You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என மனைவியை கொன்றதாக கணவர் மீது வழக்கு - இன்றைய முக்கிய செய்திகள்
21/02/2025 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
சென்னை திருமுல்லைவாயில் அருகே சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என்று மனைவியை கொலை செய்ததாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"திருமுல்லைவாயில் அருகே கமலா நகர் எனும் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (75). அவருடைய மனைவி தனலட்சுமி (65), மகன்கள் கணபதி மற்றும் மணிகண்டன்.
விநாயகம் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சை ஒன்றால் காலை இழந்த அவர், தொடர்ச்சியாக சரியான நேரத்தில் தனக்கு உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய மனைவி தனலட்சுமியிடம் கூறியுள்ளார். புதன்கிழமை அன்று தனலட்சுமிக்கும் உடல்நிலை சரியில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என்று விநாயகம் தனலட்சுமியுடன் சண்டையிட, ஆத்திரமடைந்த விநாயகம் தனலட்சுமியை கத்தியால் தாக்கியதாகவும் இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
மேலும், "மனைவியை தாக்கிய விநாயகமும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
விபரம் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விநாயகத்துக்கும் அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத் தலைவராக இமையம் நியமனம்
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுகுறித்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
"இந்த ஆணையத்தின் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. எனவே, ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் (வெ.அண்ணாமலை) நியமிக்கப்பட்டுள்ளாா். உறுப்பினா்களாக செ.செல்வகுமாா் (கோவை), சு.ஆனந்தராஜா (தஞ்சாவூா்), மு.பொன்தோஸ் (நீலகிரி), பொ.இளஞ்செழியன் (திருநெல்வேலி) ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஆணையத்தின் தலைவராக ஏற்கெனவே ஓய்வு பெற்ற நீதிபதி ச. தமிழ்வாணன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜே. ரேக பிரியதர்ஷணி உறுப்பினராகவும் இந்த குழுவில் பணியாற்றி வருகிறார்" என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500: டெல்லி முதலமைச்சர்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோதி முன்னிலையில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். அடுத்த மாதம் 8-ம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் டெல்லியின் 9-வது முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய ரேகா குப்தா, "பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் 8-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்படும்," என்று தெரிவித்தார் என அச்செய்தி கூறுகிறது.
இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்
'எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு புகார் விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டு ரூ. 290 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது.
எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
"இந்த நாவல் கதையை திருடித்தான் ஷங்கர் 'எந்திரன்' படத்தை இயக்கி உள்ளார். எனவே காப்புரிமை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்ததாக அச்செய்தி கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை. "விசாரணையில் 'எந்திரன்' திரைப்படத்தின் பணிகளுக்காக ஷங்கர் ரூ. 11.50 கோடி சம்பளம் பெற்றிருப்பது தெரிய வந்தது. எந்திரன் மற்றும் ஆரூர் தமிழ்நாடன் புத்தகமான ஜூகிபாவை ஒப்பிட்டு ஆய்வு செய்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்திரன் திரைப்படம் ஜூகிபா நாவலை தழுவி எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறி இருப்பதால் அவருக்கு சொந்தமான ரூ. 10.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் காவல்துறையினர், முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - இராமலிங்கம் சந்திரசேகர்
யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்,அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிருப்புகளை நிர்மாணித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார் என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வியாழக்கிழமை (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது.
அச்செய்தியில், "பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ' யாழ் - வலி.வடக்கில் 2009 ஆண்டு காவல்துறையினர் மற்றும் முப்படையினர் வசம் 23 ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன.
இதன் பிரகாரம் 21 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2640 ஏக்கர் காவல்துறையினர் மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டுமென கோரினார்.
அத்துடன் வலி.வடக்கில் அண்மைக்காலத்தில் விடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு குடியிருப்பு இல்லையென்ற காரணம் சொல்லப்படுகின்றது. எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டிக்கொள்ள அனுமதிக்க முன் வர வேண்டும்
அத்துடன் பலாலி - வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்தொழில் அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட ராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டனர்" என அச்செய்தி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)