You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்த அடித்தளத்தில் என்ன இருக்கிறது? முஸ்லிம்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், அனந்த் ஜனனே மற்றும் உத்பல் பதக்
- பதவி, வாரணாசியில் இருந்து
வாரணாசியில், ஞானவாபி மசூதியின் வியாஸ் அடித்தள அறையில் இந்துக்கள் பூஜைகள் செய்யலாம் என வாரணாசி நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31) உத்தரவு பிறப்பித்தது.
அதற்கு ஒருவார காலம் அவகாசம் இருந்தும், அடுத்த நாளே (வியாழன், பிப்ரவரி ) இந்து தரப்பினர் அங்கு பூஜைளை நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவு வெளிவந்தவுடன், இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஞானவாபி வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றார்.
ஞானவாபி மசூதி வளாகத்தில் அமைந்துள்ள இந்த வியாஸ் அடித்தளத்தில் பூஜை நடத்த அனுமதி கோரி இந்து தரப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
'1993 வரை பூஜைகள் நடந்தன'
"மசூதி வளாகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அடித்தளத்தில் உள்ள சிலைக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் டிசம்பர் 1993க்குப் பிறகு மசூதிக்குள் நுழைய அர்ச்சகர் வியாஸ் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அடித்தளத்தில் நடைபெறவிருந்த ராகா, போகா போன்ற வேத நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன,” என இந்து தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
உத்தர பிரதேச அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தக் காரணம் கூறாமல் இந்த பூஜைகளுக்கு தடை விதித்துள்ளதாக இந்து தரப்பு கூறுகிறது.
மேலும் "இந்த அடித்தளம் பிரிட்டிஷ் ஆட்சியின் போதுகூட அர்ச்சகர் வியாஸ் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் டிசம்பர் 1993 வரை அங்கு பூஜைகள் செய்தனர்," என்றும் இந்து தரப்பு கூறியது.
அடித்தள அறையின் கதவு அகற்றப்பட்டதாகவும், ஆனால் பூஜை பொருட்கள், பழங்கால சிற்பங்கள் மற்றும் வேத முக்கியத்துவம் வாய்ந்த பிற பொருட்கள் இன்னும் அங்கு இருப்பதாகவும் இந்து தரப்பு தெரிவித்துள்ளது. "அடித்தளத்தில் உள்ள சிலைகளை வழிபட வேண்டும். இது எங்கள் உரிமை,'' என இந்து தரப்பு வலியுறுத்தியது.
இந்த நீதிமன்ற வழக்கில், பாதாள அறையில் பூஜைகள் நடத்துவதற்கு ஒரு பெறுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அடித்தள பெறுநராக மாவட்ட மாஜிஸ்திரேட்
பெறுநரை நியமிக்க வேண்டும் என்ற இந்து கட்சியின் கோரிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ணா விஸ்வேஷ் ஏற்றுக் கொண்டார். வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் அடித்தள பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"கேள்விக்குரிய கட்டமைப்பு கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் அவுட்லைனில் எந்த மாற்றமும் செய்ய முடியாது,'' என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
பூஜைகள் எவ்வாறு நடத்தப்பட்டன?
மாவட்ட நிர்வாகம் சார்பில், அங்கிருந்த இரும்புத் தடுப்பு வேலி வெட்டப்பட்டு ஒரு இரும்பு கேட் அமைக்கப்பட்டது. அடித்தளம் இருள் சூழ்ந்திருந்ததால், அங்கு மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அடித்தளம் ஈரப்பதம் மிகுந்திருந்தது.
ஒரு வழிபாட்டுத் தலம் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தால், அங்கு வழிபடுவதற்கான விதிகள் என்ன என்று நிர்வாகம் சில சமய அறிஞர்களைக் கலந்தாலோசித்தது.
காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா பூஜையை துவக்கி வைத்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதாள அறைக்குள் நுழைந்து பூஜை செய்தபோது, சோம்நாத் வியாஸின் குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கின் மனுதாரர்கள் யாரும் அங்கு இல்லை என்று வாரணாசி நிர்வாகம் கூறுகிறது.
இந்தப் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்ட 8 சிலைகள் வழிபாடு செய்யப்பட்டன. அவை அரசு கருவூலத்தில் இருந்தன.
அவை: இரண்டு சிவலிங்கங்களின் அடிப்பாகங்கள், ஒரு விஷ்ணு சிலை, இரண்டு அனுமன் சிலைகள், ஒரு விநாயகர் சிலை, ‘ராம்’ என்று எழுதப்பட்ட ஒரு சிறிய கல், கங்கையின் வாகனமான முதலையின் சிலை.
இந்தச் சிலைகள் எவையும் முழுதாக இல்லை என்றும், அனைத்தும் உடைந்துள்ளதாகவும் நிர்வாகம் கூறுகிறது. இந்தப் பாதாள அறைக்குள் ஒரு அர்ச்சகர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் அவ்விடத்தை சுத்தம் செய்வதற்கும் மின் விளக்குகள் நிறுவுவதற்கும் மக்கள் அங்கு சென்றனர். ஆனால் சிலை நிறுவப்பட்டவுடன், இரவில் பூஜை செய்யப்பட்டது. ஒரு பூசாரி மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்தார்.
