You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எடப்பாடி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி' என அமித் ஷா அறிவிப்பு - ஓபிஎஸ், டிடிவி நிலை என்ன?
அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வெள்ளிக்கிழமையன்று மாலை அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷாவின் வலதுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்க இடதுபுறம் பாஜக தலைவர் அண்ணாமலை அமர்ந்திருந்தார்.
அப்போது பேசிய அமித் ஷா, "பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். வரப்போகும் தேர்தலில் (2026 சட்டமன்ற தேர்தல்) தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது" என தெரிவித்தார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலை என்ன?
இதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளித்தார்.
"சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையுமா" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது. அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்" எனக் கூறினார்.
"வெற்றி பெற்றால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஆவார்களா?" எனக் கேட்டபோது, "வெற்றி பெற்ற பிறகு அதற்கான பதிலைக் கூறுகிறோம். தற்போது இதுபோன்ற எந்தக் குழப்பத்துக்கும் ஆளாக்க விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு கூறுகிறோம்" எனத் தெரிவித்தார்.
"கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இருந்து நிபந்தனைகள் எதாவது விதிக்கப்பட்டதா?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "எந்தவிதமான நிபந்தனையும் அ.தி.மு.க தரப்பில் இருந்து வைக்கவில்லை. இது இயல்பான கூட்டணி" எனக் கூறினார்.
"கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்களா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, "அ.தி.மு.கவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப் போவதில்லை. தேர்தல் விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம்" எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் ஒருவர்,"மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, "இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில தலைவராக என் பக்கத்தில் தான் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்" எனக் கூறினார்.
திமுக மீது விமர்சனம்
"நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பாஜக இதற்கு எதிராக உள்ளபோது மக்களை எவ்வாறு அணுக முடியும்?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே தி.மு.க இதைப் பயன்படுத்துகிறது" என அமித் ஷா கூறினார்.
தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்த அமித் ஷா, "சில முக்கிய பிரச்னைகளை தி.மு.க எழுப்பி வருகிறது. ஊழல்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே சனாதன தர்மம், தொகுதி மறுவரையறை, மும்மொழி விவகாரம் ஆகியவற்றை தி.மு.க பேசுகிறது" எனக் கூறினார்.
"தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கும்போது அவர்கள் உண்மையிலேயே என்ன மாதிரியான துன்பத்தில் அவதிப்படுகிறார்களோ, அதைப் பிரசாரத்தில் கொண்டு செல்வோம். தி.மு.க-வை போல மக்களை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்?
முன்னதாக தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டும் விருப்பமனு பெறப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில்,''தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அண்ணாமலை செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் கட்சியின் திட்டங்களை கிராமம், கிராமமாக கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது'' எனத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்பு ரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளும் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாளை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தலைவர் அறிவிப்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
10 ஆண்டுகள் விதி தளர்த்தப்பட்டதா?
தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சக்கரவர்த்தி வியாழக்கிழமையன்று அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் எனவும் சக்கரவர்த்தி கூறியிருந்தார்.
அதன்படி, தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள், பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
'புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படலாம்' என பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
ஆனால், நயினார் நாகேந்திரன் 2017ஆம் ஆண்டு தான் பாஜகவில் இணைந்தார். 2025ஆம் ஆண்டில் பாஜக உறுப்பினாராக 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. எனவே 'அவரால் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியுமா?' என்ற விவாதம் எழுந்தது.
இந்த நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர்.
பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் உள்பட உயர் பொறுப்புகளில் திருநாவுக்கரசர் நியமிக்கப்படும் போது அவருக்குக் கட்சிப் பணியில் 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை எனவும் எஸ்.ஆர்.சேகர் குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு