2கே கிட்ஸ் தீவிரமாக விரும்பும் அளவுக்கு பிடிஎஸ் பாடல்களில் அப்படி என்ன இருக்கிறது?

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

1970 கிட்ஸ்: எனக்கு பி.பி சீனிவாசன் பாடல்கள் பிடிக்கும்.

1980 கிட்ஸ்: இளையராஜா பாடல்கள் பிடிக்கும்.

1990 கிட்ஸ்: ஏ.ஆர் ரஹ்மான் பாடல்கள் பிடிக்கும்.

2000 கிட்ஸ்: பி.டி.எஸ் பாடல்கள் பிடிக்கும்.

வெள்ளித் திரையிலும் வானொலியிலும் மட்டுமே பாடல்கள் கேட்ட காலம் மாறி, வெள்ளிக்கிழமை மாலை புதுப் பாடல்கள் கேட்க காத்திருக்கும் காலம் மாறி, 24 மணிநேர மியூசிக் சேனல்களில் பிடித்த பாடலை போன் செய்து போடச் சொன்ன காலமும் மாறி, தற்போது நினைத்த நேரத்தில் நினைத்த பாடலை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலை இருக்கிறது.

இதைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கு நன்றி!

பிடிஎஸ் ரசிகர்கள் பேசும் மொழி

உலகமே ஒரு கிராமம்தான் என்று பேசும் வேளையில், கடல் கடந்து பல மைல்கள் தூரத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கலாசாரத்தை நம் சொந்த ஊரில் இருப்பது போலத் தெரிந்துக் கொண்டு, அதனுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தற்போதுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரது பிளே லிஸ்டில் இருப்பவை பிடிஎஸ் (BTS) பாடல்கள். அது என்ன பி.டி.எஸ்?

பி.டி.எஸ் (Bangtan Boys/ Bangtan Sonyeondan) என்பது தென் கொரிய நாட்டின் இசைக்குழு. இந்த இசைக்குழு 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தக் குழுவின் பாடல்கள், தென் கொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

இந்தக் குழுவில் ஆர்.எம் (RM- Rap Monster), ஜின் (Jin), சுகா(Suga), ஜெ ஹோப் (J-Hope), ஜிமின் (Jimin), வி (V), ஜுங்குக் (Jungkook) என ஏழு இளம் ஆண்கள் உள்ளனர்.

“என்னோட பயஸ் (bias) ஜிம்” (பொருள்: எனக்கு ஜிம் பிடிக்கும்)

“நான் OT7” (பொருள்: எனக்கு குழுவில் உள்ள ஏழு பேரையும் பிடிக்கும்)

“நான் mature fan” (பொருள்: நான் இந்த பாடல்களைக் கேட்க ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே பொழுதுபோக்கு எது, வாழ்க்கை எது என்ற வரம்பு எனக்குத் தெரியும்)

இதுதான் இளம் பிடிஎஸ் ரசிகர்களின் மொழியாக உள்ளது. பிடிஎஸ் கம்யூனிட்டி (BTS community) என்ற அவர்களுக்கான தனி உலகம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதில் அவர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கும் பிடிஎஸ் ரசிகர்களுடன் இணைய முடிகிறது. தங்கள் ரசனைகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. பிடிஎஸ் மட்டுமல்லாமல் பிளாக் பிங்க் (Black Pink), 17 (பதினேழு) போன்ற பிற கொரிய இசைக் குழுக்களின் ரசிகர்கள் இணைந்து K-pop community-இல் தங்கள் நட்பை உருவாக்கிக் கொள்கின்றனர்.

ஆழமான அர்த்தமுள்ள பாடல் வரிகள்

பிடிஎஸ் இசைக் குழுவின் ரசிகர்கள் பலரை ஈர்த்ததற்குக் காரணம் அதன் பாடல் வரிகளே. அவை ஒரு நாடு, ஒரு மதம் ஒரு இனக்குழுவுக்கு மட்டும் பொருத்துமானது என்றில்லாமல் உலகளாவிய கருப்பொருட்களைக் கையாள்கிறது. இதனால் வெவ்வேறு கலாசாரங்களில் இருந்து வரும் ரசிகர்களும் தங்களை இந்த இசையுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது.

“நான் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். அப்போது எனக்கு ஊக்கமாக இருந்தது இசைதான் என்கிறார்,” சென்னை பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கிருத்திகா.

இவர் மட்டுமல்லாமல் பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த இசை அறிமுகமானது கொரோனா காலத்தில்தான். இதற்கு ஒரு காரணம், அனைவரும் வீட்டில் இருந்து, இணைய சேவையை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மற்றொன்று, கிருத்திகா போன்று பலர் ஊரடங்கு காலத்தில், சமூக உறவாடல் இல்லாமல் மிகவும் தனிமையாக உணர்ந்தனர், மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அந்தச் சூழலில் பிடிஎஸ் பாடல்கள் மனதுக்கு மிருதுவானதாக, ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருந்துள்ளது. இது ஏன் என்று பிடி எஸ் பாடல்கள் சிலவற்றைக் கேட்டால் தெரியும்.

சுய விருப்பம், தன்னம்பிக்கை, ஊக்கம், கடுமையான உழைப்பு, வெற்றி தோல்வி, அன்பு, துரோகம், உற்சாகம் என உலகளாவிய கருப் பொருட்களைக் கொண்டதாக அவர்களின் பாடல்கள் அமைந்துள்ளன.

உதாரணமாக, ‘மேஜிக் ஷாப்’ (Magic Shop) என்ற பாடல், ஒரு கனவு உலகத்துக்குச் சென்று ஆதரவு தேடச் சொல்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் மகிழ்ச்சி, சுய தேடலுக்கான சாவியை அவர்களேதான் வைத்துள்ளனர் என்று அந்தப் பாடல் கூறுகிறது.

இந்தப் பாடலில் “I do believe your galaxy” என்ற வரிகள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதால் இந்த வரிகளைத் தனது கையில் பச்சை குத்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயோமெடிக்கல் முதுநிலை படிக்கும் ரம்யா.

பிடிஎஸ் குழுவின் இசை நகரம், கிராமம், ஐரோப்பியா, ஆசியா என பல்வேறு கலாசார பின்னணியில் இருந்து வருபவர்களுக்கும் பிடித்திருக்கிறது.

பி.டி.எஸ் ஒரு கலாசார பாலமாக இருக்கிறது. அவர்களது இசை ஒரே வகையாக இல்லாமல், பல்வேறு உலகளாவிய சமூகங்களை ஒன்றிணைக்கும் வகையில், பல்வேறு வகைகள் கலந்திருக்கிறது. அதன் உறுப்பினர்களின் பன்மொழித் திறன்கள் உலகளவில் ரசிகர்களுடன் இணைவதற்கு உதவுகிறது.

எனவே இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருப்பவரும்கூட அந்த இசையின் ரசிகர் ஆகிறார் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

பிடிஎஸ் உறுப்பினர்கள் தங்கள் சொந்த அடையாளங்களைக் கொண்டாடுவதற்காகவும், மற்றவர்களின் அடையாளங்களை மதிப்பதற்காகவும் அறியப்படுகிறார்கள். அவர்களின் இசை உலகளவில் ஒற்றுமை மற்றும் ஏற்றுக்கொள்ளுதலுக்கான செய்தியைப் பரப்புகிறது.

"ஆன்சர்: லவ் மைசெல்ஃப்" (Answer: Love Myself) போன்ற பாடல்களில், பிடிஎஸ் சுயமரியாதையையும், ஏற்றுக்கொள்ளுதலையும் ஊக்குவிக்கிறது. குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும், தங்கள் மதிப்பை உணர்வதற்கும் பாடல் வரிகள் கேட்பவர்களை ஊக்குவிக்கின்றன. ஊடகங்களில் நேர்மறை முன்மாதிரிகளைத் தேடும் ஒரு தலைமுறையினருடன் இது பெரிதும் ஒத்துப்போகிறது.

“நான் பாதுகாப்பற்று உணரும்போது, என் தோற்றம் குறித்த எண்ணங்கள் வரும்போது, பிடிஎஸ் பாடல்கள் எனக்குப் பெரிதும் உதவியுள்ளன. நம்மை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அந்தப் பாடல்கள் வலியுறுத்துகின்றன,” என்று பத்தாம் வகுப்பு படிக்கும் இனியா கூறுகிறார்.

பிடிஎஸ் குழுவினரின் பாடல்கள் மட்டுமல்லாமல், அந்தக் குழுவினரின் எளிமையான அணுகுமுறையும் இந்தக் குழு பிரபலமாகி இருப்பதற்குக் காரணம். பிடிஎஸ் உறுப்பினர்கள் தங்கள் ரசிகர்களை நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தத் தயங்காதவர்கள்.

அவர்கள் அடிக்கடி ரசிகர்களை சமூக ஊடகங்களில் நேரலையிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் சந்தித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி, அவர்களுடைய ஆதரவுக்கு நன்றி சொல்கிறார்கள். இதன் காரணமாக, ரசிகர்களோல் பிடிஎஸ் குழுவினருடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க முடிந்தது.

“எனக்கு பிடிஎஸ் பாடல்கள் பிடிக்கும். ஆனால் அதைவிட அவர்களை ரொம்பப் பிடிக்கும். எவ்வளவுதான் சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் மூழ்கியிருந்தாலும் இளைஞர்களுக்குத் தனிமை உணர்வு இருக்கத்தான் செய்கிறது.

பிடிஎஸ் குழுவினரின் நேரலை தொடங்கும்போது, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டுத்தான் தொடங்குவார்கள். ரசிகர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள், ட்வீட்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும், என்னைப் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அன்புடன் இருங்கள், ஏனென்றால் எனக்கு அன்பு வழங்குவதே நீங்கள்தான் என்று ஆர்எம் (பிடிஎஸ் உறுப்பினர்) கூறுவார். இவற்றோடு என்னால் தனிப்பட்ட முறையில் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது,” என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சீதாலக்ஷ்மி.

பிடிஎஸ் உறுப்பினர்கள் மனநலம் குறித்தும் வெளிப்படையாகத் தங்கள் பாடல்களில் பேசுகின்றனர். இன் த ட்ரூத் அண்டோல்ட் (In the Truth Untold) பாடலில் ரசிகர்கள் தங்கள் போராட்டங்கள் குறித்துப் பேச அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இதுதவிர அந்தக் குழுவினர் வேண்டுபவர்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தென் கொரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் சேவை புரிய வேண்டும் என்பதால், தற்போது இசைக் குழுவினர் ராணுவ சேவையில் உள்ளனர். எனவே இசைக்குழு சில காலம் விடுப்பில் உள்ளது.

இதுபோன்ற இசைக்குழுக்களின் நேர்மறையான கருத்துகள் இளைஞர்களுக்குத் தனிப்பட்ட உத்வேகம் அளிப்பதாக இருப்பதாலும், சில ரசிகர்கள் தீவிரமாக அதில் மூழ்கி, அவர்களைப் போலவே உடை அணிந்துகொள்வது, சிகை அலங்காரம் செய்து கொள்வது சில நேரங்களில் உண்மைக்குப் பொருந்தாத முடிவுகளையும் எடுக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)