உள்ளே செல்லும் கதவு, அதிகாலை பூஜை நேரம் 3:30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10:30 மணிக்கு பூஜை முடிந்ததும் மூடப்படும். தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வாயில் வழியாக மட்டுமே உள்ளே பார்க்க முடியும், ஆனால் உள்ளே நுழைய முடியாது.
ஞானவாபியில் வியாஸ் அடித்தளம் எங்கு உள்ளது?
இந்து தரப்பு வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அந்த வியாஸ் அடித்தளம் எங்கு உள்ளது என்பதை வரைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 1936ஆம் ஆண்டு ஞானவாபி தொடர்பாக தீன் முகமது வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வரைபடத்தில் தெற்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் "Basement owned by Vyas" என்று எழுதப்பட்டுள்ளது.
சோம்நாத் வியாஸ் என்பவர் 1991ஆம் ஆண்டு ஞானவாபியின் உரிமையைக் கோரி தாக்கல் செய்த வரைபடத்தில், "வாதி எண். 2 ஆக பாதாள அறையின் உரிமை" என்ற பெயரில் தெற்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோம்நாத் வியாஸ் தாக்கல் செய்த மனுவில் உள்ள வரைபடத்தில், இந்தப் பாதாள அறைக்கு நேராக நந்தியும், வலது புறத்தில் கௌரி சங்கரும் கட்டப்பட்டுள்ளனர். இடதுபுறம் பரதாரி உள்ளது, அதன் வளாகத்தில் வியாஸ் ஜியின் சிம்மாசனம், ஒரு கிணறு, பீப்பல் மரம் மற்றும் விநாயகர் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. மேலும் மஹாகாளேஷ்வர் பரதாரிக்கு அருகில் காட்சியளிக்கிறார்.
ஞானவாபி வளாகத்தைச் சுற்றியுள்ள நிலத்தில் இந்து தரப்புக்கு உரிமை இருப்பதாக வரைபடம் காட்டுகிறது. தீன் முகமது வழக்கில் இணைக்கப்பட்ட வரைபடத்தில், வியாஸ் அடித்தளத்தின் முன் நந்தியும் (நந்தேஷ்வர்) அவருக்கு அடுத்ததாக கௌரி சங்கரும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் இடதுபுறத்தில் பரதாரி மண்டபம் மற்றும் ஞானவாபி வளாகக் கிணறு மற்றும் பீப்பல் மரமும் உள்ளது.
சோம்நாத் வியாஸின் மனுவில் என்ன இருக்கிறது?
கடந்த 1991ஆம் ஆண்டு ஞானவாபி நில உரிமை கோரி சோம்நாத் வியாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சோம்நாத் வியாஸுக்கு 61 வயது. அவர் ஞானவாபி வளாகத்தின் தலைவர் என்று அப்போது கூறி வந்தார்.
மேலும், “காசி விஸ்வநாதனின் நண்பர்” எனக் கூறி, ஞானவாபியின் இடத்திற்காக நீதிமன்றத்தில் சோம்நாத் வழக்கு தொடர்ந்தார். "பிளாட் எண். 9130இல், இடிக்கப்பட்ட ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலின் ஒரு பகுதி இன்னும் அந்த இடத்தில் உள்ளது," என்று அவர் கூறினார்.
"தெற்கில் உள்ள அடித்தளம், கிழக்கில் உள்ள கோவில் மற்றும் அதன் நிலம் 1991இல் தன் வசம் இருந்தது," என்று அந்த மனுவில் எழுதியிருந்தார் சோம்நாத்.
இந்துக்கள் இங்கு வழிபடுவதாகவும், ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலாகக் கருதி அதைச் சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது. அடித்தளம் தனது கட்டுப்பாட்டில் இருந்ததால், பிளாட் எண். 9130இன் முழுப் பகுதியும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அடித்தள நிலமும் அதற்குக் கீழே உள்ள நிலமும் அவர் வசம் இருப்பதால், அந்த தர்க்கத்தின்படி அதன் மேல் உள்ள கட்டடத்தின் (மசூதி) உரிமையும் அவருக்கும் இந்துக்களுக்கும் சொந்தமானது எனக் கூறினார்.
பண்டிட் சோம்நாத் மார்ச் 7, 200 அன்று இறந்தார். பின்னர், இந்த வழக்கில் ஐந்தாவது தரப்பு வாதியாக வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி நீதிமன்றத்தில் போராடி வருகிறார். சுயம்புலிங்கமாகிய ஆதி விஸ்வேஸ்வரரின் நண்பர்களாக இந்தப் நீதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் தரப்பு வாதம் என்ன?
இந்து தரப்பு வழிபாட்டு உரிமை கோரும் அடித்தளத்தில் வியாஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை பூஜை செய்யவில்லை என்றும், அதனால் 1993 டிசம்பரில் அடித்தள அறையில் பூஜை நிறுத்தப்பட்ட நிகழ்வே நடக்கவில்லை என்றும் முஸ்லிம் தரப்பு கூறுகிறது.
கீழ் தளத்தில் சிலை என ஒன்று இல்லை என்று மசூதி தரப்பு கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வியாசர் குடும்பத்தினர் பாதாள அறையில் வழிபாடு நடத்தினர் என்ற உண்மையையும் மசூதி தரப்பு மறுக்கிறது.
வியாஸ் குடும்பத்தினரோ அல்லது எந்தவொரு பக்தரோ பாதாள அறையில் பூஜை செய்ததில்லை என்றும், அது ஆரம்பம் முதலே மசூதியின் வசம் இருந்ததாகவும் மசூதி தரப்பு கூறுகிறது.
பிளாட் எண் 9130இல், 'ஞானவாபி மசூதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அடித்தளமும் மஸ்ஜித் ஆலம்கிரியின் (ஞானவாபி) ஒரு பகுதியாகும்' என்று மசூதி தரப்பு கூறுகிறது.
மசூதி தரப்பு தனது வாதத்தில், 1937 தீன் முகமது தீர்ப்பைக் குறிப்பிட்டு, அந்தத் தீர்ப்பில் மசூதி, அதன் முற்றம் மற்றும் அதை ஒட்டிய நிலம் ஹனிபா முஸ்லிம் வக்ஃபுக்கு சொந்தமானது என்றும் முஸ்லிம்களுக்கு அங்கு வழிபாடு நடத்த உரிமை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்திய தொல்லியல் துறை என்ன சொல்கிறது?
வியாஸ் ஜியின் அடித்தளம் இந்தியத் தொல்லியல் ஆய்வக (Archaeological Survey of India- ஏஎஸ்ஐ) விசாரணையின் கீழ் வரவில்லை. ஆனால் ஏஎஸ்ஐ ஞானவாபியின் மற்ற அடித்தளங்களை ஆய்வு செய்து அதன் அறிக்கையை அளித்தது.
ஏஎஸ்ஐயின் கூற்றுப்படி, மசூதியில் வழிபாட்டிற்காக, அதன் கிழக்குப் பகுதியில் அடித்தளம் அமைக்கப்பட்டது மற்றும் மசூதியில் ஒரு தளம் மற்றும் கூடுதல் இடம் அமைக்கப்பட்டது. இதனால் அதிகமான மக்கள் அதில் தொழுகை நடத்தலாம்.
கிழக்குப் பகுதியில் அடித்தளம் அமைக்க கோவிலின் தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏ.எஸ்.ஐ. என்2 (N2) எனப் பெயரிடப்பட்ட ஒரு நிலவறையில் மணிகள், விளக்குத் தண்டுகள் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய பயன்படுத்தப்பட்ட தூண் உள்ளது.
மேலும் எஸ்2 (S2) எனப் பெயரிடப்பட்ட அடித்தளத்தில் இருந்து, மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளும் மீட்கப்பட்டன.
இதுவரை நடந்தது என்ன?
2019: டிசம்பர் 2019இல், அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஞானவாபி மசூதியை ஆய்வு செய்யக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
2020: வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் இருந்து அசல் மனுவை விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
2020: அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது, பின்னர் இந்த விஷயத்தில் அதன் முடிவை ஒத்தி வைத்தது.
2021: உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி, வாரணாசி சிவில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் கையிலெடுத்தது. மசூதியை மீண்டும் ஆய்வு செய்ய அனுமதித்தது.
2021: மசூதி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கதவுகள் மீண்டும் தட்டப்பட்டன. உயர் நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது மற்றும் அதைக் கண்டித்தது.
2021: ஆகஸ்டில், சிருங்கார் கௌரியை வழிபட அனுமதி கோரி ஐந்து இந்து பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
2022: ஏப்ரலில், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்து மற்றும் அதை வீடியோ பதிவு செய்ய சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022: மஸ்ஜித் இன்டெஜாமியா இந்த உத்தரவை எதிர்த்து, பல தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
2022: மே மாதம், ஞானவாபி மசூதியின் வீடியோ பதிவு தொடர்பாக மஸ்ஜித் இன்டெஜாமியா உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
2022: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், மே 16 அன்று மசூதி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதியை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழுகை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
2022: மே 17 அன்று, 'சிவலிங்கம்' இருந்த பகுதிக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அதே நேரத்தில் மசூதியில் தொழுகையைத் தொடர அது அனுமதித்தது.
2022: மே 20 அன்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்குத் தகுதியானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்குமாறு உச்ச நீதிமன்றம் வாரணாசி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
2023: ஜூலை 21 அன்று, பனாரஸ் நீதிமன்றம் ஏஎஸ்ஐ ஆய்வுக்கு உத்தரவிட்டது.
2023: ஆகஸ்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆய்வுக்கு அனுமதி வழங்கியது.
2024: ஞானவாபியின் ஏஎஸ்ஐ ஆய்வு அறிக்கையை வழக்கு தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் ஒப்படைக்க வாரணாசி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)