பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை மாற்ற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது பல மாநிலங்களில் ஆளுநர்களை வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சாத்தியமா?
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களே இடம்பெற்று வருகின்றனர்.
பல்கலைக்கழங்கள் உருவான காலத்திலிருந்து இதுவே நடைமுறையாக இருந்து வந்த நிலையில், சமீப காலமாக மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக செயல்படும் ஆளுநர்களுக்கும் இடையில், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர்களை நீக்கும் சட்டங்களை இயற்றிவருகின்றன. ஆனால், அந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில் ஆளுநர்களே இருப்பதால், அவர்கள் அந்த ஒப்புதல் அளிப்பதை தள்ளிப்போட்டுவருகின்றனர். இந்த காரணமாக மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக ஆனது எப்படி?
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனி சட்டங்களின் மூலம் உருவாக்கப்படுகின்றன.
அதாவது, ஒரு மாநிலம் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவுசெய்தால், அதற்கென ஒரு சட்டத்தை இயற்றுகிறது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் அந்தப் பல்கலைக்கழங்கள் இயங்கும். இந்தச் சட்டங்கள் உருவாக்கப்படும்போதே, ஆளுநர்களை வேந்தர்களாக வைத்தே உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக, ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் பிரிட்டிஷ் இந்தியாவில் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டதிலிருந்தே அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களே வேந்தர்களாக இருந்துவந்துள்ளனர்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் இந்தப் வழக்கம் தொடர்ந்தது. ஆந்திர மாநிலத்தில் மட்டும் சில ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் முறை இருந்தது. பிறகு மீண்டும் ஆளுநரே பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் வகையில் சட்டம் மாற்றப்பட்டது.
ஒரு தனி மனிதர் என்ற வகையில்தான் ஆளுநர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். வேந்தர்களாகச் செயல்படும் ஆளுநர்கள் பெரும்பாலும், பல்கலைக்கழகங்களின் தினசரி நடவடிக்கைகளிலோ, இயங்கும் முறைகளிலோ தலையிடுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகம் துணை வேந்தர்களால் வழிநடத்தப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் வேந்தரின் பணி என்பது பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது, கௌரவப் பட்டங்கள் அளிப்பதை அங்கீகரிப்பது, குஜராத், பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்துவது என்ற வகையில்தான் அமைகிறது.

பட மூலாதாரம், Getty Images
வேந்தர்கள் நினைத்தால், பல்கலைக்கழகத்தின் எந்த நடவடிக்கையையும் செல்லாது என அறிவிக்க முடியும். மேலும் ஆட்சிக் குழு மற்றும் கல்விக் குழு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க முடியும். ஆனால், பல்கலைக்கழக சட்டங்களைப் பொறுத்தவரை வேந்தர்கள், துணை வேந்தர்கள், மாநில முதலமைச்சர்கள், உயர்கல்வித் துறை அமைச்சர்கள் இடையிலான உறவு தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
முக்கியமான நடவடிக்கைகள் பெரும்பாலும் மரபின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. அனைத்துத் தரப்பினரிடமும் சுமுக உறவு நிலவும்வரை இதில் பிரச்சனை ஏதும் வருவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு பொறுப்பில் முரண்படும் மனநிலை கொண்ட ஒருவர் வரும்போது நிலைமை சிக்கலாகிவிடுகிறது.
இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும்கூட பல பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. 1950களின் துவக்கத்தில் பம்பாயின் ஆளுநராக சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் இருந்தபோது புனா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களை நியமிப்பதில் அவருக்கும் மாநில முதல்வர் மொரார்ஜி தேசாய்க்கும் மோதல் ஏற்பட்டது.
இதனை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றபோது, ஆளுநரின் முடிவே சரி எனக் கூறப்பட்டது.
1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்வரை மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்ததால், வேந்தர்கள் என்ற வகையில், ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் பெரிய அளவில் முரண்பாடுகள் ஏற்படவில்லை. ஆனால், தற்போது பல மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிரான கூட்டணியில் உள்ள கட்சியின் அரசோ, மாநிலக் கட்சிகளோ ஆட்சியில் இருக்கும் நிலையில் முரண்பாடுகள் முற்றிவருகின்றன.
அதிலும் பெரும்பாலான முரண்பாடுகள், துணை வேந்தர்களை நியமிப்பதில்தான் ஏற்படுகின்றன.
இந்த நிலையில்தான் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள், வேந்தர் பதவியை ஆளுநரே வகிப்பார் என்ற பிரிவை மாற்றுவதற்கான சட்டங்களை இயற்றி வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி மேற்கு வங்க அரசு, மாநிலத்தில் உள்ள 31 பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்களுக்குப் பதிலாக முதலமைச்சர்களே இருப்பார்கள் என்ற சட்டத்தை நிறைவேற்றியது. (அப்போதைய ஆளுநர் ஜகதீப் தன்கர் இந்த மசோதாவைத் திருப்பி அனுப்பிவி்டடார்).
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர்களிடமிருந்து மாற்றி மாநில அரசுக்கு அளிக்கும் இரண்டு மசோதாக்களை (தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், 2022, சென்னை பல்கலைக்கழக திருத்தச் சட்டம், 2022)சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், M.K.Stalin
மகாராஷ்டிரா, கேரளா சட்டங்கள்
2021ல் மகாராஷ்டிர அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பாக, துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசு ஐந்து பேர் கொண்ட பட்டியலை வேந்தருக்கு அனுப்பும். வேந்தர் அதில் ஒருவரை துணை வேந்தராக நியமிக்கலாம். அல்லது புதிய பட்டியலைக் கோரலாம்.
2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு பேரைக் கொண்ட பட்டியலே வேந்தரிடம் அளிக்கப்படும். அதில் ஒருவரை வேந்தர், துணை வேந்தராக நியமிக்க வேண்டும். மற்றொரு பட்டியலைக் கேட்க முடியாது. இப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இந்த மசோதாவைத் திரும்பப் பெற முடிவுசெய்துள்ளது.
அதேபோல, கேரளாவில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதையடுத்து நவம்பர் 8ஆம் தேதியன்று மாநிலத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர்களை நீக்கும் மசோதாவை மாநில சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர்கள் வேந்தர்களாக செயல்படும்போது மாநில அரசு சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டுமா என்பதை பெரும்பாலும் முன்னுதாரணங்களும் மரபுகளுமே கட்டுப்படுத்துகின்றன.
சில நீதிமன்றத் தீர்ப்புகளும் இது தொடர்பாக வெளியாகியுள்ளன. 1997ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று, ஆளுநர்கள் வேந்தர்கள் என்ற வகையில் முடிவெடுக்கும்போது மாநில அமைச்சரவையைக் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என கூறியது.
எதிர்காலத்தில் என்னவாகும்?
மத்திய - மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றிய சர்க்காரியா ஆணையமும் பூஞ்சி ஆணையமும் (2010) இதே கருத்தை வலியுறுத்தின. ஆனால், அரசமைப்புச் சட்டம் அளிக்காத எந்த பொறுப்பையும் ஆளுநருக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டுமென சர்க்காரியா ஆணையம் கூறியது. பூஞ்சி ஆணையமும் ஆளுநரே வேந்தராக இருப்பது பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர் அரசமைப்புச் சட்ட கடமைகளை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென்று சுட்டிக்காட்டியது.
மேற்கு வங்க அரசு சட்டம் இயற்றியபோது, இந்த ஆணையத்தின் பரிந்துரை சுட்டிக்காட்டப்பட்டது. (மாநில ஆளுநர்களை மாநில சட்டமன்றம் நீக்கக்கூடிய பொறிமுறை தேவை, மாநில முதல்வர்களை கலந்தாலோசித்தே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை இந்த ஆணையம் அளித்தது). ஆளுநர்களை வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்க முடியுமா?
பல்கலைக்கழக வேந்தர்கள் என்ற முறையில் ஆளுநர்களுடன் தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்படுவதால் அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க பல மாநில அரசுகள் முயல்கின்றன. சில மாநில அரசுகள் அவர்கள் அதிகாரத்தைக் குறைக்க முயல்கின்றன. இது சாத்தியமா? சாத்தியம்தான் என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
"ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்குரிய மாநிலச் சட்டப்படி இயற்றப்படுகிறது. அந்தச் சட்டத்தில் வேந்தர்களாக ஆளுநர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அந்தச் சட்டத்தை திருத்திவிட முடியும்" என்கிறார் அவர்.
ஆனால், அப்படித் திருத்தப்படும் சட்டத்திற்கு மாநில ஆளுநர்களே ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலை இருப்பதுதான் சிக்கல். "இந்தச் சிக்கல் வெகுகாலத்திற்கு நீடிக்க முடியாது. எதிர்காலத்தில் ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக நீடிக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்" என்கிறார் ஹரி பரந்தாமன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












