You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் நெரிசலான பொது இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களின் கதை உள்ளது. யாரோ ஒருவர் அவளது மார்பகங்களை பிடிப்பது அல்லது அவளது பின்பக்கத்தை கிள்ளுவது, மார்பில் முழங்கையால் உரசுவது அல்லது தன்னை அவள் உடல் மீது தேய்ப்பது போன்றவை இதில் அடங்கும்.
தங்களை சீண்டுபவர்களை தாக்க பெண்கள் தங்களிடம் உள்ள ஏதோ ஒன்றை பயன்படுத்துவார்கள். உதாரணமாக கிழக்கு நகரமான கொல்கத்தாவில் அதிக நெரிசலான பேருந்துகள் மற்றும் டிராம்களில் பயணிக்கும் கல்லூரி மாணவிகளை எடுத்துக்கொண்டால், பல தசாப்தங்களுக்கு முன்பு நானும் எனது தோழிகளும் எங்கள் குடைகளைப் பயன்படுத்தினோம்.
நம்மில் பலர் அத்துமீறி வரும் கைகளை கீறுவதற்காக நகங்களை நீளமாகவும் கூர்மையாகவும் வைத்திருந்தோம். கூட்ட நெரிசல் என்ற சாக்கில் தங்கள் ஆண்குறிகளை முதுகில் அழுத்தும் ஆண்களைத் தாக்க தங்கள் காலணிகளின் கூர்மையான ஹீல்ஸை சில பெண்கள் பயன்படுத்தினர்.
பலர் மிகவும் பயனுள்ள ஒரு கருவியை பயன்படுத்தினார்கள். அதுதான் எங்கும் கிடைக்கும் சேஃப்டி பின்.
1849 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சேஃப்டி பின்கள், உலகெங்கிலும் உள்ள பெண்களால் வெவ்வேறு ஆடைகளை ஒன்றாக இணைத்து வைத்திருக்க அல்லது திடீர் அலமாரி செயலிழப்பைச் சமாளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
உலகளவில் தங்களை பாலியல் ரீதியில் சீண்டுபவர்களை தாக்கவும், ரத்தம் சிந்தவைக்கவும்கூட அவை பயன்படுத்தப்படுகின்றன.
தங்கள் கைப்பைகளில் அல்லது தங்களிடம் எப்போதுமே சேஃப்டி பின்களை வைத்திருப்பதாகவும், நெரிசலான இடங்களில் வக்கிரமானவர்களுக்கு பாடம் புகட்ட தங்களுக்கு விருப்பமான ஆயுதம் அது என்றும் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பல பெண்கள் ட்விட்டரில் ஒப்புக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் தீபிகா ஷேர்கில். உண்மையிலேயே ரத்தம் சிந்த வைக்க தான் அதைப் பயன்படுத்திய ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் எழுதினார். அலுவலகத்திற்குச் செல்ல அவர் வழக்கமாகப் பயணிக்கும் பேருந்தில் இது நடந்தது, என்று தீபிகா பிபிசியிடம் கூறினார். இந்த சம்பவம் பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்தது, ஆனால் அவர் அதுகுறித்த சிறிய விவரங்களைக்கூட இன்னும் நினைவில் வைத்துள்ளார்.
அவருக்கு அப்போது சுமார் 20 வயது மற்றும் அவரை துன்புறுத்தியவர் 40களின் நடுப்பகுதியில் இருந்தார், அவர் எப்போதும் சாம்பல் நிற சஃபாரி (அரசு ஊழியர்களிடையே பிரபலமான இரண்டு பீஸ் இந்திய உடை) மற்றும் திறந்த-கால் செருப்புகளை அணிந்திருப்பார். மேலும் ஒரு செவ்வக தோல் பையை கையில் வைத்திருப்பார்.
"அவர் எப்பொழுதும் என் அருகில் வந்து நின்றுகொள்வார். மேலே சாய்ந்து தன் ஆண்குறியை என் மேல் தேய்ப்பார். ஓட்டுநர் பிரேக் போடும் ஒவ்வொரு முறையும் என் மீது விழுவார்."
அந்த நாட்களில், தான் "மிகவும் கூச்ச சுபாவம்” கொண்டவராக இருந்ததாகவும், மற்றவர்களின் கவனம் தன்மீது வருவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக பல மாதங்கள் அமைதியாக அவதிப்பட்டார்.
”ஆனால் ஒரு மாலை அவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டு என் தோளிலேயே விந்து வெளியேற செய்தார். இனி பொறுக்க முடியாது என்று அப்போது நான் முடிவு செய்தேன்.”
"நான் அசுத்தமாக உணர்ந்தேன். வீட்டிற்கு வந்ததும், நீண்ட நேரம் குளித்தேன். எனக்கு என்ன நடந்தது என்று என் அம்மாவிடம் கூட சொல்லவில்லை," என்று அவர் கூறினார்.
"அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் வேலையை விட்டுவிடலாம் என்று கூட யோசித்தேன். பிறகு நான் பழிவாங்குவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நான் அவருக்கு உடல்ரீதியாக தீங்கு செய்ய விரும்பினேன், அவரை காயப்படுத்த விரும்பினேன். அவர் மீண்டும் என்னிடம் இப்படி செய்வதைத் தடுக்க நினைத்தேன்."
அடுத்த நாள் தீபிகா தனது தட்டையான காலணிகளின் இடத்தில் கூர்மையான ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்து, ஒரு சேஃப்டி பின்னுடன் பேருந்தில் ஏறினார்.
"அவர் வந்து என் அருகில் நின்றவுடன், நான் என் இருக்கையிலிருந்து எழுந்து, என் குதிகால்களால் அவரது கால்விரல்களை நசுக்கினேன். அவர் அதிர்ச்சியில் மூச்சுத் திணறுவதைக் கேட்டேன், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் நான் சேஃப்டி பின்னால் அவரது முன்கையில் குத்திவிட்டு விரைவாக பேருந்தில் இருந்து வெளியேறினேன்.”
அதன் பிறகு மேலும் ஒரு வருடம் அந்த பேருந்தில் பயணித்த போதிலும் அதன் பிறகு அவரைப்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தீபிகா ஷேர்கில்லின் கதை அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் இது அரிதானது அல்ல.
தென் நகரங்களான கொச்சிக்கும் பெங்களூருவுக்கும் (பெங்களூரு) இடையே இரவு நேர பேருந்து பயணத்தின்போது ஒரு நபர் பலமுறை தன்னை தொட்டுத்தடவ முயன்ற சம்பவத்தை, தனது 30களில் இருக்கும் ஒரு சக ஊழியர் விவரித்தார்.
"ஆரம்பத்தில் நான் அவரை அசைத்து எழுப்பினேன். இது தற்செயலானது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார்.
ஆனால் தொடர்ந்து இது நடந்தபோது, அது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்பதை உணர்ந்தார். மேலும் தாவணியில் குத்தியிருந்த சேஃப்டி பின் அவரைக்காப்பாற்றியது.
"நான் அவரை குத்தினேன், அவர் பின்வாங்கினார், ஆனால் அவர் மீண்டும் மீண்டும் முயன்றார். நான் அவரை மீண்டும் குத்த முயற்சித்தேன். இறுதியாக, அவர் விலகினார். என்னிடம் சேஃப்டி பின் இருந்தது சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான் ஏன் அவரை அறையவில்லை என்று நினைத்து முட்டாள்தனமாக உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.
"ஆனால் நான் சின்னவளாக இருக்கும்போது ஏதாவது சொன்னால் மக்கள் என்னை நம்ப மாட்டார்கள் என்று கருதினேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
பெண்கள் உணரும் இந்த பயமும் அவமானமும் தான், பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை தைரியப்படுத்துவதாகவும், பிரச்சனையை மிகவும் பரவலாக்குவதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
2021 ஆம் ஆண்டில் 140 இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்பின்படி, 56% பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகாரளித்தனர். ஆனால் 2% பேர் மட்டுமே காவல்துறையிடம் சென்றுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்ததாக அல்லது சூழ்நிலையைப் புறக்கணித்ததாக கூறினார்கள். நிலைமையை சிக்கலாக்க விரும்பாதால் விலகிச்சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
52% க்கும் அதிகமானோர் "பாதுகாப்பின்மை உணர்வு" காரணமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நிராகரித்ததாகக் கூறியுள்ளனர்.
