You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித்தும் நாக சைதன்யாவும் 'அந்த விஷயத்தில்' ஒரேமாதிரி: வெங்கட் பிரபு பேட்டி
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் சினிமாவில் இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு, பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர்.
அவர் இயக்கிய சென்னை-28, சரோஜா, மங்காத்தா, கோவா, மாநாடு போன்ற பெரிய அளவில் பேசப்பட்டன.
தற்போது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் “கஸ்டடி”திரைப்படத்தை இயக்கி அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
அவர் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல்.
கேள்வி: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி, அரவிந்த் சாமி, சரத் குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இத்தனை நட்சத்திரங்களை ஒரே திரைப்படத்தில் இயக்குவது எப்படி இருந்தது?
பதில்: என்னுடைய பெரும்பாலான திரைப்படங்கள் மல்ட்டி ஸ்டார்ஸ் ஃபிலிமாகவே இருக்கும். அதனால் எனக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி, அரவிந்த் சாமி, சரத் குமார் என அனைவரும் தொழில் ரீதியாக மிகச்சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் வெங்கட் பிரபு என்றால் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கூலாக இருப்பார் எனத் தெரியும், அதற்கேற்றார் போல அவர்களும் மிகச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர்.
கேள்வி: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கஸ்டடி திரைப்படத்தை எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது?
பதில்: ஒவ்வொரு ஷாட்டையும் தமிழிலும், தெலுங்கிலும் காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. அதிலும், தெலுங்கு நடிகர்களுக்கு தமிழ் வரவில்லை. நேர பற்றாக்குறையால் அவர்களுக்கு வசனங்களை சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், படப்பிடிப்பின் போது, மானிட்டரில் அவர்களது உச்சரிப்பைப் பார்ப்பதா அல்லது அவர்களது உணர்வு ரீதியான நடிப்பைப் பார்ப்பதா என குழப்பம் ஏற்ப்பட்டது. இதனால் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாயிருந்தது. நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்கள் உழைப்பை இரண்டு மடங்காக அளிக்க வேண்யதாயிருந்தது.
கேள்வி: நாக சைதன்யா தமிழ் பேசியது பற்றி…
பதில்: அஜித் சார் ஆரம்ப கால கட்டத்தில் ஒரு தமிழ் பேசினாரல்லவா, அது போல இருந்தது நாக சைத்தன்யாவின் உச்சரிப்பு. அவர் படித்து, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். எனவே அவருக்கு நன்றாக தமிழ் தெரியும். ஆனால், ஹைதராபாத்தில் வசித்து வருவதால் தமிழ் உச்சரிப்பு சற்று மாறி விட்டது. எந்த மொழியாயிருந்தாலும் அப்படித்தானே, நாம் புழக்கத்திலேயே இருக்க வேண்டுமல்லவா. டப்பிங்கில் எனது உதவி இயக்குனர்கள் நாக சைத்தன்யாவிற்கு உதவிகரமாக இருந்தனர்.
கேள்வி: மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து விட்டு ஏன் ரஜினி, கமல், விஜய், மீண்டும் அஜித் என உச்ச நட்சத்திரங்களை இயக்காமல், மறுபடியும் இளம் தலைமுறை நடிகர்களை இயக்க செல்கிறீர்கள்?
பதில்: எனக்கும் ரஜினி, கமல், விஜய், மீண்டும் அஜித் என உச்ச நட்சத்திரங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனை திட்டமிடவெல்லாம் முடியாது, அது அப்படியே அமைய வேண்டும். எனக்கு எப்பொழுதும் இளம் நாயகர்களைப் பற்றிய கதைகளே தோன்றுகின்றன. அவ்வளவு ஏன் நான் மங்காத்தா திரைப்படமே அஜீத் அவர்களுக்கென்று யோசிக்கவில்லை. தற்செயலாக தான் அஜீத் திரைப்படத்திற்குள் வந்தார்.
இப்பொழுது இயக்கியுள்ள “கஸ்டடி” திரைப்படத்திற்கு எனது முந்தைய எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு பொருட் செலவு செய்துள்ளோம். நாக சைத்தன்யாவை பொறுத்தவரையில், டோலிவுட்டில் அவருக்கென எந்த இமேஜும் இல்லை, ஆனால் மார்க்கெட் உள்ளது. இங்கே தமிழில் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டுமென்றால், ஹீரோ இமேஜ் இல்லாதவர்களுக்கு எந்த தயாரிப்பாளரும் இவ்வளவு செலவு செய்ய மாட்டார்.
