பிக்பாஸ் வீட்டில் கடைசி வார 'ட்விஸ்ட்' - என்ன நடந்தது?

பட மூலாதாரம், VIJAY TV/ BIGG BOSS TAMIL
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'தமிழ்நாடு தமிழ்நாடுதான்' என்று விக்ரமன் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிக்பாஸ் அறிவித்த 3 லட்ச ரூபாய் பண முடிப்பை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறிவிட்டதால் பட்டத்திற்கான போட்டியில் 5 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் - சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கடைசி வாரத்தின் முடிவில் பிக்பாஸ் - சீசன் 6 தமிழ் பட்டத்தை வெல்வது யார் என்பது மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
கடைசி வாரத்தில் பொங்கல் பண்டிகை நாளும் வந்ததால், பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினராக நுழைந்தார்.
அங்கே, பொங்கல் வைக்கும் முன்பாக, போட்டியாளர்களை இரு பிரிவாக பிரித்து, தன்னை ஈர்க்கும் வகையில் செயல்படும் குழுவுக்கு பொங்கல் வைக்க 2 சிறப்புப் பொருட்களை கொடுக்கப் போவதாக திவ்யதர்ஷினி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைப்பதன் பாரம்பரியம் குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு விக்ரமன் அளித்த பதில்தான் இன்று இணைய உலகில் வைரலாகி வருகிறது.
"இன்று பொங்கல் பண்டிகை மட்டுமல்ல. நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளும் கூட. மெட்ராஸ் மாகாணமாக இருந்த நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி தமிழறிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரலிங்கனார் 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
எனினும், அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்க, 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா அடுத்த ஆண்டே அதனை நிறைவேற்றினார். அதன் பின்னரே நம் மாநிலம் தமிழ்நாடு என்று அழைக்கப்படலாயிற்று. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட காரணமாக இருந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் பொங்கல் வைக்கிறோம்" என்று விக்ரமன் கூறினார்.

பட மூலாதாரம், VIJAY TV/ BIGG BOSS TAMIL
விக்ரமன் பதிலால் பெரிதும் கவரப்பட்ட திவ்யதர்ஷினி, தான் ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கான சிறப்புப் பொருட்களை அவரிடம் அளித்தார். அப்போது, நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வந்த விதத்தை விரிவாக கூறியது என்பது குறித்து விக்ரமன் விளக்கம் அளித்தார்.
"அண்மைக் காலமாக தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் என்பது போன்ற கோரிக்கைகள் எழுவதை பார்க்க முடிகிறது. அப்போதெல்லாம் நீங்கள் அப்படி சொன்னால் பெரியார் நாடு என்று பெயர் சூட்டுவோம் என்று நான் கூறினேன். அந்த பின்னணியில்தான் தமிழ்நாடு பெயர் வந்ததன் பின்னணியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இதனை கூறினேன். பெரியார் நாடோ, அம்பேத்கர் நாடோ பெயர் எதுவாக இருந்தாலும் தமிழ்நாடுதான் மிகவும் பொருத்தமான பெயர்" என்றார் விக்ரமன்.
அதையே ஆமோதித்த திவ்யதர்ஷினி, " தமிழ்நாடு தமிழ்நாடுதான்" என்று கூற, அதையே விக்ரமனும் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னார்.

பட மூலாதாரம், VIJAY TV/ BIGG BOSS TAMIL
மற்றொரு போட்டியாளர் ஷிவின் பற்றி பேசிய திவ்யதர்ஷினி, "ஒரு ஆண் எப்படி யோசிப்பார் என்று நம் அண்ணன், பாய்ஃரெண்ட், அப்பா என பலரைப் பார்த்துள்ளோம். ஒரு பெண்ணையும் அம்மா, மகள், சகோதரி மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு டிரான்ஸ்ஜென்டர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களை பார்த்து அறிந்தோம்," என்று குறிப்பிட்டார்.
இது, ஷிவினை சங்கடப்படுத்த, அவருடன் 100 நாட்கள் ஒரே வீட்டில் பயணித்த விக்ரமன், கதிர் போன்றவர்கள் அதிர்ந்ததை அவர்களின் முகம் காட்டியது.
இந்த பிக்பாஸ் சீசனின் 100-வது நாளில் கடந்த சீசன்களைப் போலவே பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது. கடைசி வாரத்தில் போட்டியாளர்களில் ஒருவர் கொடுக்கப்பட்டுள்ள பணத்துடன் விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், VIJAY TV/ BIGG BOSS TAMIL
இதற்காக 3 லட்ச ரூபாய் பண முடிப்பும் போட்டியாளர்கள் முன்பாக வைக்கப்பட்டது. பண முடிப்பில் எவ்வளவு பணம் உள்ளது என்பது அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், குறைந்தபட்ச தொகையாக ரூ.3 லட்சம் காட்டப்பட்டது. அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உள்ளாகவே கதிரவன் அந்த தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள், சற்று நேரம் பொறுத்திருந்தால் தொகை இன்னும் அதிகரித்திருந்திருக்கும் என்று புலம்பியதை பார்க்க முடிந்தது.

பட மூலாதாரம், VIJAY TV/ BIGG BOSS
பிக்பாஸ் சீசன் 6 தமிழின் கடைசி வாரத்தில் கதிரவன் வெளியேறிவிட்டதால், தற்போதைய நிலையில் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே தற்போது பட்டத்திற்கான போட்டியில் நீடிக்கின்றனர். இந்த 5 பேரில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் 4 நாட்களில் தெரிந்துவிடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












