டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.

"கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண முடிந்தது.

இதற்கிடையே இத்தகைய படங்களுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. "தவறுகளில் இருந்து பாடம் கற்பதைத்தானே காட்டுகிறார்கள், திரைப்படம் வெளியாகாமல் டிரெய்லரை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டாம்" என்பது போன்ற கருத்துகளையும் காண முடிந்தது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை (பிப்ரவரி 21) வெளியாகவுள்ளது.

மாணவர்கள் மீதான உளவியல் தாக்கம்

மின்னலே, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், டான், போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பிரேமம், வாழா, ஒரு வடக்கன் செல்ஃபி போன்ற மலையாளப் படங்கள் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. கதைகள் வெவ்வேறு என்றாலும், அதன் கதாநாயகர்கள் அல்லது முன்னணி கதாபாத்திரங்கள் பல அரியர்கள் வைத்திருப்பார்கள்.

ஆனால், அதைப் பற்றி ஒரு அலட்சிய மனோபாவம் அவர்களிடம் இருப்பது போலவும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் அதை மொத்தமாக எழுதி முடித்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில்/பணியில் வெற்றி பெறுவது போலவும் காட்சிகள் இருக்கும்.

"திரைப்படம் வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னாலும், இத்தகைய படங்கள் மாணவர்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்பொரு கட்டத்தில் வில்லனாக காட்டப்பட்ட கதாபாத்திர வடிவமைப்புகள், இன்று கதாநாயகர்களாக வடிவமைக்கப்படுவதன் தொடர்ச்சியாக இந்த கதாபாத்திரங்களைப் பார்க்க முடிகிறது என்கிறார் அவர்.

ஜா.தீபாவின் கூற்றுக்கு உதாரணமாக 1994இல், கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'நம்மவர்' திரைப்படத்தைக் கூறலாம். அதில் கல்லூரி மாணவராக வரும் ரமேஷ் (நடிகர் கரண்) கதாபாத்திரம்தான் வில்லன். தனது தந்தையின் கல்லூரி என்பதால், அவர் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார், வகுப்புகளைப் புறக்கணிப்பார், பேராசிரியர்களை அலட்சியமாகக் கையாள்வார், வன்முறையில் ஈடுபடுவார். அவரைப் பின்தொடரும் ஒரு மாணவர் குழுவும் இருக்கும்.

அதே கல்லூரிக்கு பேராசிரியராக வரும் வி.சி.செல்வம் (கமல்ஹாசன்) ரமேஷையும் அவரது நண்பர்களையும் பகைத்துக் கொண்டு, கல்லூரியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார்.

"நாயகன் Rugged boy அல்லது எதையும் அலட்சியமாகக் கையாள்பவன் என்பதைக் காட்ட இத்தகைய கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள். அவன் நாயகன் என்பதால் எப்படியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்றும் காட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லையே.

இதைப் பார்க்கும் ஒரு மாணவன், கல்லூரியில் அரியர் வைத்தால், குடித்தால் அது சாதாரணமான ஒன்று அல்லது அதுதான் 'கெத்து' என நினைக்கலாம். அவ்வாறு இல்லாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நினைக்கும் மாணவர்கள் கேலிக்கு ஆளாகவும் இத்தகைய 'நாயக பிம்பங்கள்' காரணமாகின்றன" என்கிறார் ஜா.தீபா.

'இயக்குநர்களின் சொந்த அனுபவங்கள்'

ஆனால், 'இத்தகைய கதாபாத்திரங்களை தவறான நோக்கத்தில் எழுதுவதில்லை என்றும், கதைசொல்லி என்ற முறையில் தங்களது சொந்த அனுபவத்தையே இயக்குநர்கள் திரையில் கொண்டு வருவதாக' கூறுகிறார் துணை இயக்குநர் பாலசுப்ரமணியம்.

கோப்ரா, டிமான்டி காலனி 2 போன்ற படங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது நடிகர் அஜித்குமாரின் 'குட், பேட், அக்லி' படத்தில் பணியாற்றி வருகிறார்.

"தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்ற ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையே சொந்த அனுபவத்திலிருந்து காட்ட விரும்புகிறார்கள். நாயகனுக்கு சில மோசமான குணங்கள் இருப்பதாகக் காட்டி, பின்னர் அவன் திருந்துவது என்பது திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்ற இயக்குநர்கள் பயன்படுத்தும் உத்தி" என்கிறார் அவர்.

ஆனால், சொந்த அனுபவமோ அல்லது வாழ்க்கையில் பார்த்த நபர்களோ, அத்தகைய கதாபாத்திரங்கள் படங்களில் இடம்பெறுவது பிரச்னையல்ல, நாயகர்களாக முன்னிறுத்தப்படுவதுதான் பிரச்னை என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.

"கல்விதான் முக்கியம் எனப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டதால்தான், ஒரு சமூகமாகப் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். அதை எடுத்துக்கூறும் படங்கள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகம் வெளியாகின்றன. அப்படியிருக்க '30, 40 அரியர்கள் வைப்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை' என நாயகன் வசனம் பேசுவது ஆபத்தானது."

"வெறும் பொழுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என ஒரு இயக்குநர் சொல்ல முடியாது. ஒரு படைப்பாளிக்கு சமகால அரசியல் குறித்த புரிதலும், சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்" என்கிறார் ஜா.தீபா.

'எது கெத்து என்ற குழப்பம்'

"கல்லூரியில் இப்படி இருந்தால்தான் 'கெத்து' என்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், திரைப்படங்களைப் பார்த்தே பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தேன். ஆனால் கல்லூரிக்குச் சென்ற பிறகு, திரையில் பார்த்த எதுவும் அங்கு நடக்கவில்லை. எது கெத்து என்ற குழப்பமே ஏற்பட்டது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

தனக்கு 15 அரியர்கள் இருந்ததாகவும், அவற்றை எழுதி முடிக்கக் கூடுதலாக 2 ஆண்டுகளும், சிறப்பு வகுப்புகளும் தேவைப்பட்டது என்றும் கூறுகிறார் அவர்.

