You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை: காதலித்த அக்கா கொலை; காதலர் தலையை வெட்டி மந்தையில் வைத்த தம்பி
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி மாற்று சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை, கணவரைப் பிரிந்த பிறகு காதலித்துள்ளார்.
குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் காதலைவிட மறுத்ததால் அவரது தம்பி பிரவீன்குமார் அக்காவையும் அவரது காதலரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகவும், மேலும் தடுக்க வந்த தாயின் கையைத் துண்டாக வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
கொம்பாடி கிராமத்தில் நடந்தது சாதியக் கொலையா?
மதுரையில் நடந்தது என்ன?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ள கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் கட்டடங்களுக்கு கம்பி கட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை என்பவரது மகள் மகாலட்சுமியும் (25) காதலித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிந்த பிறகு மகாலட்சுமிக்கு அவசர அவசரமாக அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், திருமணம் செய்து வைத்த ஒரு வாரத்திலேயே கணவரைப் பிரிந்த மகாலட்சுமி, 4 ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
மீண்டும் தொடர்ந்த காதலால் வந்த பிரச்னை
இந்நிலையில் பொற்றோர் வீட்டில் வசித்து வந்த மகாலட்சுமி மீண்டும் சதீஷ் குமாருடனான தனது காதலைத் தொடர்ந்து இருக்கிறார். இந்தக் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரது தம்பி பிரவீன் காதலைத் தொடர வேண்டாம் என அக்காவிடம் கூறியதாகவும் ஆனால், அதையும் மீறி இருவரும் பழகி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மகாலட்சுமியின் வீட்டில் சதீஷ் இருப்பதைப் பார்த்த தம்பி பிரவீன் ஆத்திரமடைந்து இருவரையும் மீண்டும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தனது காதல் விவகாரத்தை மகாலட்சுமியின் தம்பி கண்டித்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் அவரது நண்பர்களுடன் இணைந்து பிரவீனை கடந்த வாரம் தாக்கியதாக பிரவீனின் உறவினர்கள் கூறுகின்றனர்.
கொலை நடந்தது எப்படி?
சதீஷ்குமார் தனது நண்பர்களை வைத்துத் தாக்கியதால் ஆத்திரமடைந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதைத் தொடர்ந்தே இந்தக் கொலை நடந்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
"கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு 11:00 மணியளவில் மது போதையில், ஊரின் மந்தை அருகே சதீஷ் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது அரிவாளால் அவரது கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டி, தலையைத் தனியாக எடுத்து ஊர் மந்தையில் நாடகம் நடைபெறும் மேடையின் மீது வைத்துள்ளார்.
பிறகு அங்கிருந்து வீட்டிற்கும் சென்று வீட்டிலிருந்த அவரது அக்கா மகாலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
அதைத் தடுக்க வந்த அவரது தாய் சின்ன பிடாரியின் கையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவரது கை துண்டானது. இதையடுத்து அங்கிருந்து பிரவீன்குமார் தப்பிச் சென்றார்," என்று வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டைக் கொலையில் 4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடக்கோவில் போலீசார் இருவரது உடலையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். மேலும், கை துண்டான சின்ன பிடாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக இறந்த சதிஷ்குமாரின் தம்பி முத்துகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைட்ப தொடங்கினர். இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து, பிரவீன் குமார் மற்றும் அவரது 3 நண்பர்களைக் கைது செய்தனர்.
சாதிய கொலையா?
இது குறித்து திருமங்மலம் டி.எஸ்.பி வசந்தகுமார் கூறும்போது, "திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலையில் பெண்ணின் தம்பி பிரவீன் குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 294(b), 506(ii), 302, 306, ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."
"இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாதி ரீதியான காரணங்களுக்காக இந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், சதீஷ்குமாரை தனிப்பட்ட முறையில் பிடிக்காத காரணத்தாலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்," எனக் கூறினார்
'சாதிய கொலைகளுக்கு சமூக அழுத்தமே காரணம்'
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மனநல ஆலோசகர் ப.இராஜ செளந்தர பாண்டியன், "சமூக அழுத்தமே சாதிய கொலைகளுக்குப் பின்னணியாக அமைகிறது," என்கிறார்.
"நாம் வாழக்கூடிய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் இப்படியாக வாழ வேண்டும், அதைச் தாண்டி சென்றால் அது மதிப்பைக் கொடுக்காது என்பது போல ஒரு கட்டமைப்பு சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உருவாகி வருகிறது. அதை நாம் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதை இளைஞர்கள் பலரும் கடைபிடிக்க முயல்கின்றனர்."
"இதன் வெளிப்பாடாகத்தான் மதுரையில் தனது அக்கா, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிக்கிறார் எனத் தெரிந்ததும் கொடூரமாக இருவரையும் தம்பி கொலை செய்திருப்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தக் கொலையால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. வேறு சாதியைச் சேர்ந்தவரை மணந்தால் நமது குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் என அவர்களே நினைத்துக் கொண்டு இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கல்வி நிலையங்கள், குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில் சாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்ற கருத்தை ஆழமாக எடுத்துச் சென்றால் மட்டுமே இத்தகைய நபர்களின் மனநிலையை மாற்ற முடியும்," என்கிறார் ப.இராஜ செளந்தர பாண்டியன்.
இந்தக் கொலை தொடர்பாக இறந்த நபர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் கருத்து கூற முன்வரவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)