மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா?

    • எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தற்போது பதினாறு வயதாகும் ஹெலனுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட போது, அவருடைய தந்தை தான் அவருக்கு உதவினார். அப்போது, அவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

இளம் வயதினருடன் மாதவிடாய் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம். அதிலும் அதை அனுபவிக்காதவர்கள் அதைப் பற்றி பேசும் போது சங்கடமாக இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசிய தனது அப்பா, இது வழக்கமாக எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொன்னது அந்த சமயத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது என்று ஹெலன் கூறுகிறார்.

"அந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அப்பாக்களால் சொல்ல முடியாது என்பது உண்மை என்றாலும், அது உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சொல்ல முடியும், அதைப் பற்றி பேசவும், ஆலோசனை வழங்கவும் முடியும்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும் மாதவிடாய் பற்றிப் பேசுவது பலருக்கும் சங்கடம் அளிக்கிறது என்பதால், பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் தொடர்பான விஷயத்தை கையாள்வது பெரும்பாலும் அம்மாக்களாகவே இருக்கின்றனர்.

மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்று நினைப்பதை கேள்வி எழுப்பும் அப்பாக்களில், ஹெலனின் தந்தை ஜான் ஆடம்ஸ்-உம் ஒருவர்.

இப்போது 16 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருவரும் குழந்தைகளாக இருந்த போது வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து வந்தார் ஜான். அப்போது, தங்கள் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றிப் பேசுவதற்கு மிகவும் சங்கடமாக உணர்ந்ததாக வேறு சில பெற்றோர்கள் கூறியதை அவர் கேட்டார்.

"இதைப் பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் காத்திருந்தார்கள், ஆனால் இதைப் பற்றி நமது குழந்தைகளிடம் பேசுவது ஆசிரியர்களின் வேலை என்று எனக்குத் தோன்றவில்லை."

மாதவிடாய் சமயத்தில் எப்படியிருக்கும், அனுபவிக்கக் கூடிய வலியின் அளவு மற்றும் அப்போது தேவைப்படும் பல்வேறு சுகாதாரப் பொருட்கள் குறித்து தனது மகள்களுடன் ஜான் பேசினார்.

"ஆண்கள் இந்த விஷயத்தைப் பற்றி சரியாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, நடைமுறை விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்," என்று அவர் பிபிசி ரேடியோ 5 லைவ்வின் மாத நேர நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.

தற்போது கல்வித்துறையில் பணிபுரியும் ஜான், தான் நிபுணர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் அவர் தனது மனைவி மற்றும் தாயிடம் இது குறித்துப் பேசி தெரிந்து கொண்டார், மேலும் புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் ஆதாரங்களைப் பயன்படுத்தி மகள்களுக்கு வழிகாட்டினார்.

அவரைப் பொறுத்தவரை மாதவிடாய் என்பது சங்கடம் அல்ல, உடல்நலம் சார்ந்த விஷயம். அப்பாக்கள் மாதவிடாய் பற்றி குழந்தைகளுடன் பேசுவது சரியா என்ற எண்ணத்திற்கு தற்போதும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. "நீங்கள், உங்கள் குழந்தைகளின் அருகில் இருப்பதும், அணுகக் கூடியவர்களாக இருப்பதும்" முக்கியம் என்று ஜான் கூறுகிறார்.

மனைவியை இழந்த ராய்க்கு வேறு வழியில்லை. அவரது மனைவி புற்றுநோயால் இறந்த பிறகு, அவர் தனது மகளை தனியாக வளர்த்து வருகிறார்.

அந்த சமயத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றிய சில புத்தகங்களை மகளுடன் சேர்ந்து படிப்பதன் மூலம், ஒன்பது வயதாக இருந்த மகளிடம் மாதவிடாய் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

"ஆரம்பத்தில் அவளுக்கு சிறிது சங்கடமாக இருந்தாலும், நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசினோம்."

பின்னர், அவர் தனது மகளுக்கு செய்முறை விளக்கமும் செய்துக் காண்பித்தார். ஒரு பேண்டை எடுத்து, அதில் சானிடரி நாப்கினை எப்படி ஒட்ட வேண்டும் என்பதை செய்து காட்டி, அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்குமாறு பரிந்துரைத்தார்.

"என்ன நடக்கிறது என்று தெரியாத போது தான் விஷயங்கள் பயமாக இருக்கும். என்னுடைய மகளை யதார்த்த வாழ்க்கைக்குத் தயார்படுத்துகிறேன், அதில் மாதவிடாய், செக்ஸ், காதலர்கள், உறவுகள் ஆகியவையும் அடங்கும். இது எல்லாம் கடினமானது, ஆனால் எதையும் மறைக்க முடியாது."

