You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு
கேரள மாநிலத்தின் முதலாவது திருநங்கை வழக்கறிஞராக பத்மா லக்ஷ்மி பதிவு செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் புதிய வழக்கறிஞர்கள் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட 1,500 பேரில் இவரும் ஒருவர்.
எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பத்மா லக்ஷ்மி சட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவருக்கு கேரள சட்ட அமைச்சர் பி. ராஜீவ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்மா லக்ஷ்மி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மிகவும் ஊக்கமளிக்கும் சூழல் நிலவாத ஒரு சமூகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கருதி, தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக்கொண்ட இளம் வழக்கறிஞரின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார்.
"வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் கடந்து கேரளாவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்த பத்மா லக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள். முதலாவதாக வருவதே வரலாற்றில் எப்போதும் கடினமான சாதனை தான். இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் முன்னோடிகள் இருப்பதில்லை. அந்த பயணத்தில் தடைகள் தவிர்க்க முடியாதவை. இதையெல்லாம் முறியடித்து சட்ட வரலாற்றில் பத்மா லக்ஷ்மி தன் பெயரை எழுதி வைத்துள்ளார்" என்று மலையாளத்தில் அமைச்சர் ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.
"பத்மா லக்ஷ்மியின் வாழ்க்கை திருநங்கைகள் பலர் வழக்கறிஞர் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கட்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமைக்குரிய பத்ம லட்சுமியின் பெயர் இப்போது கேரள வரலாற்றில் பொறிக்கப்படும் என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
பத்மாவின் வழக்கறிஞர் பதிவு தொடர்பான தகவலுக்கு சமூக ஊடகங்களில் பலரும் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
"வழக்கறிஞர் சமூகத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் பத்மாவை வரவேற்கிறோம்," என்று ஒரு பயனர் அமைச்சரின் இடுகைக்கான பதிலில் கருத்து தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரானது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பத்மா, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது பெற்றோர்கள் தான் எனது சக்தி. எனது ஆசிரியை டாக்டர் மரியம்மா எம்.கே. மற்றும் மூத்தவர் டாக்டர் பத்ரகுமாரி இருவரும் மிகவும் ஆதரவாக இருந்ததால் என்னால் சாத்தியம் ஆனது.
அதிகமாக பயணிக்க வேண்டியிருப்பதால் பாகுபாடு பற்றி நான் கவலைப்படவில்லை. நான் பாகுபாட்டைப் பார்த்தால், எதிர்மறையான வார்த்தைகளைப் பார்த்தால், அது என்னை மிகவும் மோசமாக பாதிக்கும். நான் நேர்மறையான பதில்கள் மற்றும் நேர்மறையான சாதனைகளை மட்டுமே பார்க்கிறேன். நான் கடின உழைப்பு மற்றும் நேர்மையை நம்புகிறேன்," என்றார்.
"இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் உன்னதமான தொழில். பாகுபாடு மற்றும் அநீதியை எதிர்கொள்ளும் நபரின் குரலாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுதான் எனது இறுதி நோக்கம்.
எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. என் அம்மா ஒரு வழக்கறிஞர் கிளார்க். என் தந்தை வெல்டராக வேலை செய்கிறார், அவரும் கொச்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கப்பல் கட்டும் தளம். என்னுடைய மூத்தவர் கே.வி.பத்ரகுமாரி உயர்நீதிமன்றத்தில் எனக்கான இடத்தை உருவாக்கினார். எனது அலுவலகத்தில் எனது சக ஊழியர்களுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு அதிர்ஷ்டசாலி,” என்கிறார் பத்மா.
நீதித்துறையில் திருநங்கைகள்
இந்திய நீதித்துறையில் மூன்று திருநங்கைகள் நீதிபதி பதவியை வகித்து வருகிறார்கள்.
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோயிதா மோண்டல், 2017இல் மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள லோக் அதாலத்தில் திருநங்கை செயல்பாட்டாளர் வித்யா காம்ப்ளே உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், குவாஹட்டியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற திருநங்கை நீதிபதி ஆக நியமிக்கப்பட்டார்.
இவர்கள் வழியில் தற்போது சட்டத்துறையில் கேரள மாநிலத்தின் முதலாவது பெண் வழக்கறிஞராகி இருக்கிறார் பத்மா லக்ஷ்மி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்