You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிந்து குழந்தைகளை வளர்த்த முஸ்லிம் தாய் பற்றி எடுக்கப்பட்ட படம்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி
தனது அம்மாவைப் பற்றிய படத்தைப் பார்த்தபோது கண்களில் கண்ணீர் வந்ததாக ஜாஃபர் கான் கூறினார். ஆனால் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீதரன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.
ஸ்ரீதரன் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளான ரமணி, லீலா ஆகியோரை தனது சொந்த குழந்தைகளாக வளர்த்த தேன்னதன் சுபைதா என்ற முஸ்லிம் பெண்ணைப் பற்றிய படம் இது. ஆனால் சுபைதா அவர்களை இஸ்லாத்திற்கு மாறுங்கள் என எப்போதுமே கூறியது கிடையாது.
ஓமனில் பணிபுரியும் ஸ்ரீதரன், 2019 ஜூன் 17ஆம் தேதி சமூக ஊடகங்களில் ஒரு இடுகையை எழுதினார். அதன்பிறகு 'என்னு ஸ்வாதம் ஸ்ரீதரன்' அல்லது தமிழில் 'என் சொந்த ஸ்ரீதரன்' என்ற மலையாளப் படத்தின் வேலை தொடங்கியது.
"என் உம்மாவை அல்லாஹ் அழைத்துக்கொண்டுவிட்டார். ஜன்னத்தில் (சொர்க்கம்) அவருக்கு அற்புதமான வரவேற்பு கிடைக்க அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அந்தப்பதிவில் ஸ்ரீதரன் கூறியிருந்தார். கேரளாவில் முஸ்லிம்கள் தாயை, அம்மா அல்லது உம்மா என்று அழைக்கிறார்கள்.
' ஸ்ரீதரனிடம், ஏன் அம்மாவை உம்மா என்று அழைக்கிறீர்கள்' என்ற அடிப்படைக் கேள்வியை பிபிசி எழுப்பியது.
கோழிக்கோட்டில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காளிகாவில் இருந்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீதரன், "நீங்கள் யார் என்று மக்கள் கேட்கிறார்கள். என் பெயர் ஸ்ரீதரன் என்பதால் அவர்கள் இப்படி கேட்கலாம். அதனால்தான் மக்களுக்கு சந்தேகம் இருந்தது. அது சாதாரணமானது" என்று கூறுகிறார்.
'மதமாற்றம் பற்றி சொன்னதே இல்லை'
உம்மா தன்னை எப்படி வளர்த்தார்கள் என்று ஸ்ரீதரன் கூறினார்.
"என் அம்மா, உம்மா, உப்பா (அப்பா) வீட்டில் வேலை பார்த்து வந்தார். என் அம்மாவுக்கும் (சக்கி) உம்மாவுக்கும் நல்ல உறவு இருந்தது. கர்ப்ப காலத்தில் என் அம்மா இறந்துவிட்டார்."
தன்னை தத்தெடுத்த உம்மாவும் உப்பாவும் தன்னை மதம் மாறச் சொன்னதில்லை என்று ஸ்ரீதரன் தனது பதிவின் இறுதியில் எழுதியிருந்தார்.
"என்னை வளர்த்த என் அம்மாவும், அப்பாவும் மதம், ஜாதி பற்றி எங்களிடம் சொல்லவே இல்லை. எங்களுக்கு நல்லது மட்டுமே வேண்டும் என்று சொன்னார்கள்,” என்கிறார் அவர்.
பட்டியல் சாதியைச் சேர்ந்த ஸ்ரீதரன், "உம்மாவிடம் ஏன் எங்களை இஸ்லாத்திற்கு மாற்றவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாமோ, கிறிஸ்தவமோ, இந்து மதமோ எதுவாக இருந்தாலும், ’அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும், அனைவரையும் மதிக்கவேண்டும்’ என்றே போதிக்கிறது’ என்று சொன்னார்கள்,” என்று குறிப்பிட்டார்.
"என் உம்மா என்னை கோவிலுக்கு சென்று வழிபட அனுமதித்தார். எப்போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், கோவிலுக்கு செல்வோம். ஆனால் அந்த நேரத்தில் போக்குவரத்து வசதி மிகவும் மோசமாக இருந்தது.
நாங்கள் தனியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை, எனவே நாங்கள் திருவிழாக்கள் அல்லது விசேஷங்களுக்கு மட்டுமே கோவிலுக்கு செல்வோம். அவர் எங்களை அழைத்துச் செல்வார்,” என்று அவரது சகோதரி லீலா கூறினார்.
சுபைதாவின் வீட்டிற்கு வந்ததும் என்ன நடந்தது?
”அப்போது எனக்கு ஏழு வயது. காலையில் அவர்கள் இறந்து போனதால் உம்மா அவர்கள் வீட்டுக்குச் சென்றதை அறிந்தேன். மாலை வீடு திரும்பியபோது ஸ்ரீதரன் என் உம்மாவின் இடுப்பில் இருந்தார்.
அவருக்கு சுமார் இரண்டு வயது இருக்கும். லீலாவுக்கு என் வயது, ரமணிக்கு 12 வயது. லீலாவும் ரமணியும் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். இப்போது இந்தக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை, அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள் என்று அவர் சொன்னார்,” என்று அப்துல் அஜீஸ் ஹாஜி, சுபைதா தம்பதியரின் மூத்த மகன் ஷாநவாஸ் கூறினார்.
உம்மா வீட்டுக்குள் வந்ததும், லீலாவும் பின் தொடர்ந்து வந்தாள். ஆனால் ரமணி வெளியே நின்றாள். அவள் எங்களை விட கொஞ்சம் பெரியவள், அதனால் தயங்கினாள். வீட்டுக்குள் அழைத்துச் செல்லுமாறு பாட்டி என்னிடம் சொன்னாள். நான் வெளியே சென்று அவள் கையைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தேன்.
அப்போதிலிருந்து நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். ஜாபர் கான் மற்றும் ஸ்ரீதரனைத் தவிர நாங்கள் அனைவரும் கீழே தரையில் தூங்கினோம். அவர்கள் இருவரும் மிகவும் சிறியவர்கள்.
எனவே உம்மா மற்றும் உப்பாவுடன் அவர்கள் தூங்குவது வழக்கம். பாட்டி படுக்கையில் படுப்பார். நாங்கள் மூவரும் கீழே தூங்குவது வழக்கம். எங்கள் தங்கை ஜோஷினா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார்,” என்று ஷாநவாஸ் குறிப்பிட்டார்.
குழந்தைகள் வளரும்போது, ஸ்ரீதரனும் ஜாஃபர் கானும் இரட்டையர்களைப் போல தோற்றமளித்தனர். இருவருக்கும் இப்போது 49 வயதாகிறது. ஒன்றாக பள்ளிக்குச் சென்ற அவர்கள் வீட்டிலும் ஒன்றாக விளையாடுவது வழக்கம்.
ஸ்ரீதரன் வீட்டிற்கு வந்து பள்ளியில் தான் செய்த குறும்புகளை உம்மாவிடம் கூறுவதை ஜாஃபர் விரும்பவில்லை. அதனால் பள்ளியில் அவர் வேறு மொழி படித்தார். இருவரின் வகுப்புகளும் வெவ்வேறாயின.
"ஸ்ரீதரன் சொல்வதையெல்லாம் உம்மா நம்புவார், இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். என் அம்மா என்ன சொன்னாலும், அவர் கேட்பார். நான் வேலை செய்வதைத் தவிர்ப்பேன்," என்று ஜாஃபர் கான் கூறுகிறார்.
"நாங்கள் ஸ்கூலுக்குப் போகும்போது ரமணி எங்களை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி இருந்த தன் ஸ்கூலுக்குப் போவார். பள்ளியில் இருந்து நாங்கள் திரும்பி வரும்போது உம்மா வெளியே சென்றிருந்தால், லீலா எங்களுக்கு சாப்பாடு கொடுப்பாள்."
ஷாநவாஸ் மற்றும் ஜாஃபர் பொறாமைப்பட்டார்களா?
ஸ்ரீதரன் தாய்க்கு மிகவும் பிடித்த மகன் என்பதை ஷாநவாஸ் மற்றும் ஜாஃபர் இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஷாநவாஸ் எப்போதாவது பொறாமைப்பட்டிருக்கிறாரா?
