படுக்கையில் பிணமாக கிடந்த மருமகள் - பூண்டி மிராசுதார் தப்பியது எப்படி? நடந்தது என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஒரு பெண் பயங்கரமாக கொலை செய்யப்படுகிறார். தன் மருமகளையே கொலை செய்ததாக அந்த ஊரின் மிராசுதாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், அந்த வழக்கின் முடிவில் மிராசுதார் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுகிறார். அப்படியானால், அந்தக் கொலையைச் செய்தது யார்? 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத மர்மம் இது.

அது 1911ஆம் ஆண்டு. அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் அதிகாலை 2 மணி. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டியின் மிராசுதாராக இருந்த வைத்தியநாத பிள்ளையின் வீட்டிலிருந்து பெரும் அலறல் சத்தம் கேட்டது.

அந்தச் சத்தம் வைத்தியநாத பிள்ளையின் மருமகள் தனபாக்கியத்தின் அறையலிருந்து கேட்டது. ஓடிச்சென்று பார்த்தவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

தனபாக்கியம் தனது படுக்கையில் சகட்டுமேனிக்கு வெட்டப்பட்டுக் கிடந்தார். அருகில் தனபாக்கியத்தின் கணவரும் வைத்தியநாதபிள்ளையின் மகனுமான அய்யாசாமி அரிவாளுடன் நின்றிருந்தார். அனைவரும் நிலைகுலைந்து போனார்கள்.

அய்யாசாமியை தூண்டிவிட்ட தனபாக்கியம்

காவல்துறை வந்தது. தனபாக்கியத்தின் சடலத்தையும் அது கிடந்த விதத்தையும் ஆராய்ந்தார்கள். எல்லோருமே அய்யாசாமி மீது குற்றம் சாட்டினாலும், காவல்துறைக்கு அது முழுமையாக ஏற்கத்தக்கதாக இல்லை.

ஏனென்றால் சடலம், ஒருவர் வெட்டப்பட்டுக் கிடந்தால் கிடப்பது போல கிடக்கவில்லை. தூக்கிக் கொண்டுவந்து போட்டதைப் போல் இருந்தது. 13 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. ஆனால், அந்த அறைக்குள் போராட்டம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அந்த அறைக்குள் தனபாக்கியம் வெட்டப்பட்டிருந்தால், ஏகப்பட்ட ரத்தம் அங்கே இருந்திருக்கும். அப்படியும் இல்லை. ஆனால், அய்யாசாமி கையில் அரிவாளுடன் அங்கே நின்றிருந்ததால், உடனடியாக கைது செய்யப்பட்டு மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வைத்தியநாதபிள்ளை பூண்டியின் மிராசுதார். ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவருக்கு மூன்று மனைவிகள். அதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். அவருடைய சகோதரி முத்தாச்சி.

முத்தாச்சியின் மகள்தான் வைத்தியநாதபிள்ளையின் முதல் மனைவி. இவர்களுக்குப் பிறந்தவர்தான் அய்யாசாமி. எதையும் புரிந்துகொள்ளாத முரட்டுத்தனமான சுபாவம் உடையவர். சில மன நல பிரச்னைகளும் அவருக்கு இருந்தது.

வைத்தியநாத பிள்ளை பிறப்பிலேயே பணக்காரர் இல்லை. அவர் பணக்கார வீட்டினரால் சுவீகாரம் செய்யப்பட்டதால் செல்வந்தரானவர். அய்யாசாமியின் தாயார், அவர் பிறந்தவுடனே இறந்துவிட்டார். இதனால், அய்யாசாமியை தனது தம்பி சாமிதேவனிடம் ஒப்படைத்திருந்தார்.

இதற்குப் பிறகு இரண்டாவது திருமணத்தின் மூலம் அவருக்கு தங்கம் என்ற மகள் பிறந்தார். அந்த மனைவியும் பிரசவத்தின்போது இறந்துவிட மூன்றாவது திருமணத்தையும் செய்தார் வைத்தியநாதபிள்ளை.

அந்த மனைவியின் மூலம் சோமசுந்தரம், கல்யாணம் என இரண்டு மகன்கள் இருந்தனர். தங்கத்தின் கணவர் இறந்துவிட்டதால், அவரும் தந்தையுடனேயே வசித்து வந்தார்.

தங்கத்தின் கணவருடைபஅ தங்கைதான் தனபாக்கியம். அந்த தனபாக்கியத்தைத்தான் அய்யாசாமி திருமணம் செய்திருந்தார்.

தனபாக்கியம் மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவனை இழந்து தாய்வீடு திரும்பியிருந்த தங்கத்திற்கும் தனபாக்கியத்திற்கும் எப்போதும் சண்டைதான்.

இளம் வயதிலேயே தங்கம் கணவனை இழந்திருந்தார். இதை வைத்துக்கொண்டு, தனபாக்கியம் தங்கத்தை அவதூறாகப் பேசி வந்தார். வைத்தியநாத பிள்ளையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை பிரித்து வாங்க வேண்டுமென அய்யாசாமியையும் தூண்டி வந்தார்.

நீதிபதியிடம் வாயைத் திறந்த அய்யாசாமி

இது வைத்தியநாதபிள்ளையின் குடும்பத்தில் இருந்தவர்களுக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காத நிலையில், அய்யாசாமி பெரிய அளவில் கடன் வாங்க ஆரம்பித்தார்.

இதையடுத்து, தனக்கும் தன் மகன் அய்யாசாமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் சொத்துகளைத் தானே சம்பாதித்ததால், அதில் அய்யாசாமிக்கு பங்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் வைத்தியநாதபிள்ளை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.

வீட்டை விட்டும் அய்யாசாமி தம்பதி வெளியேற்றப்பட்டனர். பிறகு உறவினர்களின் கோரிக்கையால் இருவரையும் வீட்டிற்குள் அனுமதித்தார் வைத்தியநாதபிள்ளை. சண்டை ஏதும் போடக்கூடாது என்ற நிபந்தனையோடு.

தனபாக்கியத்தின் வீட்டிலிருந்து 1911ஆம் ஆண்டு தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் வந்திருந்தன. எல்லோரும் தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடினார்கள். இதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கொலை நடந்தது.

மன்னார்குடி நீதிபதி அய்யாசாமியிடம் விசாரிக்கும்போது, முதல் முறையாக வாயைத் திறந்தார் அய்யாசாமி.

தான் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும் தன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தனபாக்கியத்தை தூக்கிச் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு, மீண்டும் தன் அறையில் கொண்டுவந்து போட்டதாகச் சொன்னார் அய்யாசாமி. அதுவரை தன்னை வேறொரு அறையில் பிடித்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மன்னார்குடி மாஜிஸ்ட்ரேட்டிக்கு இது ஏற்புடையதாகவே இருந்தது. அய்யாசாமியை கொலை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதி, குடும்பத்தினரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

வைத்தியநாத பிள்ளைக்கு தூக்கு தண்டனை

வைத்தியநாதபிள்ளையில் தொடங்கி வேலைக்காரர்கள் வரை எல்லோருமே கைது செய்யப்பட்டார்கள். மகன்கள் இரண்டு பேர் மட்டும் தப்பிச் சென்றுவிட்டனர்.

வேலைக்காரர்களில் ஒருவர் அப்ரூவராக மாறி, வைத்தியநாத பிள்ளையின் தூண்டுதலில் தாங்கள்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வைத்தியநாத பிள்ளையின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ஆர். சடகோபாச்சாரியார் ஆஜரானார்.

இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன வைத்தியநாத பிள்ளையின் தம்பி சாமித்தேவன், தன் அண்ணனுக்கு எதிராகவே சாட்சியமளித்தார். தனபாக்கியம் காலராவால் இறந்துவிட்டதாகத் தனக்கு செய்தி அனுப்பியதாகவும் தனபாக்கியத்தின் சடலத்தை தங்கள் வழக்கப்படி புதைக்காமல் எரிக்க வேண்டுமெனக் கூறி அய்யாசாமிக்கு பணம் கொடுக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், தனபாக்கியத்தைக் கொல்ல வைத்தியநாத பிள்ளைக்கு எந்த நோக்கமும் இல்லை என வாதிடப்பட்டது. எந்த நோக்கமும் இல்லையென்றால், தனபாக்கியம் கொல்லப்பட்ட நிலையில், அவர் காலராவால் இறந்ததாக சாமித்தேவனுக்கு செய்தி அனுப்பியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார் நீதிபதி.

அந்தக் காலகட்டத்தில் தஞ்சை மாவட்டம் முழுக்க வைத்தியநாத பிள்ளைக்கு எதிரான உணர்வு எழுந்திருந்தது. ஜூரிகளும் வைத்தியநாத பிள்ளை குற்றவாளி எனக் கருதினார்கள். முடிவில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து வைத்தியநாத பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு 1912ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் சி.எஃப்.நேப்பியர் என்பவர் நியமிக்கப்பட்டார். வைத்தியநாத பிள்ளையின் சார்பில் பிரபல வழக்கறிஞரான சுவாமிநாதன் ஆஜரானார்.

சுவாமிநாதனைப் பொறுத்தவரை, தனபாக்கியத்தின் உடலில் உள்ள வெட்டுகளைப் பார்க்கும்போது சாதாரண மனநிலை கொண்ட ஒருவர் இதைச் செய்திருக்க முடியாது; ஆகவே அய்யாசாமிதான் இதைச் செய்திருக்க வேண்டும் என வாதிட்டார்.

தனபாக்கியத்தை கொலை செய்தது யார்?

இந்த வழக்கை நீதிபதிகள் பேக்வெல் மற்றும் சதாசிவ ஐயர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தீர்ப்பளிக்கும்போது நீதிபதி பேக்வெல், வைத்தியநாதபிள்ளை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். ஆனால், சதாசிவ ஐயர் அவர் நிரபராதி என முடிவு செய்தார்.

வழக்கு மூன்றாவது நீதிபதியான சங்கரன்நாயர் என்பவரிடம் சென்றது. அவரும் வைத்தியநாத பிள்ளை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவே, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை அப்படியே விட்டுவிட வைத்தியநாத பிள்ளையின் வழக்கறிஞரான சுவாமிநாதன் விரும்பவில்லை. லண்டனில் இருந்த ப்ரைவி கவுன்சிலுக்கு தந்தி மூலம் மேல் முறையீடு செய்தார். வைத்தியநாத பிள்ளையின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு ப்ரைவி கவுன்சிலில் விசாரணை தொடங்கியபோது, வைத்தியநாத பிள்ளைக்காக சர் ராபர்ட் பின்லே என்பவர் வாதிட்டார். இந்த வழக்கிற்காக இங்கிலாந்து சென்ற சுவாமிநாதன் வழக்கில் உறுதுணையாக இருந்தார்.

நான்கு நாட்கள் நடந்த விசாரணையின் முடிவில் வைத்தியநாத பிள்ளை இந்தக் கொலையைச் செய்திருக்க முகாந்திரமில்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார். அப்படியானால், தனபாக்கியத்தைக் கொலை செய்தவர் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: