கனடாவின் புதிய பிரதமர் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவாரா? குடியேற்ற கெடுபிடிகள் தளருமா?

இந்தியா - கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பிரதமர் மார்க் கார்னி
    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கனடாவில் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற அவர் முன்னாள் மத்திய வங்கி ஊழியர் ஆவார்.

இதனால், கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்ததால், ஜனவரி மாதம் தனது பதவி விலகலை ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை மட்டும் பதவியில் நீடிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

அண்மைக் காலத்தில் இந்தியா – கனடா இடையே உறவுகள் சுமூகமாக இல்லை. கனடாவில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கார்னி கூறியது என்ன?

கனடாவில் ஃபெடரல் தேர்தல்கள் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளன, ஆனால் கார்னி முன்கூட்டியே தேர்தல்களை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்றதால், தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது லிபரல் கட்சிக்கு சாதகமாக இருக்கலாம் என ஆய்வாளர்களின் கணிக்கின்றனர்.

தான் பிரதமரானால் இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்படும் என மார்க் கார்னி அண்மையில் தெரிவித்திருந்தார். ஒத்த கருத்துடைய நாடுகளுடன் கனடாவின் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர் பேசினார்.

"ஒத்த கருத்துடைய நட்பான நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த கனடாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுடன் நமது உறவை மீண்டும் கட்டமைக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த வர்த்தக தொடர்புகளைச் சுற்றி இருதரப்புக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். நான் பிரதமராக இருந்தால், அந்த வாய்ப்பை நான் எதிர்நோக்கியிருப்பேன்." என்றார் கார்னி.

ஜனவரியில் ஜஸ்டின் ட்ரூடோ தனது ராஜினாமாவை அறிவித்த போது, இந்திய வெளியுறவுத்துறை, கனடாவுடன் இருதரப்பு உறவை வலுவடையச் செய்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தது.

கனடாவில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாக இந்தியாவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார்.

அதே நேரம், இந்தியா-கனடா இடையே வலுவான உறவு இருப்பதாகவும். இந்த உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும், இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்க இந்தியா தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா - கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியா- கனடா உறவில் பதற்றம் ஏற்பட்டது ஏன்?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த இந்தியா அவற்றை முட்டாள்தனமானவை என்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும் விமர்சித்திருந்தது.

இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதுடன், தங்களது குடிமக்களுக்கு பயண ஆலோசனைகளையும் வழங்கின. இந்தியா கனடாவுக்கு அளித்து வந்த விசா சேவையை நிறுத்தி வைத்தது.

இந்தியாவில் குற்றங்களுக்காக தேடப்படுபவர்களுக்கு கனடா புகலிடம் அளிப்பதாக இந்தியா கூறியிருந்தது.

இந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ, அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கோ கனடாவிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும் இந்தியா தெரிவித்தது.

இந்த கசப்புணர்வுக்கு மத்தியில், இந்தியா - கனடா இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையை எட்டியது.

ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், இந்தியாவுடனான உறவை கனடாவால் மேம்படுத்த முடியுமா என்பது குறித்து தற்போது சூடான விவாதம் எழுந்துள்ளது.

இந்தியா - கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம், Getty Images

"உறவுகளை மேம்படுத்துவது கனடாவின் பொறுப்பு"

அஜய் பிஸாரியா கனடாவுக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார்.

ட்ரூடோவை தவிர கனடா அரசில் எந்த மாற்றமாக இருந்தாலும் அது திருப்புமுனையாக இருக்கலாம் என்றும் இரு நாட்டு உறவுகளை சீரமைக்க ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"ஆனால் அதைச் செய்ய இந்தியா அவசரப்படாது, ஏனென்றால் கனடாவில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்கைப் பெற்ற புதிய பிரதமர் வந்த பின்னர்தான் இந்தியாவும், கனடாவும் பேச்சுவார்த்தை நடத்தும்," என்கிறார் அவர்.

பிஸாரியாவின் கூற்றுப்படி, இந்திய தூதரக உயர் அதிகாரியையும், மூத்த அதிகாரிகளையும் வெளியேற்றும் இறுதி நடவடிக்கை கனடாவால் நவம்பரில் மேற்கொள்ளப்பட்டது என்பதால் பொறுப்பு தற்போது கனடாவை சேர்ந்தது.

வர்த்தகம் மற்றும் மக்கள் இடையேயான நேர்மறையான உறவுகள் அரசியல் கொந்தளிப்பால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் எப்போதும் இல்லாத அளவு மோசமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழலில் கனடா அல்லது கனடாவின் புதிய பிரதமர் உறவுகளை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக முதல் கட்டமாக இந்திய தூதரக அதிகாரிகளை பரஸ்பரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்."

"ட்ரூடோ வெளியேறுவது ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல சந்தர்ப்பம். ட்ரூடோ உறவுகளை தனது தனிப்பட்ட பிரச்னையாக எடுத்துக்கொண்டார் என்பதுதான், இரு நாடுகளின் மோசமான உறவுகளின் சாராம்சம். எனவே இந்தியாவில் இது ட்ரூடோவின் பிரச்னையாக பார்க்கப்பட்டது, கனடாவின் பிரச்னையாக அல்ல", என்று பிஸாரியா தெரிவிக்கிறார்.

புதுடெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசனில், ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறை துணைத் தலைவராக இருக்கிறார் பேராசிரியர் ஹர்ஸ் வி பண்ட்.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக மார்க் கார்னி பிரதமரானது இந்தியாவுக்கு நற்செய்தி என்கிறார் அவர்.

"ட்ரூடோவுடனான விஷயம் தனிப்பட்டதாகிவிட்டதாக நினைக்கிறேன். ட்ரூடோவால் உள்ளூர் அரசியலைத் தாண்டி பார்க்க முடியவில்லை என தோன்றுகிறது. மார்க் கார்னியின் கொள்கைகளுக்கும் உள்ளூர் அரசியல்தான் வடிவம் கொடுக்கும். ஆனால் ஒரு அரசோ, தலைமையோ மாறும்போது ஒரு புதிய தொடக்கத்திற்கு வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன். இது இந்தியா- கனடா இடையேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இரு தரப்பு உறவுகளை சீரமைப்பதற்கு இரு நாடுகளும் முன்னோக்கி நகர வாய்ப்பு உள்ளது," என பண்ட் கூறுகிறார்.

"தற்போது பிரச்னைகளை எந்த அளவுக்கு இரு நாடுகளும் எதிர்கொள்கின்றன, பின்னர் இதை உள்நாட்டு அரசியல் எந்தளவு பாதிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் தற்போது உறவை மீண்டும் தொடங்கி அதை சமன்படுத்த இது ஒரு வாய்ப்பு என நான் நினைக்கிறேன்.," என கூறுகிறார் பண்ட்.

இந்தியா - கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் மோதியும்

கனடாவின் நிலைப்பாடு தளருமா?

கனடாவில் மாறும் சூழ்நிலைகள் காரணமாக குடியேற்றம் அல்லது காலிஸ்தான் போன்ற பிரச்னைகளில் கனடாவின் நிலைப்பாடு மாறுமா?, தளருமா?

வாக்கு வங்கி எந்த பிரதமருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்பதால் இந்த பிரச்னைகள் தொடர்பான சிக்கல்கள் போய்விடாது என அஜய் பிஸாரியா இது குறித்து தெரிவித்தார்.

"எனவே இது முழுமையாக போய்விடப் போவதில்லை. ஆனால், ட்ரூடோ இதை தனிப்பட்ட பிரச்னையாக்கி மோசமாக்கிவிட்டார். தற்போது அதை மேம்படுத்த ஒரு வாய்ப்பு. எனவே உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாவிட்டாலும், இதற்கு நீண்ட காலம் எடுக்கும். நாம் உறவுகளை நிலைப்படுத்தி அது தற்போது இருக்கும் குழியிலிருந்து வெளியே எடுக்கமுடியும்," என்கிறார் அவர்.

