You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி20 மாநாடு: இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா இடையே பொருளாதார வழித்தடம்
ஜி20 நாடுகளின் கூட்டுத் தீர்மானத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். இதுவரை அவர் முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், யுக்ரேன் போர் தொடர்பாக ஜி20 நாடுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டுப் பிரகடனம் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் இருந்தது.
யுக்ரேனில் நடந்த போர் டெல்லி உச்சி மாநாட்டில் கூட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தடம் புரளும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று வரை இந்தச் சந்தேகம் நிலவி வந்தது.
ஆனால், இந்திய தூதர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொண்டதாகக் கூறினர்.
பிபிசிக்கு கிடைத்த தீர்மானத்தின் முந்தைய வரைவில் இதற்கான வலுவான அறிகுறி இருந்தது. ஆனால், யுக்ரேன் பற்றிய பத்தி காலியாக விடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு பாலியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில், யுக்ரேனில் நடந்த போர் குறித்தும் தீர்மானத்தில் விவரிக்கப்பட்டது. அதில் ரஷ்யா, சீனாவின் ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டு பாலி கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்ட ஓர் கூட்டுத் தீர்மானத்தை உருவாக்க இந்தியா முயன்றது.
அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை.
கூட்டுத் தீர்மானம்: ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் ஒப்புக்கொண்டனவா?
இந்தியா சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை அதிகாரி அமிதாப் காந்த், இந்த அறிவிப்பு வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்களில் 100% ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். அவர் இந்தச் செய்தியை “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் “முன்னோடியானது” என்றும் குறிப்பிட்டார்.
பிபிசி தரப்பில் இன்னும் கூட்டுத் தீர்மானத்தைப் பார்க்கவில்லை. ஆனால், புவிசார் அரசியல் பிரச்னைகளில் 100% ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக அமிதாப் கான்ட் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இன்னும் பிரகடனத்தைப் பார்க்கவில்லை, ஆனால் புவி-அரசியல் பிரச்சினைகளில் 100% ஒருமித்த கருத்தை கான்ட் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறது.
தீர்மானத்தில் போரை விவரிக்கும் மொழிப் பயன்பாட்டை ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் என்ன சமரசம் செய்துகொள்ளப்பட்டது, யார் விட்டுக்கொடுத்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
இப்போதைக்கு இந்தியாவின் ஜி20 தலைமையில் இது ஒரு வெற்றி.
ஜி20 கூட்டுத் தீர்மானத்தில் என்ன உள்ளது?
கூட்டுத் தீர்மானத்தில் உள்ள மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு முதலில் வருவோம்.
யுக்ரேன் போர் குறித்த பத்தியில் ஜி20 நாடுகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்து எப்படி எட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் உள்ளன.
“உலகெங்கும் உள்ள மகத்தான மனித இனம், துன்பங்கள், போர்கள், மோதல்களின் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்வதை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்கிறோம்.” என்று முதல் வரி கூறுகிறது.
போருக்கு ரஷ்யாவை குறை கூறவில்லை. அதற்கு மாறாக, போரால் ஏற்பட்ட மனித துன்பங்களை மட்டும் ஜி20 கூட்டுத் தீர்மானம் குறிப்பிடுகிறது. இந்த அணுகுமுறை, ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் என இரண்டு தரப்புமே ஏற்றுக்கொள்ளக்கூடிய மொழிப் பயன்பாடு. ஆனால், அந்தந்த நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு இதற்கு விளக்கத்தை அளித்துக்கொள்ள முடியும்.
மாநாட்டின் கூட்டுத் தீர்மானம் குறித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இன்றைய மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தீர்மான, வலுவான, சமநிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாக” கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதில் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்கள் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதாகவும்” கூறினார்.
அவர் மேலும், “ஒவ்வோர் உறுப்பு நாட்டிற்கும் எதிரொலிக்கும் வகையிலான தீர்வுகளை இந்திய தலைமை வடிவமைத்துள்ளது. அனைவருக்கும் பகிரப்பட்ட முன்னோக்கிய பாதையை இந்திய தலைமை வழங்குகிறது,” என்றும் தெரிவித்தார்.
ஜி20-இல் இந்தியாவின் கூட்டுத் தீர்மானம் வலிமையாக இல்லையா?
