கிறிஸ்தவத்தில் நரகம் தோன்ற அடித்தளமான 'இயேசுவின் வார்த்தைகள்' - இஸ்லாம் என்ன சொல்கிறது?

"நீ கண்ணீர் நிறைந்த நகரத்திற்குச் செல்வது எனக்காகவே, நீ நித்திய வேதனை அடைவதற்கும், தண்டனை வழங்கப்பட்ட இனம் துன்பப்படும் இடத்திற்குச் செல்வதும் எனக்காகவே, நான் தெய்வீக சக்தியாலும், உன்னத ஞானத்தாலும், முதல் அன்பாலும் படைக்கப்பட்டேன். எனக்கு முன் எதுவுமே இல்லை, நீங்கள் இங்கு நுழைகிறீர்கள் என்றால் நம்பிக்கையை கைவிட்டுவிடுங்கள்."

ஒரு மேற்கத்திய கற்பனைக் கதையின்படி நரகத்திற்கு அழைத்து செல்லும் கதவின் மேற்பகுதியில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ்பெற்ற இந்தக் கதையின்படி, நரகம் என்பது பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படும் ஒரு பயங்கரமான இடம் என்ற கிறிஸ்தவக் கருத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தண்டனை மற்றும் சித்திரவதையின் கூடமாக கூறப்படும் நரகம், பைபிளில் மிக அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

மாறாக, நரகத்தின் கருத்து என்பது நமக்குத் தெரிந்தவரை, எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் பார்வை, கிரேக்கர்களின் ஹேட்ஸ் மற்றும் பாபிலோனியர்களின் புராணக்கதைகள் உள்ளிட்ட பல்வேறு மரபுகள் மற்றும் புனைவுகளின் கலவையாகும்.

"பாவம் செய்தவர்களை தண்டிக்கும் நெருப்பு மற்றும் பேய்கள் நிறைந்த இடம் நரகம் என்ற கருத்து யூத-கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நிலவும் பிரத்யேகமான ஒரு கருத்தாகும். ஆனால் இது மேற்கு ஆசியாவிலிருந்து உருவான நாம் அறிந்த கதைகள் மற்றும் யோசனைகளின் முறைப்படுத்தலில் இருந்து உருவானது," என்று பிபிசி முண்டோவிடம் தெரிவிக்கிறார் ஜுவான் டேவிட் டோபோன் கனோ. இவர் கொலம்பியாவின் சான் பியூனவென்டுரா பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியர் மற்றும் இறையியலாளர் அவர்.

டோபோனைப் பொறுத்தவரை, நரகம் என்ற கருத்து பிற மதங்கள் அல்லது கலாச்சாரங்களிலும் காணப்படும் ஒரு கருத்துதான், ஆனால் மேற்குலக கிறிஸ்தவத்தில் அறியப்பட்டவைகளில் இருந்து அவை மிகவும் மாறுபட்ட விளக்கங்களுடன் இருக்கின்றன.

"உதாரணமாக, கொலம்பியாவில் வாழ்ந்த முயிஸ்காஸ்களுக்கு பாதாள உலகம் ஒரு அழகான இடமாக இருந்தது. சொல்லப்போனால் அவர்கள் அதை 'மரகதங்களின் நிறம் போன்ற பச்சை' என்று விவரிக்கிறார்கள்," என்று விவரிக்கிறார் இந்த இறையியலாளர்.

நிச்சயமாக நரகம் குறித்த கருத்து என்பது இத்தனை ஆண்டுகளில் பல விதமாக மாற்றப்பட்டுள்ளது மற்றும் தொடர்ந்து மாற்றி எழுதப்பட்டு வருகிறது.

அதில் தற்போதைய கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் கருத்தின் இறையியல் பார்வையும் ஒன்றாகும்.

“உண்மை என்னவெனில் ஆன்மாக்கள் தண்டிக்க படுவதில்லை. மனம் திருந்துபவர்களுக்கு கடவுளின் மன்னிப்பு வழங்கப்படுகிறது, அவர்கள் கடவுளை வணங்குபவர்களின் பட்டியலில் இணைக்கப்படுகிறார்கள்”, என்று 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் யூஜெனியோ ஸ்கல்ஃபாரியுடனான உரையாடலில் தெரிவித்திருந்தார் ஃபிரான்சிஸ்.

“ஆனால், தவறுகளுக்கு வருந்தாதவர்கள் மற்றும் மன்னிக்க முடியாதவர்களின் ஆன்மாக்கள் மறைந்து போகின்றன. நரகம் என்ற ஒன்று இல்லை, ஆனால் பாவம் செய்த ஆன்மாக்கள் மறைந்து போவது நடக்கிறது” என்று குறிப்பிட்டார் அவர்.

ஆனால், அவர் குறிப்பிட்ட வார்த்தைகளை பத்திரிக்கையாளர் தவறாக குறிப்பிட்டுள்ளதாகவும், அவரின் துல்லியமான வார்த்தைகள் அது அல்ல என்றும் வாடிகன் தெரிவித்தது.

ஆயிரமாண்டு உருவாக்கம்

“நரகத்தின் இருப்பையும் அதன் நித்தியத்தையும் தேவாலய போதனைகள் உறுதி செய்கின்றன. பாவத்தோடு இறக்கும் ஆன்மாக்கள் மரணத்திற்குப் பிறகு உடனடியாக நரகத்திற்கு செல்கின்றன, அங்கு நரகத்தின் வலியை அனுபவிக்கின்றன. அது நித்திய நெருப்பு"

கிறிஸ்தவத் திருச்சபையின் கோட்பாடுகளைப் போதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வினாவிடைத் (Catechism) தொகுதி இப்படித்தான் நரகத்தை விவரிக்கிறது.

ஆனால், எப்படி நீங்கள் “நித்திய நெருப்பை” அனுபவிக்கும் இடம் குறித்த சிந்தனை உங்களுக்கு வருகிறது?

டோபோனை பொறுத்தவரை, மனிதர்களுக்கு அவர்கள் வாழும் உலகை விளக்க முடியாத இடத்திலிருந்து நரகம் குறித்த கருத்து உருவாகிறது.

"உலகத்தை உற்றுநோக்கியதன் வழியாக, இங்கு ஏற்பட்ட புயல்கள், பூகம்பங்கள், உள்ளிட்ட நிகழ்வுகளை அவர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு படுத்தியதாக," டோபன் தெரிவிக்கிறார்.

இந்த சிந்தனைகள் அனைத்துமே எகிப்திய மற்றும் மெசபடோமிய நாகரிகங்களுக்குள், ஆரம்பகால எபிரேயர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையின் நம்பிக்கைகளின் கலவையில் சென்று முடிகிறது.

நரகம் தோன்ற இயேசுவின் வார்த்தைகள் அடித்தளமாக அமைந்தது எப்படி?

"ஹீப்ரு பைபிளின் முதல் பதிப்புகளில், இறந்தவர்கள் செல்லும் இடத்திற்கு ஒரு பெயர் உள்ளது: அது ஷியோல். ஆனால் அது இறந்தவர்கள் செல்லும் இடம் மட்டுமே, அங்கு வேறு எதுவும் நடக்காது,” என்று பிபிசி முண்டோவிடம் விவரிக்கிறார் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள கோர்டன்-கான்வெல் இறையியல் நிறுவனத்தில் புதிய ஏற்பாட்டின் பேராசிரியரான சீன் மெக்டொனஃப்.

இந்த கருத்துடன் மற்றொரு யோசனையும் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார் மெக்டொனஃப் : அது ஜெஹென்னாவின் இடம்.

கொஞ்சம் கொஞ்சமாக ஷியோல் குறித்த முழுமையான கருத்து மாறிவருகிறது. இறந்தவர்களுக்கான இடம் என்பதில் இருந்து, தற்காலிக இடம் என்ற நிலைக்கு அது வந்து விட்டதாக கூறுகிறார் அவர்.

மேலும் அவர், “ விதிகளை கடைபிடிக்காமல் தவறான வழியில் வாழ்ந்தவர்கள் நெருப்பால் நிறைந்த ஜெஹென்னா என்ற இடத்திற்கு செல்லும் அதே சமயத்தில், நல்லவர்களாக மற்றும் விதிகளை மதித்து வாழ்ந்து இறந்தவர்கள் கடவுளிடம் சென்றார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

பாதாள உலகம் மற்றும் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கை குறித்த கருத்துகளின் வேறுபாடுகள் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதை விவரிக்க இது ஒரு முக்கியமான புள்ளி.

"யூத மதத்திற்கும், மற்ற மதங்களுக்கும் இடையே உள்ள பெரிய வேறுபாடுகளில் ஒன்றாக, கடவுள் மனிதர்களுடன் ஒரு சில விதிகளுடன் கூட்டணி அமைக்கிறார், அதுதான் 10 கட்டளைகள் என்று அவர்கள் கூறுவார்கள்" என டோபோன் விளக்குகிறார்.

மேலும் இதில் இரண்டு விளைவுகள் உள்ளது : "இது 'தெய்வீகதின்’ பலன் மற்றும் தண்டனை என்ற கருத்தை உருவாக்குகிறது. விதிகளை கடைப்பிடிப்பவர்களுக்கு பலனும் , கடைப்பிடிக்காதவர்களுக்கு தண்டனையும் என்று கூறுகிறது. ஆனால் மற்ற கலாச்சாரங்களில் இது அவ்வளவு தெளிவாக இல்லாத ஒன்று."

மெக்டொனஃப்பை பொறுத்தவரை, நரகத்திற்கு தண்டனைக்குரிய இடமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் இயேசுவே, அவர் இரண்டு சூழல்களில் ஜெஹன்னாவைக் குறிப்பிடுகிறார்.

“துன்மார்க்கர்கள் சோகத்தையும் அவநம்பிக்கையையும் அனுபவிக்கும், ‘அழுகை மற்றும் பற்களை இடிக்கும்’ இடமான ‘அக்கினி சூளை’ குறித்தும் இயேசு குறிப்பிடுவதாக ,” கூறுகிறார் மெக்டொனஃப்.

"இந்த வார்த்தைகள் மத்திய காலத்தில் நாம் கேள்விப்பட்ட நரகம் பற்றிய கருத்துக்கு அடித்தளமாக இருந்தது, மேலும் அதுவே இன்றுவரை தொடர்கிறது."

டாண்டேவின் நரகம்

பாதாள உலகத்தைப் பற்றிய தெளிவான குறிப்பான ஷியோல் மற்றும் ஹேடிஸ் போன்ற சொற்களை மாற்றுவதற்காக, ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலிருந்து செய்யப்பட்ட லத்தீன் மொழிக்கான முதல் மொழிபெயர்ப்புகளில் லத்தீன் வார்த்தையான "நரகம்" என்பது தோன்றியுள்ளது என நிபுணர்களுக்கு தெளிவாகத் தெரிவதாக கூறுகின்றனர்.

முதல் கிறிஸ்தவர்கள் புதிதாக தோன்றிய மதத்தில் கிரேக்க சிந்தனையை நுழைக்க தொடங்கினர் என்று டோபன் தெளிவுபடுத்துகிறார்.

"அவர்கள் ஒன்றிணையும் ஒருமித்த கருத்து என்பது, மனிதன் என்பவன் உடல் மற்றும் ஆன்மாவால் உருவாக்கப்பட்டவன், இறப்புக்கு பிறகு அவனின் ஆன்மாக்கள் எங்காவது செல்ல வேண்டும் என்ற கொள்கையாக இருக்கும்," என்று அவர் தெரிவிக்கிறார்.

பின்னர் ஆறாம் நூற்றாண்டு வாக்கில், இறையியல் விவாதம் தொடங்கியது. அதில் மனந்திருந்தாத ஆன்மாக்கள் நித்தியத்திற்கும் தண்டனையை அனுபவிக்கும் ஒரு இடம் நரகம் என்ற கருத்து இடம்பிடித்துள்ளது.

"முக்கிய தண்டனை என்பது கடவுள் முன்னிலையில் வழங்கப்படுவதில்லை, நெருப்பு மற்றும் சித்திரவதை என்பது ஒரு அடையாளம் என்பது இறையிலாளர்களுக்கு தெரியும்" என்கிறார் மெக்டொனாஃப்.

14 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய கவிஞர் டாண்டே அலிகியேரி தனது "காமெடி" புத்தகத்தை வெளியிட்டபோது, நரகம் குறித்த திகில் நிறைந்த பார்வை உலகளாவியதாக மாறியது.

"நரகம் எப்படி இருக்கும் என்பதை டாண்டே விவரிக்கவில்லை, மாறாக இந்த இடத்தைப் பற்றி அந்த நேரத்தில் இருந்த கருத்துக்கள் அனைத்தையும் தலைசிறந்த முறையில் ஒருங்கிணைத்து, அவர் ஒரு பொதுவான இடத்தை நிறுவுகிறார் என்று சொல்லலாம்: அது ஒருவர் நித்தியத்திற்கும் துன்பம் அனுபவிக்கும் இடம்,” என்கிறார் டோபோன்.

காலப்போக்கில், விசுவாசிகளின் எதிர்வினை மற்றும் வெவ்வேறு இறையியல் கருத்துக்களின் செல்வாக்கின் விளைவாக நரகத்தின் வரையறை மாற்றப்பட்டுள்ளது.

"தற்போதைய கருத்துப்படி, அந்த இடம் கடவுளிடமிருந்து விலகி இருப்பது, அதில் கடவுள் இல்லை, மாறாக அது ஒரு நித்திய தண்டனை மற்றும் துன்பத்திற்கான இடம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

மற்ற மதங்களில் கூறப்படுவது என்ன?

கல்வியாளர்களைப் பொறுத்தவரை, பிற மதங்கள் மற்றும் கலாசாரங்களில் உள்ள பாதாள உலகம் குறித்த பதிப்புகள், அந்த இடத்தை தண்டனைக்குரிய இடமாக குறிப்பிடாமல், ஆன்மாக்கள் ஓய்வெடுக்கும் இடத்துடன் தொடர்புடையவையாக குறிப்பிடுகின்றன.

உதாரணமாக, பௌத்தத்தில் நரகா என்று அறியப்படும் ஒரு இடம் உள்ளது. இது ஆன்மாவின் நிலைகளான ஆறு மண்டலங்களில் ஒன்றாகும். இதுவே பாதாள உலகம் மற்றும் வேதனைக்குரிய இடமாகக் கருதப்படுகிறது.

ஆனால் அவை நிலையான இடங்கள் அல்ல, ஒரு இடைப்பட்ட இடம்.

இஸ்லாத்தில், குர்ஆன் வெவ்வேறு இடங்களில் "நெருப்பின் இடம்" என்பதை குறிப்பிடுகிறது. மேலும், நேர்மையற்ற ஆன்மாக்கள் ஜஹன்னம் செல்வார்கள் என்று ஒரு வழக்கம் உள்ளது. அதுவே இஸ்லாமில் நரகம் என்று அறியப்படுகிறது.

பொதுவாக மேற்குலகை சேர்ந்த பல கலாசாரங்கள் பேய்கள் வாழும் தண்டனைக்கான இடம் குறித்த கருத்தை கொண்டுள்ளன, ஆனால் ஒவ்வொன்றும் வேறு வேறாக உள்ளது. எகிப்தியர்கள், ஆஸ்டெக்குகள், முயிஸ்காஸ்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளதாக," டோபன் கூறுகிறார்.

உதாரணத்திற்கு, சினோட்ஸ் என அறியப்படும் மகத்தான நீர் கிணறுகள் வழியாக அடையக்கூடிய மாயன் பாதாள உலகமான ஜிபல்பாவை(Xibalbá) அவர் குறிப்பிடுகிறார்.

“இது வேதனைகள் இருக்கக்கூடிய பாதாள உலகம், ஆனால் கடவுளின் சட்டத்திற்கு இணங்கத் தவறியதற்காக தண்டனை வழங்கப்படும் இடம் அல்ல, மாறாக மரணத்திற்குப் பிறகு எல்லா மனிதர்களும் செல்லும் இடம்” என்று விவரிக்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)