பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது மீ டூ சம்பவம்: ஆர்ஜே ப்ராவோவுக்கு என்ன நடந்தது?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பேசும் கருத்துகள் மற்றும் அவர்கள் நடந்துகொள்ளும் முறை, சக போட்டியாளர்களால் நடத்தப்படும் முறை என அனைத்தும் சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 54வது நாளில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்ஜே ப்ராவோ பகிர்ந்துகொண்ட அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

அவர் என்ன பேசினார்? அதற்கு சக போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினர்? அவர் பேசியது சமூக ஊடகங்களில் என்ன மாதிரியான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பார்க்கலாம்...

என்ன கூறினார் ஆர்ஜே ப்ராவோ?

பிக் பாஸ் சீசன் 7இல் சமீபத்தில் “உங்கள் வாழ்க்கையின் பூகம்பம்” என்ற ஒரு டாஸ்க் பிக்பாஸ் வீட்டினருக்குத் தரப்பட்டது. அதில் அவர்களது வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு குறித்து இங்கு சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்படி ஒவ்வொருவராகத் தங்களது வாழ்வை உலுக்கிய சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டபோது ஆர்ஜே ப்ராவோ பகிர்ந்து கொண்ட தகவல் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ஜே ப்ராவோ பூகம்பம் டாஸ்க்கில் கூறுகையில், “எனது அப்பாதான் பொழுதுபோக்குத் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்தார். அவர் இறந்த பின்பு அவரது கனவை நிறைவேற்ற நினைத்தேன். அதற்கான வாய்ப்புகளை நான் தேடிக்கொண்டிருந்த போது ஒருவர் என்னை வைத்து ஒரு பெரிய விளம்பரப் படம் எடுப்பதாகக் கூறினார்.

அவர் கூறியதை நம்பி அவரைச் சந்திக்க நான் அவர் வரச் சொன்ன ஓட்டலுக்கு போனேன். அப்போது அந்த ஓட்டல் அறையில் நான் உள்ளே சென்றவுடன் அவர் கதவை மூடி என்னிடம் வந்து என் ஆடைகளைக் கிழிக்க ஆரம்பித்தார்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் என் கையை பிராண்டினார். அங்கு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரியான செய்திகளைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அது எனக்கே நடக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு வாய்ப்பிற்காக இப்படியொரு இடத்தில் வந்து நிற்கிறேனே என்று வெறுப்பாக இருந்தது. என்னால் அந்தச் சம்பவத்தில் இருந்து மீண்டே வர முடியவில்லை. இந்தச் சம்பவம் என் மனதில் விழுந்த ஒரு கீறல்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சக ஆண்களோடு லிஃப்டில் செல்லக்கூட எனக்குப் பயமாக இருந்தது. இப்போதும் உள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் நான் துபாய் சென்றுவிட்டேன்,” என ஆர்ஜே ப்ராவோ தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் என்ன விவாதிக்கப்படுகிறது?

ஆர்ஜே ப்ராவோ தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய காணொளியை X சமூக வலைதளத்தில் பலர் பகிர்ந்துள்ளனர். பலர் ஆர்ஜே ப்ராவோவிற்கு ஆதரவளிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்‌ஷய் என்னும் பயனர் தனது பதிவில், “ஒரு ஆணால் ஆர்ஜே ப்ராவோவிற்கு இப்படி பாலியல் அத்துமீறல் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்துஜா ரகுநாதன் என்ற பயனர், “பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு மட்டும் நடப்பதில்லை. பல ஆண்களுக்கும் நடக்கிறது. பல ஆண்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன் ஆர்ஜே ப்ராவோ. உங்களது கனவுகளை நனவாக்குவதற்கான வலிமை உங்களுக்குக் கிடைக்கட்டும்,” எனத் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே ப்ராவோ கூறியதைக் கேட்டு கூல் சுரேஷ் சிரித்தாரா?

அதே நேரம், ஆர்ஜே ப்ராவோ இந்தச் சமபவத்தைக் கூறும்போது சக போட்டியாளர்கள் எதிரே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவர் இந்தச் சம்பவத்தைச் சொல்லி முடித்து விட்டுச் சென்று அமரும்போது நிக்சனும் கூல் சுரேஷும் சிரித்ததாக சக போட்டியாளரான மாயா குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, நிக்சன் மற்றும் கூல் சுரேஷிடம் மாயா கேள்வி எழுப்பினார். மாயாவிடம் பேசிய நிக்சன், தான் சிரிக்கவில்லை என்றும் கூல் சுரேஷ்தான் சிரித்தார் என்றும் கூறினார். ப்ராவோ பேசியதற்கு அவர் சிரித்ததையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது எனத் தெரிவித்தார்.

இது பற்றி மாயா, கூல் சுரேஷிடம் கேட்டபோது, நிக்சன்தான் சிரிப்பு காண்பித்தான். அதனால்தான் சிரித்தேன் எனத் தெரிவித்தார்.

மற்றொரு சக போட்டியாளரான நடிகை விசித்திரா கூறுகையில், “ஆர்ஜே ப்ராவோவுக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டபோது எனக்குக் கோபமாக வந்தது. இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது. எனது மகன்களிடம் யாராவது இப்படி அத்துமீறினால் கொன்றுவிடுவேன்,” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)