மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மத்தியப் பிரதேசத் தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் கள நிலவரம் என்ன, முக்கியப் பிரச்சனைகள் என்ன?

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ.

சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோராம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நடந்துவருகின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதியும், இறுதியாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேச முதல்வர்கள்

1948-லிருந்து 1956 வரை தற்போதைய மத்தியப் பிரதேசத்தின் பகுதிகள், விந்தியப் பிரதேஷ், மத்திய பாரத், போபால் மாநிலம் என்று மூன்றாக இருந்தன. இது தவிர, 1950-இல் இருந்து மத்திய மாகாணம், பேரார், மக்ராய் சமஸ்தானம் ஆகியவை இணைக்கப்பட்டு மத்தியப் பிரதேசம் என்ற மாநிலமும் இருந்து வந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, இவை எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டன. மத்தியப் பிரதேசம் என்ற பெயர் கொடுக்கப்பட்டது

ஆரம்பத்தில் இருந்தே இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1967-இல் சம்யுக்த விதாயக் தளம் என்ற கட்சி சுமார் இரண்டாண்டுகள் ஆட்சியில் இருந்தது. பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அவசர நிலைக்குப் பிறகு, 1977-இல் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளே அந்த ஆட்சி நீடித்த நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.

1990-இல் நடந்த தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் இடங்களைப் பிடித்த பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. சுந்தர்லால் பட்வா முதல்வரானார். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சி கலைக்கப்பட்டபோது இந்த ஆட்சியும் கலைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

அதற்குப் பிறகு, 2003-இல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., அதை 2018 வரை தக்கவைத்தது. உமாபாரதி, பாபுலால் கௌர், சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். இந்த பதினைந்து ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சிவராஜ் சிங் சௌகானே முதல்வராக இருந்தார்.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமல்நாத் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், இது வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை

2018 சட்டமன்றத் தேர்தல்

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் இதற்கு முன்பாக 2018-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஆட்சியமைக்க இன்னும் இரு இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு இடத்தைப் பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சி, 2 இடங்களைப் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் ஆதரவு தமக்கு இருப்பதாக காங்கிரஸ் கூறியது. மேலும் நான்கு சுயேச்சைகளும் காங்கிரசை ஆதரித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தது. ஆனால், இது வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சிவராஜ் சிங் சௌகான் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்

ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க

2020-ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோதியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார்.

இதற்குப் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் பா.ஜ.கவில் இணைந்தார். இந்த காலகட்டத்தில் மொத்தமாக 22 எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். பிறகு காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.கவில் இணைந்தனர். கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மார்ச் 23-ஆம் தேதி சிவராஜ் சிங் சௌகான் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இதற்குப் பிறகு மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

மொத்தமாக 25 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரசால் 7 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. 18 இடங்களை வென்ற பா.ஜ.க. தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது

2023 தேர்தலில் அரசியல் கூட்டணிகள்:

இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் தனித்துப் போட்டியிடுகின்றன.

இரு கட்சிகளுமே 230 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி) துலேஷ்வர் சிங் மார்க்கம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரக் கட்சியும் (ஜி.ஜி.பி) கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஜிஜிபி கட்சியானது, கோண்ட் இன மக்களுக்கென தனியாக கோண்ட்வானா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டுமெனப் போராடிவரும் கட்சி. இந்தக் கூட்டணியில் ஜிஜிபி 52 இடங்களிலும் பிஎஸ்பி 178 இடங்களிலும் போட்டியிடுகிறது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. சந்திரசேகர ஆஸாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிடுகின்றன.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி வாக்களித்திருக்கிறது

2023 சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்னைகள் என்ன?

மத்தியப் பிரதேசத்தில் 2003-இல் இருந்து 2023 வரையிலான 20 ஆண்டுகளில் நடுவில் இரண்டு ஆண்டுகளைத் தவிர, பா.ஜ.க.வே ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், ஆளும் கட்சிக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் உணர்வு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும்.

இரண்டாவதாக, ஊழலை ஒரு முக்கியப் பிரச்சனையாக காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியிலிருந்த கட்சி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், இங்கும் தீவிரமாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது காங்கிரஸ். கிடைக்கும் இடங்களில் எல்லாம் வியாபம் ஊழல் குறித்து அந்தக் கட்சி பேசுகிறது.

கர்நாடக மாநிலத்தில் 40% கமிஷன் என போஸ்டர் அடித்து ஒட்டியதைப் போலவே, மத்தியப் பிரதேசத்தின் சில இடங்களில் 50% கமிஷன் என போஸ்டர் அடித்து ஒட்டியது காங்கிரஸ். 18 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் 250 ஊழல்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ்.

மாநிலத்தில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களை பேசுபொருளாக்க காங்கிரஸ் முயல்கிறது. குறிப்பாக ஸீதி மாவட்டத்தில் பழங்குடியினர் ஒருவர் அவமதிக்கப்பட்டது நாடு முழுவதும் பேசப்பட்ட நிலையில், இந்த விவகாரம் ஆளும் பா.ஜ.க.வுக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் விவகாரமாக மாறியது.

வேலையின்மை பிரச்சனை இந்த மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி வாக்களித்திருக்கிறது.

