துருக்கி: எர்துவான் தன் அரசியல் எதிரியை கைது செய்தது ஏன்? தேர்தல் குறித்த அச்சம் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செலின் கிரித், டோபி லக்ஹர்ஸ்ட் மற்றும் ஹஃப்சா கலீல்
- பதவி, பிபிசி நியூஸ்
துருக்கியில், தனது கட்சியால் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்தான்புல் மேயர் இமாமோக்லுவை அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து, நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மதச்சார்பற்ற குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த எக்ரெம் இமாமோக்லு, துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்துவானின் வலுவான அரசியல் போட்டியாளர்களில் ஒருவராகக் காணப்படுகிறார்.
அவர் ஊழல் மற்றும் பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி, அவரை "குற்றவியல் அமைப்பின் தலைவர் என்ற சந்தேகத்திற்குரிய நபர்" என்று அழைத்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, பிற அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் உள்பட நூறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம், நகரில் நான்கு நாட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இமாமோக்லு இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் "மக்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் திரண்டு, அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இது பல ஆண்டுகளாகக் காணப்படாத மக்கள் சீற்றத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, துருக்கியின் மிகப்பெரிய நகரத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்தான்புல் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூட்டத்தைக் கலைக்க காவல்துறை மிளகுத்தூள் பயன்படுத்துவதை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளிப்படுத்தியுள்ளது.
அங்குள்ள நகர மண்டபத்தின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் திரண்டு, "எர்துவான், சர்வாதிகாரி!" மற்றும் "இமாமோக்லு, நீங்கள் தனியாக இல்லை!" என்று கோஷமிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
அங்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு நாள் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இஸ்தான்புல்லில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் இமாமோக்லுவின் மனைவி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களை "குரல் எழுப்புமாறு" வலியுறுத்துவதால், நாடு முழுவதும் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
இஸ்தான்புல்லில் உள்ள பல தெருக்களிலும் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மெட்ரோ பாதைகளிலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இமாமோக்லு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தனது வீட்டிற்கு வெளியே போலீசார் இருந்தபோது படம் பிடித்ததாக அவர் கூறியுள்ளார். அதில், துருக்கி மக்களுக்காகவும் "உலகளவில் ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் அனைவருக்காகவும்" தான் "உறுதியாக நிற்பதாக" அவர் உறுதியளித்தார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள, கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில், துருக்கி மக்கள் தனக்கு எதிரான "பொய்கள், சதிகள் மற்றும் பொறிகளுக்கு" பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டோக் போன்ற சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை துருக்கி கடுமையாகக் கட்டுப்படுத்தியதாக பிரிட்டனை சேர்ந்த இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்ஃப்ளாக்ஸ் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.
'எங்கள் அடுத்த ஜனாதிபதிக்கு எதிராக சதி'

பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய மாதங்களில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நகராட்சிகள், பத்திரிகையாளர்கள், பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரமுகர்கள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட, நாடு தழுவிய பெரும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மேயர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துருக்கி எதேச்சதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான கவலைகள் சமூக ஊடகங்களில் வெளிப்பட்டன.
வரவிருக்கும் அதிபர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்தனர். மேலும், இனி ஒரு நியாயமான மற்றும் ஜனநாயக வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். இமாமோக்லுவின் கட்சியான சிஹெச்பி, மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கைகள் 'எங்கள் அடுத்த அதிபருக்கு எதிரான ஒரு சதி' எனக் கூறி கண்டனம் தெரிவித்தது. இந்தக் கருத்து, எதிர்க்கட்சித் தரப்பினரிடையே பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.
ஆனால் துருக்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளுடன் எர்துவானை தொடர்புபடுத்தியவர்களை, துருக்கியின் நீதித்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். அததையடுத்து, இது ஓர் அரசியல் நடவடிக்கை என்று கூறுவது "மிகவும் ஆபத்தானது மற்றும் தவறானது" என்று யில்மாஸ் துங்க் கூறினார். அதோடு, துருக்கியில் யாரும் சட்டத்தைவிட மேலானவர்கள் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
எர்துவானும் அவரது கட்சியும் இந்தக் கூற்றுகளை மறுத்து, துருக்கியின் நீதித்துறை சுதந்திரமானது என்று குறிப்பிட்டுள்ளனர். எர்துவான் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். கடந்த ஆண்டு, இமாமோக்லுவின் சிஹெச்பி கட்சி அங்கும் அங்காராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெற்றி பெற்றபோது, இமாமோக்லு இஸ்தான்புலின் மேயராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்.
எர்துவான் ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது கட்சி நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இஸ்தான்புல்லில் வளர்ந்து, தனது அரசியல் பயணத்தை அந்நகரின் மேயராக துவங்கிய அதிபருக்கு, இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி ஒரு தனிப்பட்ட பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும், இஸ்தான்புல்லில் உள்ள இமாமோக்லுவின் வீட்டில் டஜன் கணக்கான காவல்துறை அதிகாரிகள் அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். இமாமோக்லு மட்டுமே போட்டியிடும் நிலையில், சிஎச்பி கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இமாமோக்லு கைது செய்யப்பட்டதற்கு ஒரு நாள் முன்பு, அவருக்கு எதிராகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக, இஸ்தான்புல் பல்கலைக்கழகம் அவரது பட்டத்தை ரத்து செய்தது. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்படும்.
துருக்கியின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் பதவி வகிக்க உயர்கல்வி முடித்திருக்க வேண்டும். இமாமோக்லு அந்த நடவடிக்கையை "சட்டரீதியாக ஆதாரமற்றது" என்று குறிப்பிட்டார். மேலும் பல்கலைக் கழகங்கள் "சுதந்திரமாக இருக்க வேண்டும், அரசியல் தலையீடு இல்லாமலும், அறிவை வழங்கும் நோக்கத்துடனும் இயங்க வேண்டும்" என்று கூறினார்.
அதிபர் தேர்தல் தற்போது 2028ஆம் ஆண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எர்துவான் தற்போது மீண்டும் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஏனெனில் அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இருக்கிறார். அதற்கு முன், அவர் பிரதமராகவும் பணியாற்றியிருந்தார்.
எனவே எர்துவான் மற்றொரு தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரே வழி அரசியலமைப்பை மாற்றுவது அல்லது அவரது பதவிக்காலம் முடிவதற்குள் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதுதான்.
மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதோடு, இமாமோக்லு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. பிகேகே அல்லது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, 1984 முதல் ஒரு கிளர்ச்சியை நடத்தி வருகிறது.
மேலும் துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாதக் குழுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் தங்கள் தலைவரின் அழைப்பைத் தொடர்ந்து, துருக்கிய அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த மாதத் தொடக்கத்தில் அந்தக் குழு ஆயுதங்களைக் கைவிடும் முடிவை அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
இமாமோக்லுவின் கைதுக்கு சர்வதேச நாடுகளின் எதிர்வினை எதிர்மறையாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அதிகாரிகள் அனைவரும் கைதுகளைக் கண்டித்துள்ளனர்.
இமாமோக்லுவின் கைது நடவடிக்கை, "வரவிருக்கும் அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஓர் அரசியல் பிரமுகர் மீதான அழுத்தத்தின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது" என்று ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிச்சயமற்ற அரசியல் சூழல், சந்தைகள் மீது ஏற்படுத்திய தாக்கத்தால், துருக்கிய லிரா அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இமாமோக்லுவின் கைது செய்தி பலருக்கு அதிர்ச்சியளித்தாலும், இந்தப் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவர் மீதான தொடர்ச்சியான சட்ட அழுத்தங்கள் புதியவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அவர் பல்வேறு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார் மற்றும் 2019ஆம் ஆண்டு துருக்கியின் தேர்தல் வாரியத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் மீது அரசியல் தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்புக்கு அவர் மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
மேலும், அவர் இஸ்தான்புலின் பெய்லிக்டுஸு மாவட்ட மேயராக பதவி வகித்த காலத்தில், டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காகவும், அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மிகச் சமீபத்தில், ஜனவரி 20ஆம் தேதியன்று, ஒரு வழக்கறிஞரை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












