மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

    • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
    • பதவி, பிபிசி தெலுகுக்காக

மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்க்கும் முதலீட்டு வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது நல்லதா, பாதுகாப்பானதா என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது.

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI) மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது . 1995 இல் லாப நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்ட இந்த சங்கம் முதலீட்டாளர்களின் நலனுக்காக நடத்தப்படுகிறது.

மேலும், இந்த அமைப்பு செபி (SEBI) மற்றும் இந்திய அரசாங்கத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் குரலை ஒலிக்கச் செய்யவும் செயல்படுகிறது.

பல்வேறு நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்படுகிறார்கள், இது நெறிமுறை மதிப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகக் கூறுகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விரிவான ஆய்வுக்குத் தேவையான தகவல்கள் அதன் இணையதளத்தில் கிடைக்கின்றன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பிரபல வங்கிகளும் ஆதித்யா பிர்லா, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனங்களும் இந்த சங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளன.

அனைவரின் பிரதிநிதித்துவம் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனம் வழங்கும் தகவல்களை நம்புகின்றனர்.

முதலீட்டாளர்களுக்கு பலன்கள்

மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து இந்த சங்கம் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்:

1.மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி)

மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன, எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பது குறித்த தகவல்கள் இந்த சங்கத்தின் இணையதளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், NAV மற்றும் செலவு விகிதம் போன்ற குறிகாட்டிகளின் பொருள் என்ன மற்றும் எந்த சூழலில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த தவறான கருத்துகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2. மியூச்சுவல் ஃபண்டுகளின் பரிவர்த்தனைகள்

பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்வது எப்படி, செய்த முதலீட்டை திரும்பப் பெறுவது எப்படி என விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இவை முதலீட்டாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய உதவுகின்றன.

3. வெளிப்படைத்தன்மை

இந்த சங்கத்தின் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதாகும். பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளின் திட்ட விவரங்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விவரங்களும் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்வது ஏன் நல்லது மற்றும் இந்த முதலீட்டு பாதையின் ஆபத்துகள் என்ன என்பதை விளக்குகிறது.

இவை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், எந்த குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை முதலீட்டாளர்களிடம் கூறுவதில்லை.

ஒவ்வொரு நிதியின் செயல்திறனையும் தெரிவிக்க தேவையான தரவு இந்த சங்கத்தின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

AMFI தரவு மூலம் முதலீட்டு முடிவுகளை எடுப்பது எப்படிஎப்படி?

உண்மையில், தரவுகளின் அடிப்படையில் இந்த சங்கம் வழங்கும் விவரங்கள் ஒரு பெரிய களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. இப்போது இந்த அசோசியேஷன் இணையதளத்தில் உள்ள தரவு அடிப்படையிலான குறிகாட்டிகள் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்

1. மாதாந்திர, காலாண்டு விவரங்கள்

இந்த சங்கத்தின் இணையதளம் ஒவ்வொரு மாதமும் காலாண்டும் மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பாக ஏற்படும் மாற்றங்களின் விவரங்களை வழங்குகிறது. அந்த மாதம் அல்லது காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இங்கே காணலாம்.

2. மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு (AUM)

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் சந்தையில் முதலீடு செய்யப்படும் மொத்த மதிப்பு, நிதியின் செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான குறிகாட்டியாகும். இந்தச் சங்கத்தின் இணையதளத்திலும் விவரங்களை எளிதாகப் பெறலாம்.

3. மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறன்

மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறன் தொடர்பான மதிப்புமிக்க தகவல்கள் சங்கத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறனை ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவதற்கு இத்தகைய தகவல்கள் முக்கியமானவை. உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்ப்போம். இந்த அட்டவணை அச்சங்கத்தின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த அட்டவணையை கவனமாகப் பார்ப்பது, அந்தந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்திறன் பற்றிய முக்கிய விவரங்களை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள உதவும்.

முதலாவதாக, திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. மேலும், இத்திட்டம் கடந்த ஆண்டு, மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் மற்றும் பத்து ஆண்டுகளில் எவ்வளவு வளர்ந்துள்ளது என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், திட்டத்தின் செயல்திறன் ஒப்பிடப்படும் அளவுகோலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்தத் தரவு நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தப் புரிதல் மிக முக்கியமான விஷயம்.

இப்போது இந்தத் திட்டத்தின் செயல்திறனைக் குறிக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்புடன் இணைக்கப்பட்டால், எந்தத் திட்டம் மிகவும் பிரபலமானது என்பது தெரியவரும்.

வருமானத்தை எப்படி ஒப்பிடுவது?

இந்தச் சங்கம் அவர்களின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தரவு மற்றும் பிற தகவல்களை எவ்வாறு தொகுப்பது என்பதை இப்போது பார்க்கலாம்

1. மற்ற முதலீட்டு வழிகளில் கிடைக்கும் வருடாந்திர வட்டி, மியூச்சுவல் ஃபண்டுகளால் கிடைக்கும் வருமானத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

இதை அறிய, AMFI இணையதளத்தில் வழங்கிய 'பெஞ்ச்மார்க்' திட்டத்தின் செயல்திறனை மற்ற முதலீட்டு வழிகள் மூலம் ஈட்டப்படும் வட்டியுடன் ஒப்பிட வேண்டும்.

2. நமது நிதி இலக்குகளை அடைய நாம் எவ்வளவு 'ரிஸ்க்' எடுக்கலாம்?

ஆபத்தைப் புரிந்து கொள்ள, ரிஸ்க்மீட்டர் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பல்வேறு வகைகளில் செயல்திறனை ஒருவர் பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, 'அதிக ரிஸ்க்' திட்டங்களுக்கும் 'நடுத்தர ரிஸ்க்' திட்டங்களுக்கும் இடையிலான செயல்திறனில் உள்ள வேறுபாட்டைக் காண வேண்டும். இந்த வேறுபாடு அதிகமாக இருந்தால், அதிக ரிஸ்க் திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது நல்ல ஆலோசனை. இந்த இரண்டு வகை திட்டங்களின் பெஞ்ச்மார்க் செயல்திறன் ஒரே மாதிரியாக இருந்தால், அதிக ரிஸ்க் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் எந்தப் பயனும் இல்லை.

3. ஒரே ரிஸ்க் பிரிவில் உள்ள இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்பதை எப்படி அறிவது?

இரண்டு திட்டங்களின் வருமானங்களும் வெவ்வேறு காலக்கெடுவில் ஆராயப்பட வேண்டும். விவரங்கள் மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ளன.

4. நிதி இலக்குகளை பூர்த்தி செய்வது எப்படி?

நமது நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய பொருத்தமான போர்ட்ஃபோலியோவை உருவாக்க, திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், திட்டத்தின் மதிப்பு, நீண்டகால செயல்திறன் மற்றும் முதலீடு செய்யப்படும் துறைகள் ஆகியவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் AMFI இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)