மறுபுறமோ, பேராசிரியர் பண்ட் இதுகுறித்து பேசும் போது ,"இதை செய்வது லிபரல் கட்சியினருக்கு மிகவும் கடினம். தேர்தலில் போட்டி கடினமாக இருக்கும் என்பதால் இதன் பின்னால் உள்ளூர் அரசியல் காரணமிருப்பதாக நான் நினைக்கிறேன். பழமைவாத கட்சியினர் தற்போது முன்னணியில் உள்ளனர். லிபரல் கட்சியினரும் தங்களது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து வருகின்றனர். ஆனால் அது கடுமையான தேர்தலாக இருந்தால், அரசியல் கணக்குகள் முக்கியத்துவம் பெறும் என நினைக்கிறேன். மார்க் கார்னியை பொருத்தவரை, பொருளில் மாற்றம் என்பதைவிட பாணியிலேயே மாற்றமிருக்கலாம்."

பேராசிரியர் பண்டின் கூற்றுப்படி, விஷயங்களை தனிப்பட்ட பிரச்னையாக்கிய ட்ரூடோவின் வழி, ஒருவகையில் அதுவும் ஒரு பாணிதான்.

"ட்ரூடோ செய்ததைப் போல் பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை விட, காலிஸ்தான் விவகாரத்தை மூடிய கதவுகளுக்கு பின்னால் தூதரக ரீதியாக கையாள்வது எப்படி என்பதை இனங்காண வேண்டும்," என்கிறார் அவர்.

பண்ட் கூறுகிறார், "இரு நாடுகளுக்கிடையிலான உறவில் ஒரு மாற்றம் இருப்பதால், கனடா அரசின் குரல் வரும் நாட்களில் தளரக் கூடும்."

"ஆனால் பிரச்னையின் சாரத்திற்கு வரும் போது, தேர்தல் கணக்குகள் என்ன, லிபரல் கட்சியின் பல்வேறு பிரிவினரும் அவர்களின் பல்வேறு கூட்டணி கட்சியினரும் தேர்தலுக்கு பிறகு எவ்வளவு வலுவாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் மார்க் கார்னி தன்முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைக்க விரும்புவார் என்றும் கூட்டணி கட்சியினரை முழுமையாக தனிமைப்படுத்த அவர் விரும்ப மாட்டார் என நான் நினைக்கிறேன்."

கார்னி நிலையை முழுமையாக மாற்றிவிடுவார் என கூறுவது கடினம் என்கிறார் பேராசியர் பண்ட்.

"ஆனால் நிச்சயம் அவர்களது பாணி வேறாக இருக்கக்கூடும், அந்த அணுகுமுறை சில பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவக்கூடும்," என்கிறார் அவர்.

இந்தியா - கனடா, மார்க் கார்னி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

கனடாவுடனான உறவு மோசமானது குறித்த இந்தியாவின் நிலைப்பாடும், கண்ணோட்டமும் முதிர்ச்சியானதாக இருந்தது என்று சொல்கிறார் அஜய் பிஸாரியா.

"நெருக்கடி ஏற்பட்ட போதும் நாம் அதை ட்ரூடோவின் பிரச்னையாக பார்த்தோம். ட்ரூடோவின் சுமை இல்லாத ஒரு புதிய கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறவுகளை நிலைப்படுத்தி, இயல்பானதாக மாற்ற இந்தியா தயாராக இருக்கிறது." என்று அவர் சொல்கிறார்.

இந்தியாவும் கனடாவும் அதிகாரிகள் மட்டத்திலும், இரண்டாம் நிலையிலும் ஏற்கனவே ஏராளமான தொடர்பு வைத்துள்ளனர். கனடா உளவு தலைவர் டேனியல் ரோஜர்ஸ் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இந்தியாவில் அடுத்த வாரம் சந்திப்பார்.

"எனவே இந்த பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு அளவில், அதிகாரிகள் அளவில் தொடரும். ஆனால் அரசியல் உறவுகளை சீராக்க, ஒரு புதிய அரசு அமைக்கப்படவேண்டும். அதன் பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். நான் சொன்னதைப் போல், உறவுகளை முடிப்பதற்கான நடவடிக்கையை அவர்கள் எடுத்தார்கள் என்பதால் தொடங்குவதற்கான நடவடிக்கை அவர்கள் தரப்பில் எடுக்கப்பட வேண்டும்", என்று அஜய் பிஸாரியா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)