“இல்லை... ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது, உம்மா அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நான் என் பாட்டியிடம் ஏன் வெள்ளை நிற குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரவில்லை என்று கேட்டேன். என் பாட்டி உதட்டில் விரலை வைத்து நீ இப்படி பேசக்கூடாது. நிறத்தை நமக்கு அல்லாஹ் கொடுக்கிறார் என்று சொன்னாள். நான் வளைகுடா நாடுகளில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் போது என் பாட்டி, வெளிநாட்டில் இருந்துவிட்டு நீ சிவப்பாகிவிட்டாய், நான் வீட்டில் இருந்துகொண்டே கருப்பாகிவிட்டேன்’ என்று சொல்வார்கள்.”
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, தனது பெற்றோர் மற்றும் பாட்டியின் கல்லறைகளுக்குச் செல்லும்போது, அந்த இடம் எப்போதும் சுத்தமாக இருக்கும் என்று ஜாஃபர் கான் நினைவு கூர்ந்தார். அதை ஸ்ரீதரன் எப்போதும் சுத்தம் செய்துவைப்பார் என்கிறார் அவர்.
அப்படியானால் உங்களுக்கு ஸ்ரீதரன் என்ன? ஜாபர் கான் கூறுகிறார், "அவர் என் சகோதருக்கும் மேல். அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். அவர் எனது துணை."
ஸ்ரீதரனை மிகவும் நேசித்தார்
"உம்மாவுக்கு எல்லா குழந்தைகளிலும் ஸ்ரீதரனை மிகவும் பிடிக்கும். அதனால் இதை எப்படி தனக்கு சாதகமாக்குவது என்று ஸ்ரீதரனுக்கு தெரியும். ஒரு முறை என் கண்ணால் பார்த்தேன். பள்ளிக்கூடம் செல்வதற்கு முன் உம்மா குழந்தைகளுக்கு பத்து ரூபாய் கொடுப்பாள், ஜாபர் பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு வெளியே சென்றார். ஸ்ரீதரன் உம்மாவிடம் திரும்பி வந்து, தனக்கு இன்னும் பத்து ரூபாய் வேண்டும் என்று கேட்டார். உம்மா ஒவ்வொரு முறையும் அவருக்கு கொடுப்பார்,” என்று அவர்களின் குடும்ப நண்பரான அஷ்ரஃப் கூறுகிறார்.
லீலாவுக்கு உம்மா குறித்த நினைவுகள்
"எங்களுக்கு எந்தக்கஷ்டமும் தெரியாமல் வளர்த்தார்கள். நான் இந்த வீட்டில் அவர்களை என் பெற்றோராக நினைத்து வளர்ந்தேன். உம்மா பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ளன. அவை எண்ணற்றவை. அவள் சென்ற பிறகு நான் எப்படி உணர்ந்தேன் என்று என்னால் விவரிக்கவே முடியாது. உம்மா பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது."என்று கண்ணீரைத் துடைத்தபடி லீலா கூறினார்.
ஸ்ரீதரனும் உம்மாவை நினைத்து அழத் தொடங்குகிறார். "எல்லோருக்கும் அம்மாவைப் பற்றிச் சொல்ல நல்ல நினைவுகள் மட்டுமே இருக்கும். எனக்கும் நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன," என்றார்.
ஷாநவாஸ் சொன்ன மற்றொரு விஷயம்
ஷாநவாஸுக்கு தனது உம்மாவைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு வித்தியாசமான அனுபவமும் உள்ளது.
“அவர் இறந்த பிறகுதான் அவர் எத்தனை பேருக்கு உதவி செய்தார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆரம்பத்தில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றேன். பின்னர் என் தொழிலைத் தொடங்கினேன், உம்மா தன்னுடைய 12 ஏக்கர் நிலத்தில் இருந்து சிறிது சிறிதாக நிலத்தை விற்கத் தொடங்கினார் என்பதை நான் அறிந்தேன். இந்த நிலம் உம்மாவுக்கு அவரது தந்தையிடமிருந்து கிடைத்தது. கடனாளிகளின் கடனை அடைப்பதற்காக நிலத்தை விற்றுக் கொண்டிருந்தார்."
