You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கண்ணகி - முருகேசன் தம்பதியினர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி உள்ளிட்ட எட்டு பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, பி.கே. மிஸ்ரா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது. மேலும் முருகேசனின் பெற்றோருக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவம், வழக்கு மற்றும் விசாரணை பற்றி கீழே முழுமையாகக் காண்போம்
ஜூலை 8, 2003.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு. எப்போதுமே ஆள் அரவம் இல்லாத அந்தக் காட்டிற்குள் அன்று ஊரே கூடியிருந்தது. குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசனும், அவரது சித்தப்பாவும் கை கால்கள் கட்டப்பட்டு கிழே தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தில், கண்ணகி கட்டப்பட்டிருந்தார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.
எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றப்பட்டது. வாயைத் திறக்க மறுத்து இறுக்கி மூடியிருந்த இருவரின் காது மற்றும் மூக்கில் நஞ்சை ஊற்ற, இருவரும் அலறித் துடித்திருக்கிறார்கள்.
ஊரே பார்க்க, இருவரும் துடிதுடிக்க இறந்த பிறகு, இருவரின் உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் எடுத்துச் சென்று தனித்தனியாக எரித்தனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த கண்ணகியும் முருகேசனும், மே 5, 2003 அன்று காதல் திருணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இப்படி ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள்.
கொலை நடந்து ஒராண்டுக்கு பிறகு வெளியே எப்படித் தெரிந்தது? இந்த வழக்கை எப்படி சிபிஐ விசாரித்தது? வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?
இங்கு விரிவாகப் பார்ப்போம்...
என்ன நடந்தது?
ஜூலை 7, 2003.
ஊரில் எப்போதும் போல வயல் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை மறித்த கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியன், “உம்மவன் முருகேசன் எங்கே?” எனக் கேட்டுள்ளார்.
ஒன்றும் புரியாத சாமிக்கண்ணு, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு முறையான பதில் எதுவும் சொல்லாமல், “உன் மகன் எங்க இருந்தாலும், அவனை உடனடியாக கூட்டிக்கிட்டு வா,” எனக் கூறியுள்ளார் மருது பாண்டியன்.
மருதுபாண்டியனின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வந்த ஆட்கள் செய்த களேபரத்தில், குப்பநத்தம் புதுக்காலனியே பதற்றமானது. இதற்கிடையில், முருகேசனின் தம்பி வேல்முருகன் அவர்களின் கண்ணில் பட, “முருகேசன் எங்கே?” எனக் கேட்டு, அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற மருதுபாண்டியனும் அவரது ஆட்களும், சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
சம்பவம் அறிந்து சமாதானத்திற்கு முயன்ற முருகேசனின் சித்தப்பாவிற்கும் கெடு விதிக்கப்பட்டு, முருகேசனை அழைத்து வருவதே ஒரே வழி, இல்லையேல், வேல்முருகனை விடமாட்டோம் என மருதுபாண்டியன் கூறியுள்ளார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தன் மகன் எங்கிருப்பான் என அறிந்துகொண்ட முருகேசனின் சித்தப்பா, முருகேசனை விருதாச்சலம் வண்ணான்குடிகாட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில் இருந்து அழைத்து வந்தார்.
“வந்தவனை அவர்கள் சற்றும் இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தினார்கள். அவன் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் கண்ணகி எங்கிருக்கிறாள் என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில், அவனைக் கயிற்றில் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தபோதும், அவன் தலை கீழே அடித்தபோதுதான், அவன் கண்ணகியை எங்கே வைத்திருந்தான் என்பதையே சொன்னான்,” எனக் கூறியிருந்தார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.
கண்ணகியையும் அழைத்து வந்த அவரது குடும்பத்தினர், இருவரையும் துன்புறுத்தி, காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்தனர்.
எப்படித் தெரிந்தது?
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை பொறியியல் படித்து வந்தார். அதே பல்கலையில் துரைசாமியின் மகள் கண்ணகி வணிகவியல் துறை படித்து வந்தார்.
இருவரும் தங்களது கல்லூரி நாட்களில் இருந்து காதலித்து வந்த நிலையில், மே 5, 2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் ஊரைவிட்டு வெளியே சென்று வாழ முடிவெடுத்து, ஜூலை 6ஆம் தேதி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இரண்டு மணிநேரத்திலேயே இருவரும் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
“முருகேசனை அழைத்து வந்ததுதான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அன்று நான் அவனை அழைத்து வராவிட்டால், இந்நேரம் எங்காவது சென்று வாழ்ந்திருப்பான்,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.
இந்தக் கொலைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆணவப் படுகொலை என்னும் பதத்தை தமிழ்நாடு பாவிக்கத் தொடங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், தனது ‘சாதியின் பெயரால்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
“இதற்கு முன்பே இத்தகைய நிகழ்வுகள் நடத்திருக்கின்றன என்றாலும், சாதிய மோதல், சாதியக் கொலை என்றெல்லாம் எவை அழைக்கப்பட்டு வந்தன. சாதியம் எப்படி இயல்பானதாக, எங்கும் நிறைந்ததாக இருக்கிறதோ, அதேபோல சாதியக் கொலைகளும் இயல்பானவையாகவும் அவ்வப்போது நிகழ்பவையாகவும் கருதப்பட்டு வந்தன,” என எழுதியுள்ளார் இளங்கோவன்.
கண்ணகியும், முருகேசனும் கொலை செய்யப்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டதாக இந்த வழக்கை ஓராண்டுக்குப் பிறகு கையில் எடுத்த தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுகுமாரன் தெரிவித்தார்.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி, கண்ணகியும் முருகேசனும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், கண்ணகியை அவரது குடும்பத்தினரும், முருகேசனை அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கண்ணகியின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் என நான்கு பேர், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி மற்றும் இவர்களது உறவினர்கள் இரணடு பேர் என மொத்தம் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எட்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுமார் ஓராண்டுக்கு பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் சமூக ஆர்வலர் சுகுமாரன் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும் துரைசாமி உள்ளிட்ட கண்ணகியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. துரைசாமியின் பிணையும் ரத்துசெய்யப்பட்டது. அதன் விளைவாக, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.
போலீஸ் மீதும் வழக்குப் பதிவு செய்த சிபிஐ
ஏப்ரல், 2004இல் வழக்கைக் கையில் எடுத்த சிபிஐ, வழக்கு தொடர்பாக அனைவரையும் விசாரணை செய்தது. இதில், சம்பவ இடத்தில் இருந்த முக்கிய ஆதாரங்களையும் சிபிஐ சேகரித்தது. கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரையும் சிபிஐ கைப்பற்றியது.
மேலும், இந்தக் கொலையை நேரில் பார்த்த முருகேசனின் சகோதரி தமிழரசி, அப்பா சாமிக்கண்ணு, முருகேசனின் தம்பி வேல்முருகன், பழனிவேலு ஆகியோர் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
விருத்தாசலத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு பிறகு செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கும் பிறகு கடலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கும் வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்ட 81 பேரில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
சிபிஐ.யின் விசாரணையில், விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்த்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த முருகேசனின் குடும்பத்தினர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். கடலூர் சிறப்பு நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 24இல் தீர்ப்பளித்தது.
பெண்ணின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி, குணசேகரன், கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னத்துரை, ஆய்வாளர் செல்லமுத்து (ஓய்வுபெற்ற டிஎஸ்பி), உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் (ஆய்வாளர்) உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், அய்யாச்சாமி, குணசேகரன் ஆகிய இருவர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அலட்சியம் காட்டிய காவல்துறையினருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காகப் பதியப்பட்டதாகவும், சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்தக் கொலை சம்பவத்திற்குத் தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது
மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு ஒரு முன்மாதிரி வழக்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்.
“கண்ணகி முருகேசன் வழக்கில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும், அவற்றை முறையாக வழக்கில் சேர்த்து, சாட்சிகளைக் காப்பாற்றி, நீதிமன்றத்தில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதனால், இந்த வழக்கு அனைத்து ஆணவக்கொலை வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரி வழக்கு,” என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.