You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் தாக்குதலில் இரான் ராணுவ தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? செயற்கைக்கோள் படங்கள் காட்டும் உண்மை
- எழுதியவர், பெனடிக்ட் கார்மன் & ஷயான் சர்டரிசார்டெ
- பதவி, பிபிசி வெரிஃபை
சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் ராணுவ தளவாடங்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்களுடன், இரான் முன்பு அணுசக்தி திட்டத்திற்கு பயன்படுத்திய இடமும் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பார்ச்சின் ராணுவத்தளம்
இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும் போது, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கில் சுமார் 30 கி.மீ (18.5 மைல்கள்) தூரத்தில் உள்ள பார்ச்சின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய ஆயுத தளவாட உற்பத்தித் தளம் என்று நிபுணர்கள் அடையாளம் கூறுகின்றனர்.
மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த இடம் ராக்கெட் உற்பத்தியுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 9-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 27-ஆம் தேதி எடுக்கப்பட்ட தரம் மிக்க செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, குறைந்தது நான்கு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது தெரிய வருகிறது.
தெலகான்2 என்றழைக்கப்படும் அந்த கட்டடங்களில் ஒன்று, இரானின் அணுசக்தித் திட்டத்தோடு தொடர்புடையதாக சர்வதேச அணு சக்தி அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாகும். அங்கு யுரேனியம் இருந்ததற்கான சாட்சிகளை 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்பு கண்டறிந்தது. தடை செய்யப்பட்ட அணு ஆய்வுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றனவா என்ற சந்தேகத்தை அது கிளப்பியது.
கொஜிர் ராணுவத்தளம்
பார்ச்சினின் வடமேற்கில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொஜிர், இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த மற்றொரு இடமாகும்.
“இரானில் பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான கட்டமைப்புகள் அதிகம் கொண்டது கொஜிர்” என்று மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார். 2020-ஆம் ஆண்டில் பெரிய மர்மமான குண்டுவெடிப்பு நடந்த இடமாகவும் இது அறியப்படுகிறது. இந்த இடத்தில் குறைந்தது இரண்டு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன.
ஷஹ்ரூத் ராணுவத்தளம்
டெஹ்ரானின் கிழக்கில் சுமார் 350 கி.மீ தூரத்தில் ஷஹ்ரூத்தில் உள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டிருப்பதும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது. செம்னான் என்ற வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீண்ட தூர ஏவுகணைகளின் பாகங்கள் தயாரிக்கப்படுவதால், இதுவும் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்திருக்கலாம் என்று ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார்.
அதன் அருகில் ஷஹ்ருத் விண்வெளி மையம் அமைந்துள்ளது, அங்கிருந்து தான் 2020-ஆம் ஆண்டு இரான் தனது ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
நக்ஜிர் ரேடார் தளம்
இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை பல இடங்களில் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் கிடைத்திருக்கும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இதை உறுதி செய்வது கடினம்.
ரேடார் பாதுகாப்பு அமைப்பு என நிபுணர்களால் கண்டறியப்படும் இடம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் காண முடிகிறது.
இலாம் எனும் மேற்கு நகரத்துக்கு அருகில் ஷாஹ் நக்ஜிர் மலைகளில் இந்த இடம் அமைந்துள்ளது. ஜேன்ஸ் எனும் உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் ஜெரமி பின்னி, இது புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று கூறுகிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இடமாக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த இடத்தில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
தென்மேற்கு மாகாணம் குசெஸ்தானில் உள்ள அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படத்தை காணும் போது தெரிய வருகிறது. எனினும் இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இரானின் சில பகுதிகளில் கழிவுகள் காரணமாகவோ, பாதுகாப்பு தளவாடங்களின் தவறுதலான தாக்குதல் காரணமாகவோ சேதமடைய வாய்ப்புண்டு.
சனிக்கிழமை காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தங்கள் இலக்குகளில் ஒன்று என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இரானிய அதிகாரிகள் குசெஸ்தானை இஸ்ரேல் தாக்கியதை உறுதி செய்தனர்.
அபதான் இரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். அது, ஒரு நாளுக்கு 5 லட்சம் பாரல்கள் தயாரிக்கக் கூடிய திறன் கொண்டது என அதன் செயல் தலைவர் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் படங்களால் சேதமடைந்த கட்டடங்களை துல்லியமாக அடையாளம் காண முடியாது.
உதாரணமாக, ஹஸ்ரத் அமிர் பிரிகேட் வான் பாதுகாப்பு தளத்துக்கு அருகில் புகை எழும்புவதை புகைப்படங்கள் மூலம் உறுதி செய்த போது அந்த இடம் வெற்றிகரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் செயற்கைக்கோள் படங்களை பார்த்த போது அதனை நிழல் சூழ்ந்து இருந்ததால் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இஸ்ரேல் மீது இரான் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)