மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?

மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம், X/2D Entertainment

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது.

அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி.

இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மெய்யழகன் படத்தின் கதை என்ன?

'96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது.

இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார்.

அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள்.

அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின?

இதுதான் இப்படத்தின் கதை.

மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம், X/2D Entertainment

‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’

இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன.

தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது.

“படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.

மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம், X/2D Entertainment

கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி?

இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது.

“படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம்.

அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது.

மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது.

இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது.

படத்தின் மிகப்பெரிய குறை

இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன.

அது, இப்படத்தின் நீளம்.

சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள்.

இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது.

அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம், Youtube/Think Music India

சொல்ல வந்ததை விட்டுவிட்டு…

படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள்.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது.

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது.

இன்னொரு அன்பே சிவம்?

இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது.

ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)