இந்திய அணி சாதனை வெற்றி - கடைசி 6 ஓவர்களில் நடுங்கும் இலங்கை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் பல்லேகலே நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை ஆடவர் அணியை தங்களின் சுழற்பந்துவீச்சால் வீழ்த்தி, சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னாய், அக்ஸர் படேல், ரியான் பராக் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு காரணமாக அமைந்தனர்.
2-ஆவது டி20 ஆட்டத்திலும் ஆட்டத்தின் பிற்பகுதியில் இலங்கை பேட்டர்கள் மோசமான விக்கெட் சரிவைச் சந்தித்து தங்களுக்குதாங்களே தோல்வியை தேடிக்கொண்டனர்.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியவுடனே மழை குறுக்கிட்டதால் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
இதையடுத்து, இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு, 8 ஓவர்களில் 78 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்து டக்வொர்த் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இந்திய டி20 அணிக்கு நிரந்தர புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலும்,புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தலைமையிலும் இந்திய அணி வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புதிய சாதனை படைத்த இந்திய அணி
இந்த வெற்றி மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிராக புதிய சாதனையைப் படைத்தது. அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி புதிய சாதனையைப் படைத்தது. இலங்கைக்கு எதிராக மட்டும் 21 வெற்றிகளை இந்திய அணி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இலங்கை வீரர்களைத் திணறவைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்
4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 12 டாட்பந்துகளையும் வீசிய ரவி பிஷ்னாய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரியான் பராக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி முடித்தார்.
இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும்தான் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். 3 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்களை வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதிலும் கடைசி 5 டெத் ஓவர்களில் இலங்கைக்கு எதிராக 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி சரிவை ஏற்படுத்தினர்.
ரியான் பராக் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்டத்திலும் பந்துவீசினார். விக்கெட்டின்றி பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சு இலங்கை பேட்டர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களின் வீசும் பந்து திரும்பு அளவைவிட, ரியான் பராக் வீசிய பந்து நன்றாக டர்ன் ஆகியது. அக்ஸர் படேல் வீசிய பந்து 3 டிகிரியும், பிஸ்னோய் வீசிய பந்து ஒரு டிகிரியும் டர்ன் ஆகிய நிலையில் ரியான் பராக் வீசிய பந்துகள் 3.7 டிகிரி டர்ன் ஆகி திகைக்க வைத்தது. விக்கெட்டின்றி ரியான் பராக் பந்துவீசினாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாகச் செய்தார்.
முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் இருவரின் பந்துவீச்சும் கடந்த 2 போட்டிகளாக சிறப்பாக எடுபடவில்லை. அதிலும் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அர்ஷ்தீப் 3 ஓவர்களை வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சிராஜ் விக்கெட்டின்றி 3 ஓவர்களை வீசினார்.

பட மூலாதாரம், Getty Images
நாங்கள் முன்பே தீர்மானித்தோம் - சூர்யகுமார்
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “எந்தவிதமான பிராண்ட் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் என்பதை இந்த தொடர் தொடங்கும் முன்பே நாங்கள் பேசினோம். குறைந்த இலக்காக இருந்தபோதிலும்கூட, நாங்கள் என்ன பிராண்ட் கிரிக்கெட்டை ஆடப் போகிறோம் என்பதை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தினோம். காலநிலை மோசமாக இருந்ததால், 150 ரன்களுக்குள் இலக்கு இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். அதற்கு ஏற்றபடி மழையும் எங்களுக்கு உதவியது. எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர், அற்புதமாக பந்துவீசினர். அடுத்த போட்டியில் புதிய ப்ளேயிங் லெவன் குறித்தும், எவ்வாறு ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிப்போம். எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதை மழை உணர்த்திவிட்டது” எனத் தெரிவித்தார்.
கடைசி 6 ஓவர்களில் நடுங்கும் இலங்கை
இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், கடைசி 6 ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுள்ளது. கடந்த 2 ஆட்டங்களிலும் கடைசி 6 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து 16 விக்கெட்டுகளை இலங்கை இழந்து 6 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. சனிக்கிழமை நடந்த முதல் டி20ஆட்டத்தில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது, நேற்றைய ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை பறிகொடுத்தது.
ஆனால், இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் முதல் 14 ஓவர்களில் 263 ரன்களை சேர்த்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 9.39 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. கடைசி 6 ஓவர்களில்தான் இலங்கையின் பேட்டிங்கில் திடீர் சரிவு ஏற்பட்டு, தோல்வி அடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வாய்ப்பை தவறவிட்ட சாம்ஸன்
மழை காரணமாக 45 நிமிடங்களுக்குப்பின் ஆட்டம் தொடங்கியது, டக்வொர்த் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 8 ஓவர்களில் 78 ரன்கள் என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சுப்மான் கில்லுக்கு கழுத்து வலி காரணமாக அவருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்று சஞ்சு சாம்ஸன் நேற்று களமிறங்கினார். இக்கட்டான சூழலில் பேட் செய்த சாம்ஸன், தீக்சனா வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
சூர்யகுமார், ஜெய்ஸ்வால் அதிரடி
ஆனால் ஹசரங்கா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் சூர்யகுமார், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 16 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு இருந்த நெருக்கடியைக் குறைத்தனர். தீக்சனா வீசிய 4வது ஓவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 15 ரன்களை சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தார். இந்த இரு ஓவர்கள்தான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக மாறி, ரன்ரேட்டைக் குறைக்க உதவியது.
பதிராணா வீசிய 4வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த சூர்யகுமார், அடுத்த பந்தில் லாங்ஆனில் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சிறப்பான கேமியோவை ஆடினார்.
ஹசரங்கா வீசிய 6வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி சிக்ஸரும், ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸரும் விளாசினர். ஜெய்ஸ்வால் தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை மாற்றாமல் பேட் செய்து ஸ்வீப் ஷாட்டிலும், ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் பவுண்டரிகளை விளாசி 30 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பதிராணா வீசிய 7–ஆவது ஓவரில் ஹர்திக் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹர்திக் 22 ரன்களிலும், ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நல்ல தொடக்கம், மோசமான முடிவு - இலங்கையின் தோல்விக்கு காரணம் இதுதான்
இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் போட்டியைப் போன்றே இந்த ஆட்டத்திலும் நிசங்கா, மென்டிஸ் அதிரடியாகத் தொடங்கினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய 4வது ஓவரில் ஸ்லோவர் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு மென்டிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வந்த பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். பவர்ப்ளேயில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என வலுவாக இருந்தது.
நிசங்கா முதல் போட்டியைப் போல் இந்த ஆட்டத்திலும் சீராக ரன்களைச் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார். ஆனால், பிஷ்னாய் வீசிய 10-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி நிசங்கா 32 ரன்னில் வெளியேறினார். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். குஷால் பெரேரா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அடுத்து வந்த கமிந்து மென்டிஸ் அதிரடியாக ஆடினார், இதனால் 130 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்து. ஆனால், மென்டிஸ் 24 ரன்னில் ஹர்திக் பாண்டியா வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுடன் ஆடி வந்த பெரேராவும் அதே ஓவரில் விக்கெட்டை இழக்க இலங்கை தடுமாறியது.
சரிவு தொடங்கியது
இதன்பின் இலங்கை அணியின் சரிவு தொடங்கியது. நடுவரிசை பேட்டர்களும், கீழ்வரிசை பேட்டர்களும் முதல் ஆட்டத்தைப் போன்று சொதப்பியதால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை மளமளவென இழந்தது. பிஷ்னாய் வீசிய 17-வது ஓவரில் சனகா, ஹசரங்கா இருவருமே டக்அவுட்டில் க்ளீன் போல்டாகினர். அக்ஸர் படேல் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா, மென்டிஸ் இருவரும் விக்கெட்டை இழந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












