மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி: தொடரும் சர்ச்சை; ரஹ்மானுக்கு பிரபலங்கள் ஆதரவு

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி: தொடரும் சர்ச்சை; ரஹ்மானுக்கு பிரபலங்கள் ஆதரவு

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், (செப்டம்பர் 10-ம் தேதி) சென்னைக்கு அருகில் பனையூரில் ரஹ்மான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக் குறைவால் ரசிகர்கள் பலரும் இடம் கிடைக்காமலும், இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலுக்குள் சிக்கியும் சிரமத்துக்குள்ளாகினர். இது தொடர்பாக தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி (ACTC) நிறுவனம் சமூக வலைதளத்தில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற மோசமான அனுபவத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியது.

ரஹ்மான் இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் நான் யாரையும் நோக்கி விரல் நீட்ட விரும்பவில்லை. எனக்காகதான் மக்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என தெரியும், யார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்பதை பார்த்து அல்ல. இதை நாங்கள் எதிர்கொண்டு சரி செய்வோம். ஏனெனில் எந்தவொரு ஆன்மாவும் எனக்கு முக்கியம்,” என கூறியிருந்தார்.

ரஹ்மானுக்கு எதிராக ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் தொடர்ந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் பலரும் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: