You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம் அருகே கொலை நடந்தது எப்படி? பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் யார்?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தின் அருகே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அங்கே ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், கொலை நடந்தது எப்படி?
கொலைக்கான பின்னணி என்ன?
மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு சித்ரா பவுர்ணமி தினமான ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது. இதில் மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் நடந்ததால், இந்த ஆண்டு அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க கூடுதலாக போலீசார் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக 4 ஆயிரம் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். இது தவிர 400 தற்காலிக கண்காணிப்புக் கேமராக்கள், 4 பறக்கும் கேமரா வசதி, 50 பேர் குழுக்கள் கொண்ட நீச்சல் வீரர்கள், குற்றத் தடுப்புக்காக 400 போலீசார் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆற்றின் இரண்டு கரைகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இம்முறை கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
வைகை ஆற்றின் அருகே நடந்த கொலை
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) மீது அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்(30) என்பவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்கும் வைகை வடகரையின் ஆழ்வார்புரத்தில் அவரது வீட்டின் அருகே நள்ளிரவு 1.30 மணியளவில் கார்த்திக் அவரது நண்பர் சோணை(29) ஆகிய இருவரையும் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் கூட்டத்தில் ஓட காவல்துறையினர் இருவரையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சோணை சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலிசார் கூறுகின்றனர்.
கொலைக்கான பின்னணி என்ன?
இது குறித்து பிபிசி தமிழிடம் காவல்துறை அதிகாரி பேசுகையில், "ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் திருப்பாலை பகுதியில் துணிகளை அயர்ன் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது மனைவிக்கு வீட்டின் அருகே வசிக்கும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கார்த்திக் கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே முன்பகை உருவாகியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி அழகரை தரிசனம் செய்துவிட்டு தனது கடையில் வேலை செய்யும் சோணையுடன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக்கிடம் சதீஸ் தகராறு செய்ததுடன் இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சோணை உயிரிழந்தார்", என்றார்.
வழக்குகள் விபரம் என்ன?
தொடர்ந்து பேசிய காவல்துறை அதிகாரி, "மதிச்சியம் காவல் நிலையத்தில் கார்த்தியின் அக்கா ஆலியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஸ் மற்றும் கார்த்திக்கின் மனைவி இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120B, 307, 302 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஸை போலிசார் பிடித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில் இருவரின் உறவிற்கு தடையாக இருந்ததால் கொலை செய்ததாக சதிஸ் கூறியதாக", தெரிவித்தார்.
பட்டா கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள்
அழகர் ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்தனர். அதில் சில இளைஞர்கள் திடீரென பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் இருந்த பக்தர்கள் சிதறி ஓடினர். போலீசார் பாதுகாப்பை மீறி எப்படி கத்தியுடன் இளைஞர்கள் வந்தனர் என பொதுமக்கள் கேள்வியும் எழுப்பினர்.
பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் யார்?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் பேசுகையில்
" சித்திரை திருவிழாவில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித் திரிந்த 82 பேர் குற்றத் தடுப்பு குழுவால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 69 பேர் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 26 பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவிழாவில் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டன”, என்றார்
“கடந்த ஆண்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஆழ்வார்புரத்தில் நடைபெற்ற கொலை திருவிழாவை மையமாக வைத்து நடைபெறவில்லை. அது தனி நபர் பிரச்னையால் நடைபெற்றது. அதற்கும் திருவிழாவிற்கும் தொடர்பு கிடையாது", என கூறினார்
‘சித்திரை திருவிழாவில் போலீசார் பற்றாக்குறை’
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, "தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதனால் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்றால் இல்லை. திருவிழா நேரத்தில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் வலம் வந்து பக்தர்களை அச்சுறுத்தினர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மோதல்கள், கூட்ட நெரிசலில் பலி குறைந்தது. போலிசார் பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தது கைது செய்து இருப்பது குறைந்த எண்ணிக்கையில் கணக்கிற்காக கொடுத்திருக்கின்றனர்”, என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “ஆனால் சித்திரை திருவிழாவை பயன்படுத்தி பல குற்றச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனை போலீசார் பதிவு செய்யவில்லை. வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மற்றும் அதிகளவிலான போலீசார் குவிக்கும் பட்சத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்", என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)