இந்தியாவின் கூட்டுத் தீர்மானத்தை உன்னிப்பாகப் படித்தால், யுக்ரேன் போர் பற்றிய அணுகுமுறை கடந்த ஆண்டு பாலியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்ததைப் போல் ரஷ்யாவை கண்டிப்பதில் வலுவானதாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
பாலியில் ஜி20 உறுப்பினர்கள், “யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய கூட்டமைப்பு நடத்திய ஆக்கிரமிப்புக்கு கடுமையான கண்டனங்களை” தங்கள் நிலைப்பாடுகளை வலியுறுத்தினர். ஆனால், அதேவேளையில், இதுகுறித்து வேறு கருத்துகளும் வேறுபட்ட மதிப்பீடுகளும் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
ஆனால், டெல்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ரஷ்யாவை யுக்ரேன் போர் குறித்து நேரடியாக விமர்சிக்கவில்லை. மாறாக, “உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக யுக்ரேனில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைப் பற்றி” மட்டும் பேசுகிறது. அதோடு, “அந்தச் சூழலைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் மதிப்பீடுகளும் இருந்தன,” என்றும் குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு கூட்டறிக்கை, நாடுகளுக்கு “அச்சுறுத்தல் அல்லது பிராந்திய கையகப்படுத்துதலை கோருவதற்கு பலத்தைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க” அழைப்பு விடுக்கிறது. இது ரஷ்யாவை நோக்கியதாகக் கருதப்படுகிறது. ஆனால், நேரடியாக இல்லை.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கூட்டுத் தீர்மானத்தில் யுக்ரேன் போர் பற்றிய பகுதி இன்றைய கவலைகளுக்குப் பதிலளிக்கிறது என்று கூறினார்.
ரஷ்யாவை கையொப்பமிட வைப்பதற்காகக் கடந்த ஆண்டு பாலி பிரகடனத்துடன் ஒப்பிடும்போது யுக்ரேன் பற்றிய அணுகுமுறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளதா என்று பிபிசியின் சமிரா ஹுசைன் கேள்வியெழுப்பியபோது அவர் பதிலளித்தார்.
“பாலியை பாலி என்றும், புது டெல்லியை புது டெல்லி என்றும் நான் கூறுவேன். பாலியில் ஓராண்டுக்கு முன்பு நடந்தது. அப்போது நிலைமை வேறு. அதன் பிறகு பல விஷயங்கள் நடந்துள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டுத் தீர்மானத்தின் புவிசார் அரசியல் பிரிவில் எட்டு பத்திகள் உள்ளன. அதில் ஏழு யுக்ரேன் பிரச்னையை மையமாகக் கொண்டது என்று ஜெய்சங்கர் கூறினார்.
“அவற்றில் பல சமகால முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை முன்னிலைப்படுத்துகின்றன. தானியங்கள், உணவுப் பொருட்கள், உரங்களின் தடையற்ற விநியோகம், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் சிக்கல்கள் உட்படப் பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் முன்னிப்படுத்தப்படுகின்றன,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா வரை பொருளாதார வழித்தடம்
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜி20 மாநாட்டில் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு வழித்தடங்கள் அமைக்கப்படும். அதில் கிழக்கு வழித்தடம் இந்தியாவை மேற்கு ஆசியாவுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இணைக்கும். வடக்கு வழித்தடம், மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும்.
'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'
ஜி20 மாநாட்டிற்கான குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் பாரத் என்று பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் பெயரை மாற்ற திட்டமா என்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மாநாட்டிற்கு உள்ளேயும் 'பாரத்' நுழைந்துள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மொராக்கா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோதி பேசினார்.
அப்போது, அவருக்கு முன்னே இருந்த நாட்டின் பெயர் பெயர்ப்பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்றிருந்தது. இதனால், சமூக வலைதளங்களில் பாரத் பெயர் சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை
பின்னர், ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஆப்ரிக்க ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் அஸாலி அஸ்ஸமனியை பிரதமர் மோதி வரவேற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்தி அவரது இருக்கையில் அமர வைத்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "ஜி20 அமைப்பின் தலைமை தாங்குவதன் அடிப்படையில், உலகம் நம்பிக்கையின்மையை கைவிட்ட பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதலுடன் ஒருங்கிணைய இந்தியா அழைபபு விடுக்கிறது. அனைவரும் ஒருங்கிணைவதற்கான தருணம் இது. அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரமே நம்மை வழிநடத்தக் கூடியது. வடக்கு - தெற்கு பிளவு, கிழக்கு - மேற்கு தொலைவு, உணவு, எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்ற மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் எதிர்கால சந்ததியினருக்கு சரியான தீர்வை நாம் காண வேண்டும்" என்று கூறினார்.
டெல்லியில் ஜி20 மாநாடு
சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கியுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோதி பலத்த பாதுகாப்புடன் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கினர்.
பின்னர் மாநாட்டிற்கு வருகை தந்த மற்ற நாட்டு தலைவர்கள் அவரை வரவேற்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ், உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, உலக வர்த்தக கூட்டமைப்பு தலைமை இயக்குநர் நிகோஸி ஓகான்ஜோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நாயான் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோதி நேரில் வரவேற்றார்.
ஜி20 மாநாட்டிற்காக குடிசைப் பகுதிகள் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டனவா?
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குடிசைகள் அகற்றப்படுவது, மறைக்கப்படுவது போன்றவை நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசு நமது நாட்டின் ஏழைகளையும் வாய்பேச முடியாத விலங்குகளையும் மறைப்பதில் மும்முரமாக உள்ளது. இந்தியாவின் உண்மையான தோற்றத்தை நமது விருந்தினர்களிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டைக் கருத்தில் கொண்டு குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடப்பட்டிருக்கும் வீடியோவை காங்கிரஸ் அதன் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சனிக்கிழமை தொடங்கிய இந்த உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இது தவிர, ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன், தவறான விலங்குகளை மோசமாக நடத்துவதாகக் கூறப்படும் சில வீடியோக்களையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
“ஜி20 மாநாட்டுக்கு முன்பு, மோதி அரசு தனது தோல்வியை மறைக்க அவர்களின் வீடுகளை திரைச்சீலைகளால் மூடியுள்ளது. ஏனெனில், அரசர் ஏழைகளை வெறுக்கிறார்,” என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலை
புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ண ஸ்தபதி, ஸ்ரீகந்த ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு.
கடந்த ஓராண்டாக இத்தகைய விளம்பரங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஜி-20 மாநாடு தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. மின் கம்பங்கள் முதல் இ-ரிக்ஷாக்கள் வரை எதிலும் ஜி-20 தொடர்பான விளம்பரங்கள் காணப்படுகின்றன. பெரிய எல்.இ.டி. திரைகளிலும் ஜி-20 விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
இந்த சுவரொட்டிகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜி-20 லோகோ பிரதானமாக தெரிகிறது. அதனுடன், பூமிப் பந்து, மலர்ந்த தாமரையும் அதில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தேர்தல் சின்னமாகவும் தாமரை உள்ளது. இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
ரஷ்ய, சீன அதிபர்கள் இல்லாதது இந்தியாவுக்கு எப்படி சிக்கலாகும்?
ரஷ்ய, சீன அதிபர்கள் இல்லாததால், ஜி20 தலைவர்கள் ஒருமித்த கருத்தை எட்டுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று வில்சன் சென்டர் சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
“அதற்குக் காரணம், ரஷ்யாவும் சீனாவும் அரசியல் மூலதனத்தையும் சலுகைகளுக்கான ராஜ்ஜீய வாய்ப்பையும் கொண்டிருக்கும். ஆனால், அந்த நாடுகளின் தலைவர்கள் சார்பாக அனுப்பப்படும் அதிகாரிகளுக்கு சமரசம் செய்யும் திறனோ அதிகாரமோ இருக்காது,” என்று அவர் கூறுகிறார்.
“ஆகவே, இது ஒரு முடிவை எட்டுவதை இந்தியாவுக்குக் கடினமாக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
யுக்ரேன் விவகாரம் டெல்லியில் எதிரொலிக்குமா?
ரஷ்யா- யுக்ரேன் இடையேயான விவகாரம் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய தூதர் ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகையில், “வெளிநாட்டு விவகாரங்களுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் இடையிலான எல்லையை மங்கலாக்க இந்தியா முயற்சிக்கிறது” என்றார். இதை அடைய ஜி-20 மிக முக்கியமான மன்றமாகும். இது இந்திய அரசுக்கு நன்றாக தெரியும்.
கடந்த ஆண்டு இந்தோனீசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது நடந்தது போல, திருவிழா போன்ற சூழ்நிலையில் கூட, யுக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் மாநாட்டின் லட்சியங்களை சிதைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் நுட்பமான பணி இந்தியாவுக்கு இருக்கும்.
“யுக்ரைன் போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகளை விவாதிப்பதை விட ஒருமித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. ஆனால், இதுவரை இதைச் செய்ய முடியவில்லை, தற்போது இந்தியா இதனை சிறப்பாக கையாளும் என நினைக்கிறேன்” என்று ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.
ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?
‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.
அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.
இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.
ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?
எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.
ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.
இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?
இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்