காணொளி: அமெரிக்க விசா திடீரென நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

காணொளி: அமெரிக்க விசா திடீரென நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

வரும் ஜனவரி 21 முதல், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட 75 நாட்டவருக்கு குடியேற்ற விசா செயல்முறையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துகிறது.

இந்த தற்காலிக தடை, குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அப்படியென்றால், அமெரிக்காவுக்கு இனி செல்லவே முடியாதா? அப்படியல்ல!

சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிக ரீதியில் பயணம் மேற்கொள்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்காலிக தடை அறிவிப்பிலிருந்து இப்போதைக்கு மேற்கூறிய வகைப்பாட்டிற்குள் வருபவர்களுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக தடை குடியேற்ற விசாக்களை மட்டுமே பாதிக்கும். அது நீங்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானதாக இருக்கலாம். கிரீன் கார்டுக்கும் இது பொருந்தும்.

குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய காத்திருந்தவர்களுக்கும், அமெரிக்காவில் எதிர்காலத்தை திட்டமிட்டிருந்த பணியாளர்களுக்கும் இது ஒரு பெரிய அடி.

இது திடீரென நடந்தது போல தோன்றினாலும், இந்த முடிவு பல மாதங்களாகவே திட்டமிடப்பட்டு வந்தது.

விசா காலாவதியான பிறகு மக்கள் தங்குவதைத் தடுக்கவும், அரசு உதவியை சார்ந்திருக்கக் கூடியவர்களை அனுமதிக்காமல் இருக்கவும், அமெரிக்கா விசா விதிகளை கடுமையாக்கி வருகிறது.

புதிய குடியேறிகள் "அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள்" என்று உறுதி செய்யப்படும் வரை இந்த தடை தொடரலாம் என அந்த துறை கூறுகிறது.

அதுவரை, லட்சக்கணக்கானோருக்கு அமெரிக்காவில் குடியேறுவதற்கான பாதை அடைக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பலரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முடிவாகும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு