தனம் மட்டுமல்ல அபாயகரமானதும் கூட," என்று தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்கள் கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் பிபிசி தமிழ் பேசியது.
"தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டது. சுமாரான வசூலை அப்படம் கண்டது. எனினும், சட்டம் ஒழுங்கு, திரையரங்க பாதுகாப்பு கருதி அப்படத்தின் திரையிடலை நிறுத்துவதாக அறிவித்தோம். தற்போது தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் அப்படம் திரையிடப்படவில்லை," என்று கூறினார் ஸ்ரீதர்.
தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாகவே தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் திருச்சி ஸ்ரீதர்.
"வசூலுக்காக மட்டுமே படத்தின் திரையிடலை நாங்கள் நிறுத்தவில்லை. திரையரங்குகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தை எடுக்க பல கோடிகளில் முதலீடு செய்கிறோம். யாராவது திரையரங்கம் மீது கல்லை எறிந்தாலோ கண்ணாடிகளை உடைந்துவிட்டாலோ நஷ்டம் ஏற்படும். இதேபோல், ஒரு மல்டிபிளக்ஸில் 4, 5 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஒரு ஸ்கிரீனில் கேரளா ஸ்டோரி திரையிடப்படுகிறது எனும்போது, அதனருகே ஓடும் மற்ற ஸ்கிரீனில் படம் பார்க்க வருவோரின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படம் திரையிடுவதை நிறுத்தினோம்," என்கிறார் ஸ்ரீதர். ஒருவேளை படத்தை திரையிட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தீர்ப்பை மதிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
திரைப்படத்துக்கு தடை விதிப்பது சரியா?
ஒரு திரைப்படத்துக்கு தடை விதிப்பது என்பது தவறானப் போக்கு என்று கூறும் திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ""படைப்பாளிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு சமூகமாக நாம் தற்போது அனுபவித்து வரும் பல விஷயங்கள், ஒரே நாளில் மாறியவை அல்ல. 30, 40 ஆண்டுகளாக திரைகளில் பார்த்தவற்றின் தாக்கத்தால் ஏற்பட்டவை. சினிமா, யூடியூப் போன்ற ஊடகங்களுக்கு சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை," என்கிறார்.
"நீங்கள் தடை விதிக்கத் தொடங்கி விட்டால், கருத்து சுதந்திரத்தை தடை செய்வது போல ஆகிவிடும். அதேநேரத்தில் திரைப்படத்தை எடுப்பவர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. சமூகத்தில் ஒரு படம் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றால், அதை தடை செய்துதானே ஆக முடியும். சினிமாவில் அரசியல் பேசலாம் தவறு இல்லை. ஆனால், மக்களை தவறாக வழிநடத்துவதற்கு திரைப்படங்களை பயன்படுத்தும் போக்கை நான் அச்சமுடன் பார்க்கிறேன்," என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
வரிவிலக்கும் தவறு, தடையும் தவறு
திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "திரைப்படங்கள் தணிக்கைக்குழுவோடு நிற்பதோடு நல்லது," என்று கூறினார்.
"தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மட்டுமல்ல, அனைத்துப் படங்களுக்குமே இது பொருந்தும். பாஜகவுக்கு ஆதரவாக படம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த கட்சி ஆளும் மாநிலங்களில் படத்திற்கு வரிவிலக்கு அளித்திருப்பது தவறு. ஒரு சாரருக்கு எதிரானதாக இருப்பதாக கூறப்படும் நிலையில், வரி விலக்கு அளிப்பது என்பது 'தூண்டி விடுவது' போல் ஆகிவிடும். அதேபோல், இன்னொரு மாநிலத்தில் தடை விதிப்பதும் தவறு," என்கிறார் செல்வமணி.
"நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது நீதிமன்ற அவதூறு ஆகும். தணிக்கைக் குழுவும் நீதிமன்றம் போன்றதுதான். அவர்கள் ஒரு படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், அப்படத்தை எதிர்ப்பது தவறு. இதுபோன்ற விஷயத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, மக்களின் முடிவுக்கே திரைப்படங்களை விடுவதுதான் சரியாக இருக்கும். மக்களுக்கு எதிரானதாக இருந்தால் அந்த படம் நிச்சயம் காணாமல் போய்விடும்," என்கிறார் செல்வமணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்