மேலும், ஹாலிவுட்டில், நீங்கள் இது போன்ற ஒரு கேள்வியை கேட்கவே முடியாது. ட்ரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தில் யார் ஹீரோ என்று கேட்டால் உங்களால் கூற முடியாது, அவதாரில் யார் ஹீரோ என்று கேட்டால் கூற முடியாது. அங்கும் இயக்குநர்கள் இளம் நடிகர்களை வைத்து தான் இயக்குகிறார்கள், ஆனால் அத்திரைப்படங்களை பிரம்மாண்டமாக அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறார்கள். டைட்டானிக் என்ற திரைப்படம் வருவதற்கு முன்பு இங்கு யாருக்கும் லியானர்டோ டி காப்ரியோ என்ற நடிகரை தெரியாது. ஆனால், மிகப் பெரிய பொருட் செலவில் தயாரான டைட்டானிக் என்ற திரைப்படத்திற்கு பின்பு அவர் மிகப் பெரிய நடிகராக உலகளவில் கண்டறியப்பட்டார். நான் இதே ஃபார்முலாவைத் தான் பின்பற்ற விரும்புகிறேன்.
கேள்வி: இன்றைக்கு சாமானிய மக்கள் கூட தொழில் நுட்ப வளர்ச்சியால் விஷ்வல் மீடியா நோக்கி நகர்ந்து விட்டனர். 30 நொடியில் ரீல்ஸ், டிக் டாக் என அனைவரும் ஈர்க்கப்பட்டு, சிலர் திரைப்படத் துறைக்குள்ளும் நுழைகின்றனர். இதில், இன்றைய தலை முறை இயக்குநர்கள் தங்களது வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது?
பதில்: நான் எடுக்கும் திரைப்படங்கள் இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் தான் திரைத்துறையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு புத்திசாலித்தனமான கதையை யோசித்தாலும் அது இளைஞர்களுக்கு பிடித்தமானதாக பொழுது போக்கு தன்மையுடன் இருக்கிறதா என்பதில் கவனமாக இருப்பேன். முதலில் எந்த ஒரு இயக்குநரும் வணிக ரீதியான வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும். இயக்குநர் வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கூட முதலில் கமர்ஷியலான திரைப்படங்களையே கொடுத்தனர். இதையே தான் நான் எனது உதவி இயக்குனர்களிடமும் கூறுவேன்.
கேள்வி: உங்கள் திரைப்படங்களில் கதை இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறதே?
பதில்: என் திரைப்படங்களில் கதை இல்லை என்பதை நானே கூறி சிரித்துக்கொள்வதுண்டு. ஆனால், கதை இல்லாமல் எந்த தயாரிப்பாளரும் திரைப்படத்தை தயாரிக்க முன்வருவதில்லை. எந்த நடிகரும் முன்வருவதில்லை. என் கதையில் காமெடி ட்ரீட்மெண்ட் அதிகமாக இருப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். அதனால் கூட அப்படி ஒரு குற்றச்சாட்டு எழலாம். ஆனால், எப்படியிருந்தாலும், என் திரைப்படத்தை மக்கள் இரண்டு, மூன்று முறை பார்ப்பார்கள் என என்னால் உறுதியாக கூற முடியும்.
கேள்வி: இன்றைய டிஜிட்டல் மீடியா வளர்ச்சி, ஓடிடி வருகை இதையெல்லாம் மீறி ஒரு இயக்குநர் ரசிகனை தியேட்டருக்கு வர வைக்க எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது?
பதில்: சாமானிய ரசிகனை தியேட்டருக்குள் வரவைக்க நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. எந்த மாதிரியான காட்சிப்படுத்தலில் அவர்களை உற்சாகப்படுத்தலாம் என்பது உட்பட தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் நகைச்சுவையான திரைப்படங்கள் எடுக்க முயல்கிறேன். சீரியஸ் திரைப்படங்கள் தியேட்டரில் எடுபடாது. அதனால்தான் சரோஜா திரைப்படம் எடுக்கும்போது அதனை காமெடி த்ரில்லர் திரைப்படமாக எடுத்தேன்.
கேள்வி: இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்கள் கருப்பொருளை (content) பொருத்தவரை மிகவும் அழுத்தமான கதையம்சம் என வலுபெற்று வருகிறார்கள், நீங்க இப்போவும் ரொம்ப ஜாலியான ஃபார்முலாவிலேயே இருக்கீங்க...
பதில்: நான் அப்படி ஜாலியான படங்கள் எடுத்தாலும் சினிமாவில் இத்தனை வருடங்கள் நிலைத்து நிற்கிறேன். அப்படியென்றால் என்னிடமும் கண்டெண்ட் இருக்கு என்று தானே அர்த்தம்.
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. இங்கு மிகச்சொற்பமான இயக்குநர்களே மக்களை மகிழ்விக்கிறார்கள். அப்படி, என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜனரஞ்சகமான படங்களை இயக்கி மக்களை மகிழ்விக்கிறேன். நான் மக்கள் பிரச்னையைப் பற்றியோ, அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியோ படம் எடுக்க விரும்பவில்லை. அது போல், எனக்கு சிந்திக்கவும் வரவில்லை. கருத்தோ, அறிவுரையோ சொல்லவும் விருப்பமில்லை. அப்படிப் பார்த்தால், மாநாடு திரைப்படத்தில் இங்கு இஸ்லாமியர்கள் என்றாலே எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற மிகவும் முக்கியமான விசயத்தையே விவாதித்தேன். “கஸ்டடி” திரைப்படத்திலும் மிகவும் சீரியஸான சம்பவத்தை எனக்கே உரித்தான கமெர்ஷியல் பாணியில் தான் இயக்கியுள்ளேன்.
