You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்துகளை பெற்றோர்கள் திரும்பப் பெற முடியுமா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
70 வயது சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகனிடம் இருந்து எந்த கவனிப்பும் கிடைக்காத காரணத்தால், தனது மகனுக்கு எழுதிவைத்திருந்த சொத்தை திருப்பிவாங்க முயன்றபோது மோசமான அனுபவத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
அவரது மகன் பலகாலமாக ஒரே வீட்டில் வசித்தபோதும், சொத்து பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறும்போது, அவருக்கு தெரியாமல் சொத்து ஆவணத்தை திருடிச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக போராடிய சுரேஷ், இறுதியில் சென்னை காவல்துறையை அணுகி, சொத்தை மீட்டிருக்கிறார்.
சுரேஷை போல பல முதியவர்கள், தங்களது வயதான காலத்தில், தனது பிள்ளைகள் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், சொத்தை தானமாக எழுதிக்கொடுக்கும்போது, அதீத கவனத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, சொத்தை எழுதிவைக்கும்போது, 'அன்பின் வெளிப்பாட்டால்' சொத்தை எழுதிவைப்பதாக குறிப்பிட்டிருந்தால், தானமாக கொடுத்த சொத்தை பெற்றோர் உடனடியாக மீட்டுக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய சுரேஷ், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை சென்னை மாநகர காவல்துறையிடம் புகாராக பதிவு செய்ய பலமுறை யோசித்ததாக சொல்கிறார்.
''செய்திகளில் பலமுறை முதியவர்கள் கவனிப்பின்றி விடப்பட்டது பற்றி படித்தபோது, நான் நல்ல நிலைமையில் இருப்பதாக பெருமைப்பட்டதுண்டு. எனக்கே அந்த நிலைமை வந்தபோது, அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என் மனைவி வாதம், காரணமாக நோய்வாய்ப்பட்டதால், எனக்கு உதவ யாரும் இல்லை. என் மகனிடம் பணம் கேட்டபோது வசை சொற்களை எதிர்கொண்டேன். அதனால் சொத்தை திருப்பிவாங்க முயன்றேன். ஆனால் மகன், என்னை தனித்துவிட்டுச் சென்றதுடன் சொத்து ஆவணங்களை எடுத்துச்சென்றுவிட்டதால், மிகவும் பாதிக்கப்பட்டேன்,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சுரேஷ்.
பெற்றோர் புகார் அளிக்க தயங்குவது ஏன்?
முதியோர் நல செயற்பாட்டாளர் இளங்கோவின் முயற்சியால், காவல்துறையை நாடிய சுரேஷ், தற்போது சொத்து ஆவணங்களை மீட்டதோடு, அவர் மகனுக்கு எழுதிவைத்த சொத்து ஆவணத்தை ரத்துசெய்திருக்கிறார்.
''சுரேஷை போல பல முதியவர்கள் தங்களது பிள்ளைகள் மீது புகார் கொடுக்க மிகவும் தயங்குகிறார்கள். என்னுடைய களப்பணியில் நான் சந்தித்த முதியவர்கள் சிலர், பிள்ளைகள் மீதான பாசத்தின் காரணமாக இறுதிவரை சொத்தை திருப்பி கேட்காமல்கூட இருந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள், தங்களது இறுதிச் சடங்கை மகன் செய்யமாட்டானோ என்ற பயத்தில் சொத்து பிரச்னையை புகார் செய்வதை தவிர்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்,''என பிபிசி தமிழிடம் விவரித்தார் இளங்கோ.
மேலும், 2019ல் திருத்திஅமைக்கப்பட்ட, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்திற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது என்கிறார்.
காவல்துறை செய்தது என்ன?
சுரேஷின் மகனை நேரில் அழைத்த அதிகாரிகள், முதலில் சட்டவிதிகளை விளக்கினர். வழக்குப் பதிவு செய்தால் சட்டப்படி குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் சிறை செல்லும் நிலை ஏற்படும் என்று விளக்கியதும் சுரேஷின் மகன் சொத்து ஆவணங்களை திருப்பி அளித்தார்.
சுரேஷை போலவே இரண்டு வாரங்களுக்கு முன்னர், மடிப்பாகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதியவருக்கு அவரது மகனிடம் இருந்து சொத்து ஆவணத்தை மீட்டுதரப்பட்டது எப்படி என விளக்குகிறார் துணை ஆணையர் தீபக்.
''பார்த்தசாரதிக்கு 82 வயது. அவர் மகனிடம் ஒரு வருடமாக சொத்து ஆவணத்தை கேட்டிருக்கிறார். மகன் மறுத்ததோடு, அவரை மோசமாக நடத்தியிருக்கிறார். எங்களிடம் புகார் வந்தது. நேரடியாக பார்த்தசாரதியின் வீட்டுக்குச் சென்று ஆதாரங்களை பார்த்தோம். அவருக்கு பார்க்கின்சன்ஸ் வியாதி இருந்ததால், பலமுறை மருத்துவ சோதனை செய்யமுடியாமல் தவித்திருக்கிறார். சொத்தை விற்று தனது செலவுகளுக்கு பயன்படுத்த முடிவு செய்தபோது, அவரது மகன் அவரை நிராகரித்திருக்கிறார். நாங்கள் அவரது மகனை தொடர்பு கொண்டு பேசினோம். முதலில் மறுத்தவர், சட்டப்படி அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறி 'சிஎஸ்ஆர்' (CSR) அனுப்பியதும், ஆவணங்களை தந்துவிட்டார்,''என்கிறார் தீபக்.
