You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"போறாளே பொன்னுத்தாயி": ஸ்வர்ணலதாவின் மறக்க முடியாத 15 பாடல்கள்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நாளை, ஏப்ரல் 29ஆம் தேதி பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள். எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் ஸ்வர்ணலதா.
அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது.
1. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (1987)
தமிழ் சினிமாவில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடல் இது. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதி எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'நீதிக்கு தண்டனை' படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த ஸ்வர்ணலதா, எம்.எஸ். விஸ்வநாதனைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டபோது 'உயர்ந்த மனிதன்' படத்தில் பி. சுசீலா பாடிய 'பால் போலவே' பாடலைப் பாடிக் காண்பித்தார். இதனைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன், இந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார்.
கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது. இதற்கு முன்பும் இந்தப் பாடல் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தாலும், ஸ்வர்ணலதாவின் குரலில் பாடப்பட்டபோது அதற்கு ஒரு தனித்துவம் கிடைத்தது.
ஸ்வர்ணலதாவுக்கு மிகச் சரியான அறிமுகமாகவும் அமைந்தது. இந்தப் பாடலைப் பாடியபோது அவருக்கு வயது வெறும் 14 மட்டுமே.
2. மாலையில் யாரோ (1990)
விஜயகாந்த் - பானு ப்ரியா நடித்து இளையராஜா இசையில் வெளியான 'சத்ரியன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' பாடலின் தொனியில் இந்தப் பாடலும் அமைந்திருக்கும்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறாள் நாயகி. நாயகன் மறுத்தாலும், குழந்தைகள் மூலம் நாயகியின் விருப்பம் நிறைவேறுகிறது. இந்த ஆனந்தத்தில் நாயகி தனியாகப் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல், 90களில் மறக்க முடியாத திரையிசைப் பாடலாக அமைந்தது.
இளையராஜாவின் இசையுடன் 'நெஞ்சமே பாட்டெழுது; அதில் நாயகன் பேரெழுது' என ஸ்வர்ணலதாவின் குரல் உச்சத்தைத் தொடும்போது, கேட்பவர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்.
ஸ்வர்ணலதா என்றாலே நினைவுக்கு வரும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.
3. போவோமா ஊர்கோலம் (1991)
பிரபு - குஷ்பு நடித்த 'சின்னத்தம்பி' படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
மிகக் கண்டிப்பான சகோதரர்கள். அவர்களது கட்டுக்காவலை மீறி, சிறிது நேரம் சுதந்திரத்தை அனுபவிக்கும் அவர்களது சகோதரி பாடுவதாக அமைந்த இந்தப் பாடலின் துவக்க இசையே ஒரு விடுதலை உணர்வை ஏற்படுத்தும்.
துவக்க இசை முடிந்ததும் ஒலிக்க ஆரம்பிக்கும் ஸ்வர்ணலதாவின் குரல், கேட்பவர்களின் ஆன்மாவை எல்லா அழுத்தத்திலிருந்தும் விடுவிப்பதைப்போல இருக்கும்.
இந்தப் படத்தில் கீரவாணி ராகத்தில் இரண்டு பாடல்களை அமைத்திருந்தார் இளையராஜா. ஒன்று 'போவோமா ஊர்கோலம்' என்ற இந்தப் பாடல். இன்னொன்று, 'நீ எங்கே, என் அன்பே' என்ற பாடல்.
இந்தப் பாடலையும் ஸ்வர்ணலதாதான் பாடியிருந்தார் என்றாலும் 'போவோமா ஊர்கோலம்' பாடலே மேம்பட்ட அனுபவத்தைக் கொடுத்தது.
4. ராக்கம்மா கையத்தட்டு (1991)
மெலடி பாடல்களால் கவனிக்கப்பட்டுவந்த ஸ்வர்ணலதாவுக்கு இந்தப் பாடல் ஒரு துள்ளலான திருப்பு முனை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினிகாந்த் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தளபதி' படத்தில் இடம்பெற்றிருந்த 'ராக்கம்மா கையைத்தட்டு' பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து இந்தப் பாடலை ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.
ஒரு வகையில் பார்த்தால், இந்தப் பாடலில் ஆண் குரலுக்கே கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும், இந்தப் பாடலிலும் ஸ்வர்ணலதா தனித்துத் தெரிந்தார்.
2002 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய பிரபலமான பாடல்களுக்கான கருத்துக் கணிப்பில் இப்பாடல் நான்காவது இடத்தைப் பிடித்தது.
5. குயில் பாட்டு (1991)
ராஜ்கிரணும் மீனாவும் நடித்து வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படத்தில், எல்லாப் பாடல்களும் மெகா ஹிட்தான்.
முரடனாக இருக்கும் தன் கணவனைப் பார்த்து பயந்துபோய் வெறுத்து ஒதுக்கும் நாயகி, கடைசியில் அவனது அன்பைப் புரிந்துகொள்கிறாள். அந்த நேரத்தில் அவள் கர்ப்பமாகவும் இருக்க, குதூகலம், எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கலந்து நாயகி பாடும் பாடல் இது.
பாடலை பொன்னடியான் எழுதியிருந்தார். நாயகியின் அந்த நேரத்து உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதாக ஸ்வர்ணலதாவின் குரல் இருந்தது. இந்த படம் ஹிட்டாக இருந்தாலும், இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட்.
6. ஆட்டமா, தேரோட்டமா (1991)
1980களின் பிற்பகுதியில் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் பிரபலமாக இருந்த தருணத்தில், அந்தப் பாத்திரத்தை மையமாக வைத்து கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை உருவாக்கினார் ஆர்.கே. செல்வமணி.
படத்தின் நாயகன் விஜயகாந்துக்கு இது 100வது படம். இந்தப் படத்தில் இரண்டே பாடல்கள்தான். அதில் ஒரு பாடல்தான் இது. காட்டுக்குள் வில்லன் மற்றும் அவனது சகாக்களுக்கு நடுவே ஒரு இளம்பெண், உற்சாகமேற்றப் பாடுவதைப் போன்ற பாடல் இது.
'ஷோலே' படத்தில் வரும் 'மெஹபூபா' பாடலைப் போன்ற தொனியில் தனக்கு ஒரு பாடல் வேண்டும் என ஆர்.கே. செல்வமணி கேட்டு, அந்த பாணியில் இளையராஜா இசையமைத்துக் கொடுத்த பாடல் இது.
துள்ளல் இசையுடன் உருவான இந்தப் பாடலை, ஸ்வர்ணலதாவின் குரல் வேறொரு தளத்திற்குக் கொண்டுசென்றது.
7. காதல் கடிதம் (1991)
1991 ஆம் ஆண்டு ஸ்வர்ணலதாவுக்கு ஒரு சிறப்பான வருடம். இந்த வருடத்தில் ஏகப்பட்ட பாடல்கள் அவர் பெயர் சொல்லும் விதத்தில் அமைந்தன.
அதில் ஒன்றுதான் 'சேரன் பாண்டியன்' படத்தில் இடம்பெற்ற 'காதல் கடிதம் வரைந்தேன்' பாடல். இந்தப் படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்திருந்தார். பாடலை எஸ்.ஏ. ராஜ்குமாருடன் சேர்ந்து ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.
படத்தில் பெரும்பாலான பாடல்கள் நன்றாகவே இருந்தன என்றாலும் இந்தப் பாடல், பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இதே படத்தில் இடம்பெற்றிருந்த 'சம்பா நாத்து' பாடலும் ஸ்வர்ணலதாவுக்கு குறிப்பிடத்தக்க பாடல்தான்.
8. என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட (1992)
கார்த்திக்கும் மோனிஷாவும் நடித்த 'உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
துவங்கும்போது உச்சத்தில் துவங்கி மென்மையாக நகரும் பாடல் இது. காலத்தில் அழியாத பாடலாக, இது நிலைத்துவிட்டதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, ஸ்வர்ணலதாவின் குரல். இன்னொன்று இந்தப் படத்தில் நாயகியாக நடித்த மோனிஷா.
1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியான நிலையில், அதே ஆண்டு டிசம்பரில் ஒரு கார் விபத்தில் காலமானார் மோனிஷா.
இந்தப் படத்திலும்கூட, அவர் இறந்துவிடுவதைப்போலத்தான் கதை இருக்கும். எல்லாம் சேர்ந்து, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிவிட்டது.
9. சொல்லிவிடு வெள்ளிநிலவே (1994)
மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படம், ஒரு அரசியல் த்ரில்லர். இந்தப் படத்திற்காக இளையராஜா இசையில் மனோவுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடியிருந்த பாடல்தான் 'சொல்லிவிடு வெள்ளிநிலவே' பாடல்.
ஆனால், இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. படத்தின் துவக்கத்தில் நாயகிக்கும் நாயகனுக்கும் திருமணம் நிச்சயமாகும் தருணத்தில், சில பிரச்சனைகளால் அந்தத் திருமணம் நின்றுவிடும்.
இதற்குப் பிறகு படம் ஃப்ளாஷ்பேக்கிற்குள் சென்றுவிடும். அதற்குப் பிறகு பழிவாங்கும் படலம் துவங்கிவிடுவதால் இந்தப் பாடலுக்கு இடமில்லாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும் ஒரு மறக்க முடியாத பாடல் இது.
10. போறாளே பொன்னுத்தாயி (1994)
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'கருத்தம்மா' படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற பாடல் இது.
இந்தப் படத்தில் 'போறாளே பொன்னுத்தாயி' இருவிதங்களில் இடம்பெற்றிருக்கும். டுயட் பாடலாக உன்னிமேனனும் சுஜாதாவும் பாடியிருப்பார்கள்.
சோகப் பாடலாக ஸ்வர்ணலதா தனித்தும் பாடியிருப்பார். எதிர்பார்த்ததைப் போலவே இந்த சோகப் பாடல், பெரிய ஹிட்.
11. அக்கடானு நாங்க எடை போட்டா (1996)
'ராக்கம்மா கைய்யத் தட்டு', 'ஆட்டமா தேரோட்டமா' பாடல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஸ்வர்ணலதா பாடிய பாடல்கள் பொதுவாக மெல்லிசையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் அந்த ட்ரெண்டை மீண்டும் உடைத்தார் ஸ்வர்ணலதா.
இசை, பாடல் படமாக்கப்பட்டவிதம், ஸ்வர்ணலதாவின் குரல் எல்லாம் சேர்ந்து, பாடலைக் கேட்பவர்களை தன்னிச்சையாக ஆட வைத்தது.
12. ஆத்தோரம் தோப்புக்குள்ள (1996)
பிரபுவும் மதுபாலாவும் நடித்து சீமான் இயக்கத்தில் வெளிவந்த 'பாஞ்சாலங்குறிச்சி' படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாடல்கள்.
அதில் ஹரிஹரனும் அனுராதா ஸ்ரீராமும் பாடிய 'உன் உதட்டோர சிரிப்ப' பாடல்தான் ரொம்பவும் பிரபலம் என்றாலும், ஸ்வர்ணலதா பாடிய 'ஆத்தோரம் தோப்புக்குள்ள' என்ற பாடலும் அட்டகாசமாக இருக்கும்.
சுமார் 6 நிமிடங்கள் நீளக்கூடிய இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் குதூகலமாக அரம்பித்து, 'அத்தனையும் பொய்யாச்சே ராசா' என சோகமாக முடியும்.
தனித்துப் பாடிய இந்தப் பாடலில் மனதை மயக்கும் ஜாலங்களைச் செய்திருப்பார் ஸ்வர்ணலதா.
13. அஞ்சாதே ஜீவா (1999)
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'ஜோடி' படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அதில் 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே', 'வெள்ளி மலரே', 'காதல் கடிதம் தீட்டவே' போன்ற பாடல்கள் பெரும் ஹிட்.
என்றாலும், இந்தப் படத்தில் இன்னொரு தனித்துவமான பாடல் இருந்தது. அதுதான் இந்த 'அஞ்சாதே ஜீவா' பாடல்.
பிரசாந்தும் சிம்ரனும் நடித்திருக்கும் இந்தப் பாடலில், பிரசாந்தின் குரலாக சீர்காழி சிவசிதம்பரத்தின் குரல் ஒலிக்கும். இசை, ஆண் குரல் தேர்வு போன்ற பல அம்சங்களில் வித்தியாசப்பட்ட இந்தப் பாடலில், எப்போதும் போல மனதைக் கவர்ந்தது ஸ்வர்ணலதாவின் குரல்.
14. எவனோ ஒருவன் வாசிக்கிறான் (2000)
அலைபாயுதே படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வைரமுத்து எழுதிய பாடல். நாயகன், நாயகியைத் தேடிவரும்போது பின்னணியில் நாயகியின் தவிப்பைக் காட்டுவதைப் போல ஒலிக்கும் இந்தப் பாடல், பல விதங்களில் முத்திரை பதித்த பாடல்.
பாடலின் ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள், குரல் என எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான ஓவியத்தைப் போல இருக்கும்.
15. சொல்லாயோ சோலைக்கிளி (2002)
சரண் இயக்கி, மனோஜ், ரிச்சா பாலோட் ஆகியோர் நடித்து வெளிவந்த அல்லி அர்ஜுனா, ஒரு பெரிய தோல்விப் படம்.
ஆனால், இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'சொல்லாயோ சோலைக்கிளி' பெரிய ஹிட். அனில் கபூர் நடித்து வெளியான 'Pukar' என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றிருந்த "சுன்தா ஹை மேரா குதா" பாடலின் மெட்டையே இந்தப் பாடலுக்கும் பயன்படுத்தியிருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
அந்த இந்தி பாடலை உதித் நாராயணனுடன் இணைந்து ஸ்வர்ணலதாதான் பாடியிருந்தார். இதில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியிருந்தார். இரண்டுமே அட்டகாசமான பாடல்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.