வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது அதிகரிக்கும் உயிரிழப்புகள் - பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

பட மூலாதாரம், Twitter/susi_chozhan
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய 6 பேர் வெவ்வேறு காரணங்களால் பயணத்தை தொடர முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பூண்டியில் வெள்ளியங்கிரி மலைத் தொடர் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோடை காலத்திற்குப் பிறகு மலையில் பனி அதிகமாக இருக்கும் என்பதால் அதன் பின்னர் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. மொத்த பயண தூரம் 6 கி.மீ. கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடையலாம். ஏழு மலைகளில் ஏழாவது மலை தான் மிக கடினமான பயணத்தை கொண்டது.
சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக மக்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வருவதாக கூறுகிறார் ஆலாந்துறையைச் சேர்ந்த விவசாயி அருள். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பக்தர்கள் சென்று வருகின்றனர். பூண்டி கோவிலும் பல ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு வருபவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கும் சென்று வருவதும் வழக்கமான ஒன்று தான். வனத்துறை உருவாக்கப்பட்டதற்கு முன்பிருந்தே பக்தர்கள் மலைக்குச் சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் மட்டுமில்லாமல் மலையேற்றம் (ட்ரெக்கிங்) செல்ல விரும்புபவர்களும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். நானும் 30 வருடங்களுக்கும் மேலாக வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வருகிறேன். இத்தனை வருடங்களில் இந்த ஆண்டைப் போல அதிக வெப்பம் பதிவானதில்லை. மலை ஏறுபவர்கள் அதிக அயர்ச்சி அடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது, ” என்றார்.

நடப்பாண்டில் இது வரை மலை ஏறியவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
02.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான முருகன் என்பவர் மலை ஏறுகையில் 2வது மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
04.03.2023 அன்று சென்னையைச் சேர்ந்த 44 வயதான கதிரவன் என்பவர் மலை ஏறுகையில் 4வது மலையில் நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார். மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்து பரிசோதிக்கையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
30.04.2023 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த 52 வயதான ரமேஷ் என்பவர் மலை ஏறுகையில் 3வது மலையில் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
04.05.2023 அன்று கோவையைச் சேர்ந்த 47 வயதான ஏகமூர்த்தி என்பவர் மலை ஏறுகையில் 2வது மலையில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என அமர்ந்தவர் மயங்கி விழுந்தார். அடிவாரத்துக்கு வந்து பரிசோதிக்கையில் ஏற்கனவே அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

05.05.2023 அன்று கரூரைச் சேர்ந்த குமார் என்பவர் 6வது மலை வரை சென்று அதன் பின் தொடர முடியவில்லை என திரும்பியுள்ளார். ஆனால் வருகின்ற வழியிலே மேலும் பயணத்தை தொடர முடியாமல் அமர்ந்தவர் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவர் பரிசோதிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
06.05.2023 அன்று கோவையைச் சேர்ந்த 39 வயதான லோகேஷ் என்பவர் 6வது மலையில் சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்திலே அவரின் உயிரும் பிரிந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டும் 5 பேரும் 2019 ஆம் ஆண்டு 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மே 31ஆம் தேதிவரை வெள்ளியங்கிரி மலைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதால் நடப்பாண்டில் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளன.

வனத்துறை என்ன செய்கிறது?
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மலைக்குச் செல்பவர்கள் நெகிழி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மலை ஏறுபவர்களை பரிசோதித்த பிறகே மேலே அனுப்புகின்றனர்.
பூண்டி கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலை அடிவாரத்தில் அவசர ஊர்தி, மருத்துவ குழு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மலையேற்றம் அனுமதிக்கப்படும் மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வருவதால் அவர்களை பரிசோதனை செய்ய இது போல் சோதனைச் சாவடி அமைக்கப்படுவதாகவும், அதற்கு முன்போ, பின்போ யாரும் வருவதில்லை என்பதால் இந்த சோதனைச் சாவடி செயல்படுவதில்லை. மலையேற்ற காலத்தில் வனத்துறை அலுவலர்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். மலை ஏறும் போது யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 'டோலி' சுமப்பவர்கள் மூலம் அவர்கள் அடிவாரத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். கரடுமுரடான - கடினமான மலைப்பகுதி என்பதால் பக்தர்கள் பயணிக்கும் பாதை முழுவதும் பெரிய அளவிலான வசதிகளை ஏற்படுத்தி தர இயலாது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.
வனத்துறை அவர்களை பரிசோதித்து அனுப்பும் வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அது போக சுவாசப் பிரச்சனை, இருதயக் கோளாறு, மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்பவர்கள் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு சிலரை அறிவுறுத்தவும் செய்கிறோம். ஆனால் முடிவு மலை ஏறுபவர்களுடையது தான். இந்த ஆண்டு உயிரிழந்தவர்களில் முதல் முறை வந்தவர்களும் உள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவர்களும் உள்ளனர். மக்கள் தான் தங்களின் உடல்நிலையை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும், ” என்றார்.

கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமா?
கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “வெள்ளியங்கிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து தான் வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். வனத்துறையால் மட்டுமே கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது. மருத்துவ ஆபத்து உள்ளவர்கள் இந்த பயணத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம். கேரளாவில் பொதிகை மலை போன்ற இடங்களில் உடல் பரிசோதனை சான்று இருந்தால் தான் அனுமதிவழங்கப்படுகிறது. ஆனால் அங்கு குறைவான எண்ணிக்கையில் தான் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சூழல் சுற்றுலா என்கிற பெயரில் வனத்துறையே அவற்றை ஒருங்கிணைக்கிறது.
வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்ற கூட்டத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கு சாத்தியம் குறைவு. மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை, அறநிலையத் துறை போன்ற பல துறைகள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு அது. மலை ஏறுபவர்கள் தங்களின் உடற்தகுதியை கவனத்தில் கொள்வது அவசியம். எனினும் வனத்துறை தரப்பில் இதை எடுத்துரைத்து நடவடிக்கைகள் தேவைப்பட்டால் நிச்சயம் அவற்றை பரிந்துரைப்போம், ” என்றார்.

மலை ஏற்றம் செல்பவர்களுக்கு மருத்துவர் சொல்லும் அறிவுரை என்ன?
இருதய சிகிச்சை நிபுணர் அசோக் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் கடந்த ஆண்டு கூட வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்தேன். அப்போது சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள ஒருவர் உயரிழந்தார். 35 வயதுக்கு குறைவானவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது. 40 வயது அடைந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும். சர்க்கரை அளவு சீராக இல்லாதவர்கள் மலை ஏறும்போது அதிக அளவில் சர்க்கரை குறையும். அப்போது அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்படும். மலைப்பகுதியில் அவசர உதவி அல்லது உடனடி சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்பும் இருக்காது.
இளைஞர்கள் பெரும்பாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பலர், பெரும்பாலும் தங்களின் உடல்நிலை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. எனவே மலையேற அனுமதிக்கும் முன் தேவைப்படுபவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதித்து முடிவு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியமான ஒன்று. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயம் இத்தகைய கடினமான பயணங்களை தவிர்க்க வேண்டும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












