You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம் - பேடிஎம் செயலியை பயன்படுத்த முடியுமா?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் வங்கிக்கு ஏன் இந்த திடீர் தடை? அதனால் வாடிக்கையாளர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
30 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட பேடிஎம் வங்கி
டிஜிட்டல் யுகத்தில் பெருநகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை பெருகி விட்டது. இந்நிலையில், பேடிஎம் , கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல யுபிஐ செயலிகள் மக்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனை செய்வதில் அதிகம் புழக்கத்தில் உள்ள செயலிகளாகும்.
இதன் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல், ரீசார்ஜ் செய்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 30 கோடி வடிக்கையாளர்களை கொண்டிருப்பதாக கூறி வருகிறது.
பேடிஎம் வங்கிக்கு தடை
இந்த பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை செய்து வருகிறது பேடிஎம் பேமென்ட் லிமிடெட். இந்நிலையில் 2022 மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949இன் கீழ் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாக தெரிவித்தது.
விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக உடனடியாக அதன் செயல்பாடுகளை முடக்குவதாகவும், இதற்கு மேல் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்நிறுவனத்தின் கணக்கு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரிவான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க தணிக்கையாளர் குழுவையும் நியமித்தது.
தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி பிப்ரவரி 29, 2024 க்கு மேல் இந்நிறுவனத்தின் எந்த வித செயல்பாடுகளும் நடைபெறாது என முழுமையாக பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை முடக்கி உத்தரவு ஒன்றை ஜனவரி 31 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
ஏன் இந்த திடீர் தடை?
பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் என்பது ஆரம்பித்த புதிதில் ஒரு வங்கிசார் நிறுவனமே கிடையாது என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ.
பேடிஎம் வங்கி மீதான இந்த திடீர் தடை குறித்து அவரிடம் கேட்டபோது, “தனியார் வங்கிகள் என்றாலே இப்படித்தான் லாபத்தை நோக்கமாக கொண்டு மக்களை கைவிட்டுவிடுவார்கள்” என்றார்.
மேலும் பேசிய தாமஸ், “பண மதிப்பிழப்பு (demonetisation) அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் தான் இந்த நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நிறைய வாய்ப்புகளை கொடுத்தது. அந்த சமயத்தில் பணத்தை நாங்கள் மாற்றி தருகிறோம் என்று சொல்லியே அதிகளவிலான பணத்தை அந்நிறுவனம் சம்பாதித்தது”
“ஆனால், அந்த சமயத்தில் அந்நிறுவனம் ஒரு வங்கியே கிடையாது. அதற்கு பல நாட்கள் கழித்தே அந்நிறுவனம் வங்கி சேவைக்கான உரிமத்தையே வாங்கியது. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனம் மூலம் இந்த நிறுவனத்தில் அதிக முதலீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் அதுவும் நிறுத்தப்பட்டதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்து விட்டது” என்று கூறுகிறார் தாமஸ்.
நிதிநிலை அறிக்கையும் சரியில்லை, ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கும் உட்பட்டும் நடக்கவில்லை என்பன போன்ற காரணங்களால் பேடிஎம் பேமெண்ட் வங்கியின் சேவைகளை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்
ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களது கணக்கில் வைப்பு வைத்துள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்பு கணக்குகள், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற சேவைகளில் உள்ள பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு பிப்ரவரி 29 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் மார்ச் 25ஆம் தேதிக்குள் முடித்து அந்நிறுவனம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், பிப்ரவரி 29க்கு மேல் எந்த விதமான பேடிஎம் கணக்குகளிலும் பணம் செலுத்துவதற்கோ, வரவு வைப்பதற்கோ அல்லது பணப்பரிவர்த்தனை செய்வதற்கோ தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பேடிஎம் நிறுவனம் யு.பி.ஐ (UPI )பரிவர்த்தனைகளை பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகும் தொடர்வதில் எந்த தடையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?
ரிசர்வ் வங்கி உத்தரவால், பேடிஎம் பேமெண்ட் வங்கி பணப் பரிவர்த்தனை தளத்தை பயன்படுத்தி வரும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்கிறார் தாமஸ்.
இதுகுறித்து பேசிய அவர், “ இந்த வங்கி மூலம் கடன் பெற்றவர்களில் ஒரு சிலருக்கு முதல் தவணை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது சேவைகள் முடக்கப்பட்டதால் அடுத்த தவணை கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் அவர்.
மேலும், பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் எத்தனை மக்களை இந்த செய்தி எட்டும்? அப்படி எட்டாத நிலையில் அவர்களது வைப்புத்தொகை அப்படியே முடங்கிவிடும்.
ரிசர்வ் வங்கியின் சோதனைகள் மற்றும் செயல்பாடுகள் முடிந்து மீண்டும் பேடிஎம் செயல்பாடுகள் தொடங்கினால் மட்டுமே வாடிக்கையாளர்களால் அந்த பணத்தை மீண்டும் பெற முடியும்" என்கிறார் தாமஸ்.
ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவால், பேடிஎம் வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் பேடிஎம் செயலியை பயன்படுத்தி யுபிஐ, பேடிஎம் வாலட் போன்ற சேவைகளை எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)