”சுபைதாவிடம் யாரேனும் வந்து கல்வி, திருமணம், சிகிச்சைக்கு பணம் கேட்பார்கள். அவர் நன்கு தெரிந்த தொழிலதிபர்களை அழைத்து உதவி கேட்பார். இந்த உதவியில் தொழிலதிபர்களும் தங்கள் பங்கைச் சேர்த்துக் கொண்டனர். சுபைதா பின்னர் பணத்தைச் செலுத்துவார். கடன் வாங்கி உதவி செய்வார். பின்னர் நிலத்தின் ஒரு பகுதியை விற்று கடனை அடைப்பார்.”
இப்போது சுபைதாவிடம் பணம் இல்லை என்று தங்களுக்கு தெரியும். ஆகவே ஒரு வருடத்திற்கு நன்கொடை கொடுப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மனைவியிடம் சொல்லுமாறு உள்ளூர் கோவில் கமிட்டி அப்துல் அஜீஸிடம் சொன்னது.
"அவர் கோவில், மசூதி மற்றும் தேவாலயத்திற்கு சமமாக நன்கொடை அளித்தார். வீட்டின் அருகே ஒரு துண்டு நிலம் இருந்தது. அதையும் அவர் விற்க விரும்பினார். அதன் விலை என்ன என்று நான் கேட்டேன், அவர் 12 லட்சம் என்று சொன்னார். என்னிடமிருந்து பதினைந்து லட்சம் எடுத்துக்கொண்டு நிலத்தை எனக்கு தருமாறு கேட்டேன். ஆனால் 12 லட்சத்திற்கு நிலத்தை கொடுப்பதாக உறுதி அளித்துவிட்டதால், அதை எனக்குக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார்,” என்று ஷாநவாஸ் கூறுகிறார்.
"எங்கள் உடன்பிறந்தவர்கள் யாருக்கும் எங்கள் தாய் நிலத்தில் பங்கு கொடுக்கவில்லை. எங்கள் வீடு கட்டப்பட்டுள்ள நிலம் எங்கள் தந்தைக்கு சொந்தமானது" என்கிறார் அவர்.
ஷாநவாஸ் 2018 இல் வளைகுடாவில் இருந்து திரும்பியபோது, சுபைதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஷாநவாஸ் தனது தாயை தனியாக கவனித்துக் கொள்ள முடியாததால் ஜாஃபர் கானை திரும்பி வரும்படி கூறினார். சுபைதா தனது மகன்களிடம் எனது நோய் குறித்து ஸ்ரீதரனிடம் கூற வேண்டாம், இல்லையெனில் அவர் ஓமனில் உள்ள வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார் என்று கூறியிருந்தார்.
"அவர் தனது மனைவியுடன் இருப்பதையும், உம்மாவிடமிருந்து விலகி இருப்பதையும் நாங்கள் உறுதி செய்தோம்."
"உம்மா இறந்ததும், ஸ்ரீதரனின் முகநூல் பக்கத்தில் எதிர்வினையைப் பார்த்ததும், மக்கள் எங்களுக்குள் வித்தியாசத்தைப் பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால் உண்மையில் நாங்கள் இன்னும் ஒன்றாகவே இருக்கிறோம்."
படம் எப்படி உருவானது?
சித்திக் பரவூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அவரது முந்தைய படமான 'தஹீரா', கோவாவில் நடந்த 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஸ்ரீதரனின் பதிவை அறிந்த அதே நேரத்தில் சித்திக், ‘என்னு ஸ்வதம் ஸ்ரீதரன்’ படத்தை எடுக்க முடிவு செய்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், "இந்தக் கதையில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது சமூகம் இதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
மனித நேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்போதுதான் நாடு வளர்ச்சி அடையும் என்றார் அவர்.இந்தப் படத்திற்கு தயாரிப்பாளரைக் கண்டுபிடிக்க சித்திக்குக்கு நீண்ட காலம் ஆனது. ஆனால் தற்போது படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தை திரையரங்கிற்கு கொண்டு செல்பவருக்காக அவர் காத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்