You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா நடிப்பு குடும்ப ரசிகர்களை கவர்ந்ததா?
- எழுதியவர், சாஹிதி
- பதவி, பிபிசிக்காக
‘கீதா கோவிந்தம்’ படத்தின் வசூல் நூறு கோடியை ஈட்டியதன் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் தேவரகொண்டா, அந்தப் படத்தின் இயக்குநர் பரசுராமுடன் மீண்டும் கைகோர்த்துள்ள திரைப்படம்தான் ஃபேமிலி ஸ்டார்.
குடும்பக் கதைகளை வழங்குவதில் பெயர் பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பரசுராம் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் படம் வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.
ஃபேமிலி ஸ்டார் படம் மீது எழுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ததா? ஃபேமிலி ஸ்டார் படம் பார்வையாளர்களை மகிழ்வித்ததா?
ஃபேமிலி ஸ்டார் படத்தின் கதை என்ன?
கோவர்தன் (விஜய் தேவரகொண்டா) ஒரு நடுத்தர வர்க்க கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்டுமான நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார். அவரின் சம்பளத்தை நம்பி குடும்பத்தில் 10 பேர் இருக்கின்றனர். ஆனால் அதை ஒரு சுமையாகப் பார்க்காமல் தனது பொறுப்பாகப் பார்க்கிறார்.
இந்து (மிருணாள் தாக்கூர்) கோவர்தனின் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார். அதன் பிறகு என்ன நடந்தது? இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு? இந்து புது வீட்டுக்கு வந்த பிறகு கோவர்தனின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
புகழுடன் வாழும் நடுத்தர வர்க்க ஆணின் கதை இது. கூட்டுக் குடும்பங்கள் இன்று கிட்டத்தட்ட மறைந்து வரும் காலகட்டத்தில், விஜய் தேவரகொண்டா போன்ற இளம் ஹீரோவை வைத்து நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் கதையைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
கோவர்தன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கும் கதை, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை ஜாலியாக காட்சிப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்துவின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு குடும்பமாக வரும் காட்சிகள் அதிகமாக இல்லை.
கதையில் வரும் கோவர்த்தனின் அண்ணன் கதாபாத்திரம் வலுவாக இல்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்தக் கதாபாத்திரம் கதையில் அதிகம் ஒட்டவில்லை. அதேபோல தேவையற்ற சண்டைக் காட்சிகளும் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரி
குடும்பக் கதைகளில், உணர்ச்சி மிகுந்த காட்சிகளே முக்கிய ஈர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஃபேமிலி ஸ்டாரில் அந்தக் காட்சிகளின் அளவு குறைவாக உள்ளது.
கீதா கோவிந்தம் படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் மோதலை சுவாரசியமாகக் கொண்டு சென்று ரசிக்க வைத்த பரசுராம், அதே திசையில் கதையை இயக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது வேலை செய்யவில்லை.
முதல் பாதியில், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வந்த அமெரிக்கா எபிசோட் ஒன்றை தெளிவாக்கிவிட்டது. காட்சிகள் சித்தரிக்கப்பட்ட விதத்தில் எங்குமே சுவாரஸ்யம் இல்லை.
கதையின் போக்கு எதை நோக்கி நகர்கிறது என்ற தெளிவில்லாமல் படம் நகர்கிறது. குறிப்பாக ஹீரோ, ஹீரோயின் இடையே கெமிஸ்ட்ரி இல்லை. படத்தின் இரண்டாவது பாதியில் கதாநாயகிக்கு வசனம் இல்லாமல் பெரும்பாலும் ஊமை கதாபாத்திரத்தில் வருவது போல படம் செல்கிறது.
பிறகு இந்தியா வந்த பின்பு கதை மீண்டும் தொடங்குகிறது. ஆனால் ஏற்கெனவே படம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளால், இது எந்தப் பலனையும் அளிக்கவில்லை. மேலும் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் சினிமாத்தனமாகவும், செயற்கைத்தனமாகவும் உள்ளது.
குடும்பங்கள் கொண்டாடும் நாயகனா?
கதையும், வசனமும் பலவீனமாக இருந்தாலும், விஜய் தேவரகொண்டா திரையில் வருவதால் படம் பார்க்கும்படி இருக்கிறது. கிட்டத்தட்ட படத்தைத் தன் தோளில் அவர் சுமந்துள்ளார். நடுத்தர குடும்பத்து ஆணாக திரையில் அழகாகத் தெரிகிறார்.
அவரது வசன உச்சரிப்பும், உடல் மொழியும் பிரமிக்க வைக்கிறது. சண்டைக் காட்சி தேவையில்லாமல் வைக்கப்பட்டிருந்தாலும், விஜய் தேவரகொண்டா அதில் சிறப்பாகத் தெரிகிறார்.
மிருணாள் அழகான கதாநாயகியாக வந்து முதல் பாதியில் தனது நடிப்பால் வசீகரிக்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு கடைசி வரை இயக்குனர் குரல் கொடுக்கவில்லை.
குடும்ப உறுப்பினர்களாக வரும் கதாபாத்திரங்கள் கதையில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு இல்லை. ரோஹினி ஹட்டங்கடியின் கதாபாத்திரம் இறுதி வரை பயணித்தும், கிளைமாக்ஸில் முக்கியத்துவத்தை இழந்தது.
கிஷோரின் காமெடி வேலை செய்யவில்லை. ஜெகபதி பாபு வழக்கமான ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். படத்தில் மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
படத்தின் உருவாக்கம் எப்படி உள்ளது?
கோபிசுந்தரின் இசை மின்னவில்லை. அவரது இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. கல்யாணியின் பாடல் டைட்டிலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னணி இசையும் மங்கலாகக் கேட்கிறது. சில இடங்களில் சத்தம் அதிகமாக வருகிறது.
ஒளிப்பதிவு சற்று ஆசுவாசமாக இருக்கிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஆடம்பரமாக இருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். அமெரிக்காவில் ஓர் இரவில் நடக்கும் காட்சிகள் அதிக நீளமாக இருந்தன, அதைக் குறைத்திருக்கலாம்.
பரசுராம் எழுதிய சில ஒன் லைனர்கள் அட்டகாசமானவை, ஆனால் அவை ஏதும் நினைவில் நிற்கவில்லை. கீதா கோவிந்தம் படத்தில் வந்த சில ஃபார்முலாக்களை இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவை ஏதும் இந்தப் படத்தில் வேலை செய்யவில்லை.
குடும்பத் திரைப்படத்திற்கான வலுவான உணர்ச்சி ஏதும் இல்லாமல், பலவீனமான திரைக்கதையுடன் படம் இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)