You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல்'- பல் மருத்துவ உலகில் ஏற்படப் போகும் மாற்றம் என்ன?
- எழுதியவர், லியாம் பார்ன்ஸ்
- பதவி, பிபிசி
பல் எனாமலை (Tooth Enamel) சீர்செய்து மீண்டும் உருவாக்க உதவும் ஒரு புதிய ஜெல், பல் சிகிச்சையில் 'புதிய வாய்ப்புகளை' உருவாக்கக்கூடும் என்று அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி மற்றும் ரசாயன மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை வல்லுநர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எனாமலை பலப்படுத்தவும், பல் சொத்தையை தடுக்கவும் பணியாற்றி வருகின்றனர்.
பச்சிளங் குழந்தைகளில் எனாமல் எப்படி உருவாகிறதோ, அதே வழியைப் பின்பற்றி இந்த புரதம் அடிப்படையிலான பொருள் செயல்படுகிறது என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இது உமிழ்நீரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் அயனிகளுக்கு ஒரு 'அடித்தளமாக' செயல்படுகிறது.
இந்த ஆராய்ச்சியின் முழு முடிவுகளும் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' (Nature Communications) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 3.7 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் எனாமல் சிதைவு ஒரு முக்கிய காரணியாகும்.
எனாமல் சிதைவின் விளைவாக ஏற்படக்கூடிய பிரச்னைகளில் தொற்று, அதிக உணர்திறன் மற்றும் பல் இழப்பு ஆகியவை அடங்கும். இவை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற மிகவும் தீவிரமான உடல்நலப் பிரச்னைகளுடன் இணைக்கப்படலாம்.
ஃப்ளோரைடு பூச்சுகள் போன்ற தற்போதைய சிகிச்சைகள் அறிகுறிகளைப் போக்கினாலும், எனாமல் இயற்கையாகவே மீண்டும் உருவாவது இல்லை.
இந்த புதிய பொருளை "எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்த முடியும்" என ஆய்வுக்குத் தலைமை தாங்கிய உயிரி மருத்துவப் பொறியியல் மற்றும் உயிர் பொருட்கள் பிரிவின் தலைவரான பேராசிரியர் ஆல்வரோ மாதா தெரிவித்தார்.
"மருத்துவர் மற்றும் நோயாளியைக் கருத்தில் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம்," என்று அவர் கூறினார்.
"அடுத்த ஆண்டுக்குள் முதல் தயாரிப்பை வெளியிட முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த கண்டுபிடிப்பு விரைவில் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு உதவக்கூடும்."
"பற்களைச் சரிசெய்ய இயற்கையான எனாமலை மீண்டும் உருவாக்குவது பல் பொருள் விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகளாக எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு அற்புதமான திருப்புமுனை ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது" என ஷெஃபீல்ட் பல்கலைகழகத்தின் பல் மருத்துவப் பள்ளியின் உயிர் பொருட்கள் அறிவியல் பேராசிரியரும், பிரிட்டிஷ் பல் மருத்துவ சங்கத்தின் சுகாதாரம் மற்றும் அறிவியல் குழு உறுப்பினருமான பால் ஹட்டன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு