You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
50 கிலோ மீட்டர் தாண்டியும் உணரப்பட்ட வெடி விபத்து - இரான் துறைமுக சம்பவத்தின் கோர காட்சிகள்
இரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஷஹீத் ராஜீயில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு விபத்தால் பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. வெடி விபத்து ஏற்பட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தவர்களும் விபத்தின் தாக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.
ரசாயனங்களின் கரும் புகை அருகில் இருக்கும் நகரங்களைச் சூழ்ந்துள்ளதால், மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு சுகாதார அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று (ஏப்ரல் 27) இரவு வரை மீட்புப் பணிகள் நடந்து வந்ததாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில் திங்கள்கிழமையை (ஏப்ரல் 28) தேசிய துக்க தினமாக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்து நடந்ததற்கான காரணம் என்ன?
கடல்சார் ஆபத்து ஆலோசனை நிறுவனமான ஆம்ப்ரி இன்டெலிஜென்ஸ் (Ambrey Intelligence), "பலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட திட எரிபொருள் கொண்ட சரக்கினை தவறாக கையாண்டதும், விபத்துக்கு முன் கண்டைனர்களுக்கு இடையே தீப் பற்றியதுமே" வெடி விபத்துக்கான காரணம் என கருதுவதாகக் கூறியுள்ளது.
மேலும் அந்நிறுவனம், இரான் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று கடந்த மார்ச் மாதத்தில் "சோடியம் பெர்குளோரேட் ராக்கெட் எரிபொருளை இறக்கியதை" அறிந்திருந்ததாகவும், விபத்துக்குள்ளான கண்டைனரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட திட எரிபொருள் இருந்திருக்கலாம் என்றும் கருதுவதாகவும் தெரிவித்தது.
பெயரை வெளியிட விரும்பாத இரானிய புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த ஒருவர், "வெடித்தது சோடியம் பெர்குளோரேட்" எனவும், "இது ஏவுகணைகளுக்கான திட எரிபொருளில் முக்கிய கூறாக இருப்பதாக" கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
இரானின் ராணுவமும், இரான் புரட்சிகர காவல் படையினரும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராக்கெட் எரிபொருளை இரானின் துறைமுகத்தில் சேமித்து வைத்துள்ளனர் என ஊடகங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இரானில் சிலர், "எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை இவ்வளவு கவனக்குறைவுடன் எப்படி வைத்திருக்க முடிந்தது?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.
வெடி விபத்து பற்றி இரான் அரசு சொன்னது என்ன?
ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அரசு பின்பற்ற வேண்டிய ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?" என பார்வையிட வந்ததாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இது தொடர்பாக விசாரணை நடத்த பெசெஷ்கியன் உள்துறை அமைச்சரை வெடி விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
ராணுவ எரிபொருள் அல்லது ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு எதுவும் இல்லை என பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரசு தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
அதேசமயம், அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட துறைமுகத்தின் சுங்கத்துறையின் அறிக்கையில், அபாயகரமான மற்றும் ரசாயனப் பொருட்களின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த விபத்தால் இரான் அரசுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
இரானின் இறக்குமதியில் கிட்டதட்ட 80 சதவீதம் இந்த துறைமுகம் கையாள்வதால் இரானின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த துறைமுகம் சிறிது செயல்படாமல் இருந்தால், உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
எனினும், ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு நிகழ்ந்த பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
உலக நாடுகள் இந்த விபத்தை எப்படிப் பார்க்கின்றன?
இந்த தீ விபத்தை இரான் சமாளிக்க உதவும் வகையில், பல தீயணைப்பு விமானங்களை இரானுக்கு அனுப்ப ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த மூவர் நலமுடன் இருப்பதாக பெய்ஜிங்கின் சீன வெளியுறவு அமைச்சகம் AFP செய்தி நிறுவனத்துக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, பாகிஸ்தான், இந்தியா, துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வெடி விபத்துக்கு இரங்கல் தெரிவித்தன.
இரான் - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறும் அதே சமயத்தில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக இரு தரப்பும் கூறின.
இரான் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டால், இந்த ஒப்பந்தத்துக்குத் தயார் என தெரிவித்துள்ளது. அதேசமயம், யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.