கேள்வி: இன்றைய தமிழ் சினிமா சூழலில் இயக்குநர்கள் ஸ்டூடியோக்களைத் தேடி ஐதராபாத்திற்கே செல்கிறார்களே, இது சரியா? அப்படியென்றால் இங்கிருக்கும் செளண்ட் யூனிட், லைட் யூனிட் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களே?
பதில்: இப்பொழுது சினிமாவில் தொழில் நுட்ப வளர்ச்சியை உபயோகப்படுத்துவதற்கு எல்லை எதுவும் இல்லை என நினைக்கிறேன். சென்னையில் தற்போது ஸ்டூடியக்களே இல்லை, அதுதான் உண்மை. வாணி ஸ்டூடியோ இல்லை, ஏவிஎம் ஸ்டூடியோ இல்லை. இவைகளுக்கு மாற்றாக இப்பொழுது தான் ஸ்டூடியோக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இவிபியில் சில ஃப்ளோர்கள் திரைப்படம் தயாரிக்க உதவியாக இருக்கிறது. ஆனால், ஐதராபாத்தில் ராமநாராயணன் ஸ்டூடியோ, அன்னபூர்ணா ஸ்டூடியோ, ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டி என நிறைய உள்ளன. அவை அனைத்தும் ஃபிலிம் ஃப்ரெண்ட்லியாகவும், ஷூட்டிங் ஃப்ரெண்ட்லியாகவும் இருக்கின்றன. அங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள், இஞ்ஜினியர்கள் பலரும் தமிழர்களாகவே உள்ளனர் என்பதும் மகிழ்ச்சிகரமான விஷயம். ஒடிடி தள வருகையால் சினிமாவில் எல்லைகளை தாண்டி பணியாற்ற ஆரம்பித்துவிட்டோம் என்பதே உண்மை.
கேள்வி: தற்போதைய தமிழ் சினிமா கருத்துகளையும், கொள்கைகளையும் மையப்படுத்த விரும்புவதாக இருக்கிறது. இயக்குநர்கள் எதாவதொரு கருப்பொருளை எடுத்து அதனை மக்களிடையே விவாதத்தை உருவாக்க விரும்புகிறார்கள். அப்படி நீங்கள் ஒரு கருப்பொருளை எடுத்து விவாதிக்க விரும்பினால் அது என்னவாக இருக்கும்?
பதில்: நான் லண்டனில் படித்தவன். மதத்தாலேயோ, சாதியாலோ எனக்கு தீண்டாமை பிரச்னை இந்தியாவில் இருந்தவரை நிகழவில்லை. ஆனால், இந்தியாவை விட்டு வெளியே சென்றபோது தான் எனக்கு புரிந்தது இங்கே நாம் சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவு பட்டுக்கிடக்கிறோம், ஆனால் அங்கு அவர்களை பொறுத்தரை இந்தியன் என்றால் கறுப்பினத்தவன்; அவர்களைப் பொறுத்தவரை நாம் அனைவரும் ஒன்று தான். நான் அங்கு நிறத்தால் இனவெறிக்கும் (racism), சிக்கலுக்கும், இன்னலுக்கும் ஆளானேன். எனவே, நான் இனவெறி பற்றி திரைப்படம் எடுக்க விரும்புகிறேன்.
கேள்வி: பொன்னியின் செல்வன் 2, பீட்சா 3 என சரமாரியாக சீக்குவல் திரைப்படங்கள் தற்போது வெளியாகின்றன. நீங்கள் அப்போதே சென்னை 28- 2ஆம் பாகத்தை எடுத்தீர்கள், தற்போது உங்கள் தந்தையின் திரைப்படம் ஒன்றின் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் எந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பீர்கள்?
பதில்: அப்பாவின் திரைப்படங்களில் கரகாட்டக்காரன் 2-ஆம் பாகத்தை நீங்கள் இயக்க வேண்டும் என நிறைய ரசிகர்கள் என்னிடம் கூறுவது உண்டு. அது ஒரு க்ளாசிக் திரைப்படம்; அதன் சீக்குவல் திரைப்படம் என்று நான் எதையோ ஒன்றை எடுத்து சொதப்ப வேண்டாம் என நினைக்கிறேன். அதே போல், என்னுடைய திரைப்படங்களிலேயே, கோவோ-2, மங்காத்தா-2 எப்பொழுது என்று என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு. நான் சீக்குவல் கதைகள் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அது தான் உண்மை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்