சொத்து ஆவணத்தை பெற்றோர்கள் ரத்துசெய்வது எப்படி?
பிள்ளைகளிடம் பராமரிப்பு கிடைக்காத பெற்றோர், அன்பின் வெளிப்பாட்டால் குழந்தைகளுக்கு தானமாக எழுதிவைத்துள்ள சொத்துக்களை திருப்பிவாங்கி கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து வழக்கறிஞர் ராஜசேகரனிடம் கேட்டோம்.
முதியவர் உரிமைகள் தொடர்பான வழக்குகளை நடத்தி, பல முதியவர்களுக்கு பிள்ளைகளிடம் இருந்து சொத்தை மீட்டு தந்த அனுபவத்தை பெற்றவர் ராஜசேகரன்.
''சொத்தை பிள்ளைகளிடம் இருந்து மீட்க கோரும் பெற்றோர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று சில விதிகளை முன்வைத்து அவர்கள் சொத்தை எழுதிவைப்பதாக சொல்லியிருக்கவேண்டும். அல்லது, 'அன்பின் வெளிப்பாட்டால்' எழுதிவைப்பதாக சொல்லியிருக்கவேண்டும். இந்த இரண்டு விதங்களில் ஏதாவது ஒருவிதத்தில் ஆவணத்தில் குறிப்புகள் இருந்தால், சொத்தை பெற்றோர்கள் மீட்கமுடியும். இந்த இரண்டு விதிகள் இல்லாமல், தனது சொத்தை தானமாக எழுதிவைக்கிறேன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால், சொத்தை மீட்பது கடினம்,''என்கிறார்.
மேலும் விளக்கிய அவர், ''சொத்துக்களை பிள்ளைகளுக்கு தானமாக கொடுக்கும் போது, அந்த ஆவணத்தில், 'நான் வாழும் காலம் முழுவதும் என்னை பராமரிக்கவும், எனக்கான பாதுகாப்பு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் என் மகன்/மகள் ஏற்றுக்கொள்வதாக அளித்த உறுதியின் பெயரில்தான் இந்த சொத்தை தானமாக கொடுக்கிறேன். இதனை மீறும் பட்சத்தில், சொத்தை நான் திருப்பிவாங்கிக்கொள்வேன்' என்ற வாக்கியத்தை எழுதியிருக்கவேண்டும். இது 'conditional gift deed' என்று வகைப்படுத்தப்படும்,''என்கிறார்.
அடுத்ததாக, ''மற்றொரு வகையில், 'என் அன்பின் வெளிப்பாட்டால் இந்த சொத்தை எழுதிவைக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தால், அன்பின் வெளிப்பாடு என்பது பெற்றோரை பராமரிப்பது என்ற விளக்கத்தையும் உள்ளடக்கியதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, முதியவர் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை மூத்த குடிமக்கள் உரிமைக்கான ஆணையம் உறுதிப்படுத்தினால், சொத்தை மீட்கமுடியும். இருந்தபோதும் தெளிவாக வாக்கியமாக முதல் விதத்தில் சொல்லப்பட்டது போல எழுதுவது மிகவும் சிறந்தது,''என்கிறார் ராஜசேகரன்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தில் பிரிவு 23(1)ன் கீழ் சொத்தை மீட்க பெற்றோர் வழக்கு தொடுக்கமுடியும் என்கிறார்.
''ஏமாற்றம் அடைந்ததாக உணரும் பெற்றோர்கள், பிரிவு 23(1)ல் சொல்லப்பட்ட விதிகளின்படி வழக்கு தொடரலாம். அதாவது, சொத்தை பெறுபவர், சொத்தை கொடுப்பவருக்கு, அடிப்படை வசதிகள் உள்பட பாதுகாப்பு வசதிகளை செய்துதருவதாக ஒத்துக்கொள்ளவேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில், அந்த சொத்து ஆவணம் கட்டாயத்தின் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டது என்பதை மூத்த குடிமக்களுக்கான ஆணையம் உறுதிசெய்து, சொத்து பரிமாற்றம் செல்லாது என்று அறிவிக்கமுடியும்,''என்கிறார் ராஜசேகரன்.
முதியவர்களுக்கான உதவி எண்
மூத்த குடிமக்கள் நல அலுவலர்களாக செயல்படும் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் சொத்து மீட்பு புகார்கள் குறித்து கேட்டோம்.
''எங்களிடம் முதியவர்கள் தரும் புகார்களின் தீவிரத்தை பொறுத்து, உடனடியாக காவல்துறை மூலமாக அழுத்தம் கொடுப்போம். அல்லது, நேரடியாக, வீட்டில் ஆய்வு செய்து, முதியவர்களுக்கு பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பு தொகை/ சொத்து கிடைப்பதற்காக மூத்தகுடிமக்கள் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுப்போம். புகாராக பதிவு செய்ய முன்வரும் முதியவர்கள் மிகவும் குறைவு. எங்களிடம் மனு தருவதற்கு பதிலாக, மகன்/மகளிடம் பேசுங்கள் என்பார்கள். அவர்களின் பிரச்னையை பொறுத்து நடவடிக்கை எடுப்போம்,''என்கிறார் சென்னை நகர சமூகநலத்துறை அதிகாரி மங்கையற்கரசி.
முதியவர்கள் பாமரிப்பின்றி இருப்பது குறித்த தகவலை பொதுமக்கள் இலவச உதவிஎண் (14567) மூலமாக பதிவு செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்