"அரியர் வைக்காவிட்டால், சில பழக்கங்கள் இல்லாவிட்டால் 'பழம்' என முத்திரை குத்தி விடுவார்கள். எனவே எனக்கு அரியர்கள் இருந்தது குறித்து நான் முதலில் கவலைப்படவில்லை. பின்னர், அந்த 15 அரியர்களை முடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதைவிட கஷ்டம் வேலைக்காக அலைந்ததுதான்."

"ஏன் இத்தனை அரியர்கள் வைத்தீர்கள் என எல்லா நேர்காணல்களிலும் கேட்டார்கள். ஒருவழியாக துபையில் ஒரு நிறுவனத்தில், உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் எனக்கு வேலை கிடைத்தது. வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு 8 வருட காலமாக இங்கு வேலை செய்கிறேன்" என்கிறார் மகேஷ்.

சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள்

"எந்த அரியர்களும் இல்லாத ஒருவருக்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் குறைவான சம்பளமே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், 'அரியர் வைப்பது பெருமை' எனப் பேசி படம் எடுக்கிறார்கள்" என்று 'டிராகன்' படத்தின் டிரெய்லரை குறிப்பிட்டு ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

"சமூகத்தைச் சீரழிக்கும் படம் எனச் சொல்வார்களே, உண்மையில் இதுதான் அப்படிப்பட்ட படம். இந்தப் படத்தில் வருவது போல 48 அரியர்கள் வைக்கும் ஒருவன் நிச்சயமாகப் பல சிக்கல்களை எதிர்கொள்வான். இதைப் பார்க்கும் ஒருவர் அந்த நாயகனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால், அவ்வளவுதான்" என்று பெண் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

"எங்கள் கல்லூரியில் குறிப்பிட்ட அரியர்களுக்கு மேல் வைத்தால் அல்லது இந்த நாயகனைப் போல பிரச்னை செய்தால், உடனடியாக டிஸ்மிஸ் செய்துவிடுவார்கள். இத்தகைய படங்கள் தவறான கருத்துகளைப் பரப்புகின்றன" என்று ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வெள்ளியங்கிரி பிபிசி தமிழிடம் பேசியபோது, "அரியர் வைப்பது ஒன்றும் மிகப்பெரிய தவறு கிடையாது. அரியர் வைப்பவர்கள் முட்டாள்களும் அல்ல. கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் பெற்றோர் வற்புறுத்தலால், ஒரு படிப்பைத் தேர்வு செய்கிறார்கள். ஓரிரு செமஸ்டர்களுக்கு பிறகுதான் ஒரு நிலைக்கு வருகிறார்கள் அல்லது இந்தப் படிப்பு வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்" என்றார்.

ஆனால் பிரச்னை "அரியர் வைப்பது அல்லது வகுப்புகளைப் புறக்கணிப்பது 'கெத்து' என்று மாணவர்கள் நினைக்கும்போதுதான் தொடங்குகிறது" என்கிறார் அவர்.

மறுபுறம், படைப்பாற்றல் இருப்பவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியாது என்ற எண்ணத்தையும் சில திரைப்படங்கள் விதைப்பதாகக் கூறுகிறார்.

"உதாரணமாக நன்றாகக் கதை எழுதுபவர், ஓவியம் வரைபவர் அல்லது நடிப்பவர், படிப்பில் கவனம் செலுத்தமாட்டார் என்ற எண்ணம் உள்ளது. அதுவும் தவறு. திரையில் நாயகன் 40 பேரை அடிப்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வது போல, இதையும் மாணவர்கள் உணர வேண்டும்" என்றார்.

'இயக்குநர்களுக்கு இருக்கும் பயம்'

"ஒரு கட்டத்தில் பல திரைப்படங்களில் 'ராகிங்' (Ragging) என்பது நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சமூக புரிதலுக்குப் பிறகு அத்தகைய காட்சிகள் குறைந்தன. அப்படி ஒரு சமூகப் பொறுப்புணர்வு மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் கௌதம் ராஜ்.

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் திரைப்படங்களை இயக்கியவர் கௌதம் ராஜ்.

"இப்போதுள்ள தலைமுறையினருக்கு புத்திமதி கூறினால், கிரிஞ் (Cringe) அல்லது பூமர் என்று ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம் இயக்குநர்களிடையே உள்ளது. எனவே டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எடுக்கிறேன் என சில விஷயங்களை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு போதைப் பழக்கத்தை மிகவும் சாதாரணமான ஒன்றாகக் காட்டுவது. அதன் தொடர்ச்சிதான் இதுவும்" என்கிறார் அவர்.

ஒரு படைப்பு ஒரு தனிமனிதரைப் பாதித்தால், அதில் படைப்பாளிக்கும் பங்கு உள்ளது எனக் கூறும் இயக்குநர் கௌதம் ராஜ், "ஒரு திரைப்படம் முழுவதும் பெண்களைத் திட்டி அல்லது ஆபாசமாகச் சித்தரிப்பது போல பாடல்கள், காட்சிகளை வைத்துவிட்டு, இறுதியில் 'பெண்கள் நம் கண்கள்' என வசனம் பேசுவதால் பயனில்லை என்பதைப் போலவே இதுவும். எனவே கிளைமாக்ஸில் என்ன சொல்கிறோம் என்பதில் இருக்கும் பொறுப்பும், நேர்மையும் படம் முழுவதும் இருந்தால் நல்லது," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)