பல பெண்களுக்கு, அவர்களின் முதல் மாதவிடாய் தொடர்பான நினைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

'மாதவிடாய்க் கால வறுமை'(போதுமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் இல்லாத நிலை) நிறுத்துவதற்காக பாடுபடும் லாப நோக்கற்ற குழுவான Hey Girls-இல் பணிபுரியும் ஹன்னா ரூட்லெட்ஜ், தான் எதிர்கொண்ட சங்கடமான நிலையை நினைத்துப் பார்க்கிறார்.

"நான் மிகவும் சிறியவளாக இருந்தபோதே மாதவிடாய் தொடங்கிவிட்டது, அப்போது எனக்கு 10 வயது" என்கிறார் அவர். "நான் படித்த பள்ளியில் எந்தவிதமான வசதியும் கிடையாது, குப்பைத் தொட்டி கூட இல்லை."

Hey Girls அமைப்பு, 2019-ஆம் ஆண்டில் Pads for Dads என்ற தனது பிரசாரத்தைத் தொடங்கியது, மகள்களிடம் மாதவிடாய் தொடர்பாக எப்படி பேசத் தொடங்குவது என்பதை தந்தைகள் புரிந்துக் கொள்வதற்கான இலவச வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

"அப்பாக்கள் மற்றும் பெற்றோருக்கு இருக்கும் பொதுவான மாதவிடாய் குறித்த தவறான நம்பிக்கைகளை உடைக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார்.

"பெரிய உரையாடலுக்காக காத்திருக்க வேண்டாம், சிறிய அளவிலான பல உரையாடல்கள் தேவை. அத்துடன், வீட்டில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பதை உறுதிசெய்வது, ஆதரவாக இருப்பது பற்றியது" என்று ஹன்னா ரூட்லெட்ஜ் கூறுகிறார்.

பெற்றோர்கள் தங்கள் மகன்களிடம் மாதவிடாய் பற்றிப் பேசி அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற பொது மருத்துவர் நிகாத் ஆரிஃப், தனது மகனிடம் மாதவிடாய் பற்றி பேசத் தொடங்கிய தருணத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்.

தனது குளியலறையில் இருந்த டாம்பான்களில் ஒன்றைப் பார்த்த மகன் அதைப் பற்றி கேட்டபோது, "'ரத்தம் கசிவதால் இதைப் பயன்படுத்துகிறேன்' என்று சொன்னேன்". ஆரம்பத்தில், அவனுக்கு இது பதற்றத்தை ஏற்படுத்தியது என்றும், ஆனால் இது சாதாரணமானது என்றும் எல்லா பெண்களுக்கும் மாதந்தோறும் இவ்வாறு ரத்தம் கசிவது இயல்பான ஒன்று மகனுக்கு புரிய வைத்ததாக நிகாத் ஆரிஃப் கூறினார்.

தற்போது மக்களின் மனோபாவம் வேகமாக மாறி வருவதாக கூறும் ஹன்னா, ஒருகாலத்தில் மாதவிடாய் தொடர்பான உரையாடல்களைத் தவிர்த்திருந்த தனது தந்தையின் மாற்றத்தை கவனித்ததாகக் கூறுகிறார். இப்போது "அவரது பேத்திகளுக்கு ஏதாவது தேவைப்பட்டால் அல்லது மாதவிடாய் தொடர்பாக பேச விரும்பினால், அவர் இப்போது வெளிப்படையாக இருப்பார் என எனக்குத் தோன்றுகிறது".

மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டின் எகேச்சி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பருவமடைதல் மற்றும் மாதவிடாய் பற்றிப் பேசுவதில் பெரும்பாலும் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகக் கூறுகிறார்.

"ஆண் குழந்தைகளை வளர்க்கும் ஏராளமான ஒற்றைத் தாய்மார்கள் உள்ளனர். அவர்கள், பருவமடைதல், மாதவிடாய், இளமைப் பருவம் மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவு பற்றி தங்கள் மகன்களிடம் பேசுவதில்லை.

"அவர்கள் இவ்வாறு பேசுவதை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம், ஏன் அவை இயல்பானதாக இல்லை?" என்று அவர் கேட்கிறார்.

வீட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பது, சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தகவலறிந்த தந்தைகள் சிறந்த சக ஊழியர்களையும் தலைவர்களையும் உருவாக்குகிறார்கள் என்று டாக்டர் எகேச்சி நம்புகிறார்.

இது பணியிடத்தில் மாதவிடாய் குறித்த அவமானத்தைக் குறைக்கவும், மாதவிடாய் சமத்துவத்தை மேம்படுத்தவும் உதவும்.

அனைத்திற்கும் மேலாக, "தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை மேம்படுத்த இதுவொரு அருமையான வழி" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு