சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

பட மூலாதாரம், Lark Studio

நகைச்சுவை பின்புலம் சார்ந்த கதைகளாக தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் சிவா நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. பாடகர் மனோ, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், திவ்யா கணேஷ், ஷாரா, மா.க.ப. ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்.

எப்போதும் 'சிங்கிளாகவே' இருப்பவர்களுக்கு துணையாக இருப்பதற்காக உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செல்போன், எதிர்பாராத விதமாக திருடப்பட்டு செல்போன் கடையில் விற்கப்படுகிறது. உணவு டெலிவரி செய்யும் சிவாவின் கைகளில் கிடைக்கும் அந்த செல்போனால் அவரது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதே இப்படத்தின் கதை. இந்த படம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

பெரிய அளவில் சுவாரஸ்யம், திருப்பங்களின்றி முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி நகரும் படத்தில், 'பிரேமம்' பட ரெஃபரன்ஸ், மனோவின் பாதிரியார் வேடம், கேதர் ஜாதவ் ஐபிஎல் ஆட்டம், காரில் உணவு டெலிவரி செய்வது, அயன் மேனிடம் பஞ்ச் டயலாக் பேசுவது என காட்சிகள் ரசிக்க வைக்கின்றன என 'இந்து தமிழ் திசை' கூறியுள்ளது.

“அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு இயல்பாகவே வரும் டைமிங் காமெடிகளும், உடல்மொழியும் மொத்த படத்தையும் ரசிக்க பேருதவி புரிகின்றன. இடையிடையே அவரின் ஆங்கில வசனங்கள் அல்டிமேட் ரகம்!

‘பர்ஸ்ட் டைம் கிறிஸ்டினா மாறுனதால இதெல்லாம் தேவைன்னு நெனைச்சேம்பா’ என மனோ பேசும் வசனங்களும், அவரின் யூத் உடல்மொழியும் டைமிங் டையலாக்குகளும் ‘சிங்காரவேலன்’ மனோவை நினைவூட்டுகின்றன. நகைச்சுவை மெட்டீரியலாக அவரை தமிழ் சினிமா நிறைய பயன்படுத்த வேண்டியிருப்பதை உணர்த்தியிருக்கிறார். சுவாரஸ்யத்தையும், திருப்பத்தையும் எதிர்பாக்காமல், லாஜிக் மீறல்களைத் தாண்டி ஜாலியாக சென்று பார்க்கும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ ஏமாற்ற வாய்ப்பு குறைவு ” என்றும் தனது விமர்சனத்தில் 'இந்து தமிழ் திசை' குறிப்பிட்டுள்ளது.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

பட மூலாதாரம், Lark Studios

சிவாவின் நகைச்சுவை வசனங்கள் இந்த படத்தை தாங்கி பிடிப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தீவிரமான பிரச்னைகளைக் கையாள்வதற்கான கதைக்களங்களை கொண்ட படங்களுக்கு இடையே நகைச்சுவை உணர்வு கொண்ட படங்கள் ரட்சகரின் உணர்வை தருகின்றன. ஆனால், அப்படங்களின் வெற்றி என்பது பார்வையாளர்களிடையே சிரிப்பை வரவழைக்கும் அளவை பொறுத்தது. அறிவற்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தாலும் முற்றிலும் கவனத்தை ஈர்க்கிறது. கதையை விட, தனது அசாத்தியமான டயலாக் டெலிவரி மற்றும் உடல்மொழி போன்றவை மூலம் சிவா ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் சில நிஜ மோதல்களையும், சில வேடிக்கையான தருணங்களையும் இணைத்திருந்தால், படம் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கும். மேலும், தாக்கத்தை ஏற்படுத்த படத்தின் கிளைமேக்ஸ் தவறிவிட்டது” என்றும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்போன் சிம்ரனும் திரைப்படத்திற்கு மேலும் மெனக்கெட்டு இருக்கலாம் என்று 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சமீப காலங்களில் நடிகர் சிவாவின் சிறந்த முடிவுகளில் ஒன்றாக இப்படம் இருந்தாலும், அவரது பலத்திற்கு திரைப்படம் நியாயம் செய்யவில்லை. ஐபோன் ஸ்ரியும் அயனாவரம் ரவியும் என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் ஷா உருவாக்கியுள்ள போதிலும், லவ் டுடே போன்று இப்படம் வெற்றிகரமாக அமையவில்லை” என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: