You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை தீவிரவாத தாக்குதல் - பாஜக ஆதரவாளர் பலி, இருவர் காயம்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இரு வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.
தெற்கு காஷ்மீரில் நடந்த இந்த இரண்டு தாக்குதல்களிலும், ஒருவர் உயிரிழந்தது மட்டுமின்றி, இருவர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறை தகவல்களின்படி, ஷோபியான் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் அய்ஜாஸ் அகமது என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
அனந்த்நாக் என்ற பகுதியில் நடந்துள்ள மற்றுமொரு தாக்குதலில் இரண்டு சுற்றுலா பயணிகள் துப்பாக்கி குண்டுகள் தாக்கியதில் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள 5 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஸ்ரீநகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 13 அன்றே முடிவடைந்த நிலையில், பரமுல்லா தொகுதியில் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவற்றுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும்.
காவல்துறை சொல்வது என்ன?
காஷ்மீர் மண்டல காவல்துறை இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தங்களது சமூக ஊடக பக்கமான எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளது.
காவல்துறை கூற்றின்படி, முதல் சம்பவம் அனந்த்நாக் யன்னார் பகுதியில் நடந்துள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஃபர்ஹாவும் அவரது கணவர் தப்ரேஸும் தீவிரவாதிகள் சுட்டதில் காயமடைந்துள்ளனர்.
இரண்டாவது சம்பவம், ஷோபியான் ஹிர்போரா பகுதியில் நடந்துள்ளது. “இதில் தீவிரவாதிகள் அய்ஜாஸ் அகமது என்பவர் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் அவர் அங்கிருந்து காயமடைந்த நிலையில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டது.”
இந்த இரண்டு சம்பவங்களிலும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
அதிகாரிகளின் தகவல்படி, இந்தச் சம்பவம் நடந்த அரை மணிநேரத்திற்குப் பிறகு, இரவு 10.30 மணியளவில், ஷோபியானில் அய்ஜாஸ் அகமது மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிடிஐ செய்தி முகமையின்படி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அய்ஜாஸ் அகமது ஒரு முன்னாள் கிராமத் தலைவர் மற்றும் பாஜகவுடன் தொடர்புடையவர் ஆவார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சைப் பலனன்றி அவர் உயிரிழந்தார்.
அய்ஜாஸ் அகமதுவின் குடும்ப உறுப்பினரான இர்பான் அகமது ஷேக், இரவு 10.36 மணியளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிலிருந்து "10-15 நிமிடங்களுக்குப் பிறகு, அய்ஜாஸின் தாய், தனது மகன் சுடப்பட்டதாகக் கூறினார், பின் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்" என்று கூறியுள்ளார் இர்பான்.
அதேநேரம் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்துக் கேட்டபோது, “அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது, எங்கிருந்து வந்தார்கள், எப்படி தப்பித்துச் சென்றார்கள் என்றும் தெரியாது” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி, இந்தத் தாக்குதல் குறித்து இந்திய அரசை விமர்சித்துள்ளார்.
தனது சமூக ஊடக பக்கத்தில், இந்த இரு சம்பவங்களுக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது மட்டுமின்றி, “எந்தக் காரணமும் இன்றி தென்பகுதியில் தேர்தல்கள் தாமதமாக நடத்தப்படும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ள நேரம் கவலைத்தரக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இந்திய அரசு இங்கு அனைத்தும் இயல்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது நடந்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
மெஹபூபா முஃப்தி, அனந்த்நாக் - ரஜௌரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதை மே 25க்கு மாற்றி வைத்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா ஆகிய இருவரும் இந்த தீவிரவாத தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "அனந்த்நாக் மற்றும் ஷோபியானில் நடந்துள்ள தாக்குதலுக்கு ஃபரூக் அப்துல்லா மற்றும் ஓமர் அப்துல்லாவின் கண்டனங்கள். ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தரமான அமைதியை நிலைநாட்டுவதற்கு இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் தடையாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்” என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
“இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இதுபோன்ற கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்.”
இந்தத் தாக்குதல் குறித்து பாஜகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஷோபியானின் முன்னாள் கிராமத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ஜம்மு மற்றும் காஷ்மீரில் அய்ஜாஸ் அகமது பாஜகவின் சிறந்த தொண்டர் ஆவார். அவரை தீவிரவாத தாக்குதலில் இழந்து வாடும் அவரது குடும்பத்தோடு பாஜக உறுதியாக நிற்கும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)