"பாலியல் வன்முறை பற்றிய பயம் உண்மையான வன்முறையை விட பெண்களின் ஆன்மாவையும் இயக்கத்தையும் பாதிக்கிறது," என்கிறார் கல்பனா விஸ்வநாத். ’சேஃப்டிபின்’ என்ற சமூக அமைப்பை இணைந்து நிறுவியவர் அவர். பொது இடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும் ஆக்குவதற்காக அவர் பணியாற்றுகிறார்.
"பெண்கள் தங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்குகிறார்கள், அதன் காரணமாக ஆண்களுக்கு நிகரான நிலை நமக்கு மறுக்கப்படுகிறது. இது உண்மையான பாலியல் வன்கொடுமைச் செயலை விட பெண்களின் வாழ்க்கையில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது."
பெண்களின் பாலியல் ரீதியியான துன்புறுத்தல், இந்தியாவில் மட்டுமே இருக்கும் பிரச்சனை அல்ல. இது உலகளாவிய பிரச்சனை என்று கல்பனா விஸ்வநாத் சுட்டிக்காட்டுகிறார். லண்டன், நியூயார்க், மெக்சிகோ சிட்டி, டோக்கியோ மற்றும் கெய்ரோவில் உள்ள 1,000 பெண்களிடம் தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், "போக்குவரத்து நெட்வொர்க்குகள் பாலியல் வேட்டையாடுபவர்களை ஈர்க்கும் இடங்கள். பாலியல் ரீதியிலான சீண்டல்களுக்கு அவர்கள் கூட்ட நெரிசலை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்துகிறார்கள்" என்று காட்டியது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பெண்களும் சேஃப்டி பின்களை எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாக கல்பனா விஸ்வநாத் கூறுகிறார். அமெரிக்காவில் 1900 களில் கூட மிகவும் நெருக்கமாக வரும் ஆண்களை குத்துவதற்காக பெண்கள் ஹேட்பின்களைப் பயன்படுத்தினார்கள் என்று ஸ்மித்சோனியன் இதழ் தெரிவிக்கிறது.
ஆனால் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலின் அளவில் பல உலகளாவிய கணக்கெடுப்புகளில் முதலிடத்தைப் பிடித்தாலும்கூட இந்தியா, அதை ஒரு பெரிய பிரச்சனையாக அங்கீகரிப்பது போலத்தெரியவில்லை.
குறைவான புகார் எண்ணிக்கை காரணமாக அது குற்றப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிப்பதில்லை. பாலியல் ரீதியிலான சீண்டல் என்பது பெண்களை கவர்ந்திழுக்கும் ஒரு வழி என்று நமக்குக் கற்பிக்கும் பிரபலமான சினிமாவின் தாக்கமும் இதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்..
கடந்த சில ஆண்டுகளில், பல நகரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது என்று அவர் கல்பனா கூறினார்.
தலைநகர் டெல்லியில், பேருந்துகளில் அவசர உதவி பட்டன்களும், சிசிடிவி கேமராக்களும் உள்ளன. மேலும் பெண் ஓட்டுநர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பெண் பயணிகளின்பால் அதிக பொறுப்புடன் செயல்பட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் பேருந்துகளில் மார்ஷல்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் உதவியை நாடக்கூடிய செயலிகள் மற்றும் ஹெல்ப்லைன் எண்களையும் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இது காவல்துறை மட்டுமே கவனிக்கவேண்டிய பிரச்சனை அல்ல என்கிறார் கல்பனா விஸ்வநாத்.
"மிக முக்கியமான தீர்வு என்னவென்றால், இந்த சிக்கலைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டும். ஒரு ஒருங்கிணைந்த ஊடக பிரச்சாரம் இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை மற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தை எது என்பதை அது மக்களுக்கு உணர்த்தும்."
அது நடக்கும் வரை, தீபிகா ஷேர்கில், எனது சக ஊழியர் மற்றும் லட்சக்கணக்கான இந்திய பெண்களும் தங்கள் சேஃப்டி பின்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்