மற்ற பிரச்சனைகள் எல்லாம் தனக்குப் பாதகமாக இருக்கும் நிலையில், இந்துத்துவத்தை முக்கிய பிரச்சனையாக மாற்ற பா.ஜ.க முயல்கிறது. அதனால், சனாதன சர்ச்சையை ஒரு முக்கியப் பிரச்சனையாக முன்வைக்கிறது பா.ஜ.க. தவிர உஜ்ஜய்னில் கட்டப்பட்ட மஹாகால் லோக் வளாகம், ஓம்காரேஸ்வரில் கட்டப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை ஆகியவற்றையும் தங்கள் சாதனையாகச் சொல்கிறது பா.ஜ.க.

இதற்குப் போட்டியாக காங்கிரசும் ஒரு மென் இந்துத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. கமல்நாத் தன்னை ஒரு அனுமன் பக்தராகக் காட்டிக்கொள்கிறார். வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனாவை காங்கிரசுடன் இணைக்கவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பா.ஜ.க.விற்குள் புதிதாக இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கும் பழைய விசுவாசிகளுக்கும் இடையிலான மோதல் அக்கட்சிக்கு ஒரு தொல்லையாகவே இருக்கிறது. குவாலியர் - சம்பல் பகுதியில் சிந்தியாவின் ஆதரவாளர்களை காங்கிரசிற்கு இழுக்க திக்விஜய் சிங்கும் அவரது மகனும் முயன்றுவருகின்றனர். முன்னாள் எம்.பி.க்கள் போத் சிங் பகத், எம்.எல்.ஏ.வான வீரேந்திர ரகுவன்ஷி, சிந்தியா விசுவாசியான சமந்தர் படேல் ஆகியோர் கடந்த சில மாதங்களில் காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளனர்.

அதேபோல ஓபிசி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது.

பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகள்

  • கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 2,700 ரூபாயாக உயர்த்தப்படும். நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழைகளுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
  • கிஸான் சம்மான் நிதி, கிஸான் கல்யாண் யோஜனா திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.
  • முக்ய மந்த்ரி ஜன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.
  • லாட்லி பஹன்னா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும், நிதி உதவி செய்யப்படும், சிலிண்டர் 450 ரூபாய்க்குத் தரப்படும்.
  • கிராமங்களைச் சேர்ந்த 15 லட்சம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி தரப்படும்.
  • 12-ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி தரப்படும்.
  • ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும்.

காங்கிரஸின் வாக்குறுதிகள்

  • விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • மத்தியப் பிரதேசத்திற்கென ஒரு ஐ.பி.எல் அணி உருவாக்கப்படும்.
  • நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாகவும் கோதுமைக்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு 2,600 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • இந்திரா கிருஹ ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகத் தரப்படும். அடுத்த 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக்குத் தரப்படும்.
  • பெண்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
  • எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
  • பள்ளிக் கல்வி முழுமையாக இலவசமாக்கப்படும். மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
  • பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அளிக்கப்படும்.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 27% இட ஒதுக்கீடு மாநில அரசுப் பணிகளில் வழங்கப்படும்.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், பா.ஜ.க., காங்கிரஸ், நரேந்திர மோதி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரசைப் பொறுத்தவரை கமல்நாத் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது

முதல்வர் வேட்பாளர்கள் யார்?

இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கே இருக்கிறது.

காங்கிரசைப் பொறுத்தவரை கமல்நாத் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது.

ஆனால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் சிவராஜ் சிங் சௌகானை மீண்டும் முதல்வராக்க பா.ஜ.க. விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இதுவரை எல்லா தேர்தல்களிலுமே முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தே கட்சி தேர்தலைச் சந்தித்திருக்கிறது. 2003-இல் உமா பாரதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டா். அதற்கடுத்த தேர்தல்கள் அனைத்திலும் சிவராஜ் சிங் சௌகான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த முறை முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சே இல்லை.

தவிர, பா.ஜ.க.வின் முதல் மூன்று வேட்பாளர் பட்டியலில் சிவராஜ் சிங் சௌகானின் பெயரே இல்லை. இதனால், அவருக்கு தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு மறுக்கப்பட்டதோ என்ற அளவுக்கு யூகங்கள் நிலவின. பிறகு நான்காவது பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது.

பா.ஜ.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியானபோது நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ஃபக்கன் சிங் குலாஸ்தே உட்பட மூன்று மத்திய அமைச்சர்கள் உட்பட 7 எம்.பிக்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

மத்திய அமைச்சர்களைக் களமிறக்குவதன் மூலம், அவர்கள் வெல்வதோடு கூடுதலாக அருகில் உள்ள 10 - 15 தொகுதிகளில் தாக்கம் செலுத்துவார்கள் என கட்சி நம்புகிறது. இப்போதைக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்வர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என பா.ஜ.க. நம்புகிறது.

காங்கிரசைப் பொறுத்தவரை, தேர்தலில் வெற்றிபெற்றால் கமல்நாத்தான் முதலமைச்சராக இருப்பார் என்பதைப் பல முறை தெளிவுபடுத்திவிட்டது. திக்விஜய் சிங், சுரேஷ் பச்சௌரி, அருண் யாதவ், காந்திலால் பூரியா போன்ற மூத்த தலைவர்களும் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)